சப்தமில்லாச் சென்னை!!

 


நிச்சயம் ஒரு கனவுதான். தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கும் வாகனங்களின் அழைப்பொலிகள், சப்தமில்லாத ஒரு நகரத்தை உங்களால் கற்பனை செய்யக்கூட அனுமதிக்கப் போவதில்லை. சென்னை, ஹாரன் ஒலிகளால் சூழப்பட்ட ஒரு நகரம் என்பதில் சந்தேகமில்லை. பல்வேறு விதமான ஒலிகளை எழுப்பியபடி நகரத்தின் இண்டு இடுக்களிலும் பறந்து கொண்டிருக்கிற இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்துவிட்டு இந்த நகரத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது. நான்கு சக்கர வாகனங்களும் விதிவிலக்கல்ல, தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஹாங் செய்தபடி செல்வதை, பெரும்பாலோர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

 

இது எத்தகைய மனோநிலை, ஏன் இப்படிச் செய்கிறார்கள் என்று கேட்டபோது கிடைத்த பதில்களில் ஒன்று, மன உளைச்சல் தீருவதற்காக என்பதாக இருந்தது. இந்தியர்கள் தனது மன அழுத்தத்தை ஹாங் பண்ணுவதன் மூலம் குறைத்துக் கொள்கிறார்கள் என்பது உலகத்துக்கு ஒரு ஆச்சர்யமான செய்திதான்.  இந்தியச் சாலைகள் வாகங்களுக்காக மட்டுமல்ல அது பாதசாரிகளுக்கும், நடைபயிலுபவர்களுக்கும், விளையாடும் குழந்தைகளுக்குமானது, எனவே விபத்தைத் தவிர்க்க ஹாங்அவசியம் என்கிறது மற்றொரு தரப்பு.ஹாரன் என்பது ஒரு அனுபவம் என்று இளைஞர்கள் சொல்லக்கூடும், அதற்குக் கட்டுப்பாடு என்பது அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கக்கூடும், ஆனால் அது மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் உடல்நலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு ஆகியவற்றை கருத்தில்கொண்டு காவல்துறை மற்றும் சமூக நலத்துறைகள் மக்களிடம் சரியான விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சிக்கலாம்.

 ஏர்ஹாரன் தடைசெய்யப்பட்ட ஒன்று, என்றபோதும், லாரிகள் மற்றும் நெடுந்தூரம் பிரயாணம் செய்யும் பேருந்துகள் போன்றவை விதம்விதமான ஹாங் ஒலியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்ய இயலவில்லை என்பதே உண்மை. 

        2018ல் எடுக்கப்பட்ட கள ஆய்வில் அதிக சப்தம் ஏற்படுத்துகிற நகரங்களில் முதலிடம் சென்னைக்குக் கிடைத்திருக்கிறது. 55dB என்பது அனுமதிக்கப்பட்ட ஒலி அளவாக இருக்க, சென்னையின் பகல் நேர ஒலி அளவு 67.8 dB என்று ஆய்வு முடிவுகள் சொன்னது. டெல்லி 61.0 dB என்று இரண்டாமிடத்தில் இருக்கிறது. சட்டங்கள் இல்லாமலில்லை, சட்டம் 5(A)1/2000 அமைதிப்பகுதி என்றழைக்கப்படுகிற மருத்துவமனைகள், பள்ளிகள், ஆலயங்கள், நீதிமன்றம் போன்ற இடங்களில் ஹாங்’ செய்வதை பகலிலும், இரவிலும் குற்றம் என்கிறது. ஓட்டுனர்கள், தனக்கோ, பாதாசாரிக்கோ ஏதேனும் ஆபத்து வரும் என்கிற சூழ்நிலையில் மட்டுமே ஹாங்’ செய்யலாம் என்று மோட்டார் வாகனச் சட்டம் 23/2017 சொல்கிறது. ரூபாய் 1000த்திலிருந்து 5 வருட சிறை வரை நீள்கிறது தண்டனை.

இந்தியாவில் சண்டிகரில் ஹாங் செய்பவர்களுக்கான உடனடி அபராதம் ரூ.1000/- என்று வரையறை செய்யப்பட்டது, 2018ல்.  அதன் தற்போதைய நிலவரம் தெரியவில்லை. நாக்பூரின் ஒரு அடுக்ககத்தின் 11வது மாடியில் ப்ராணாயாமா செய்துகொண்டிருந்த தற்போதைய போக்குவரத்து அமைச்சருக்கு, இந்த ஹாங்’ சப்த்தத்தால் அமைதி குலைய, இந்த சப்தங்களை இனிமையான வாத்தியங்களின் சப்தங்களாக மாற்றிவிட்டால் என்ன என்று தோன்ற அதை மீடியாக்களிடமே தெரிவித்திருக்கிறார். வாகன தயாரிப்பு நிறுவனங்களை சரியான ஹாரன் களைப் பொருத்துமாறு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். கூடவே ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு ஆகாசவாணியின் தொடக்கத்தில் வரும் இசையைப் பயன்படுத்தினால் என்ன என்று ஒரு யோசனையையும் தெரிவித்திருக்கிறார், அதற்கான சட்டங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.


மும்பையில் சிக்னலில் காத்திருக்கும்போது ஹாங் செய்தால் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்கு மாறும் நேரம் அதிகரிக்குமாறு செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். கேரளத்தில் ஒலி அளப்பான் பயன்படுத்தப்பட்டு, அதன்படி அபராதம் விதிக்கப்படுகிறது. நோ ஹார்ன் ஸோன்’ என்று அறிவிக்கப்பட்ட, ஏர்ணாகுளம் எம்.ஜி.ரோட் இன்றுவரை அப்படி மாறவில்லை  என்பது கூடுதல் செய்தி.

இந்திய மோட்டர்வாகனங்களின் அனுமதிக்கப்பட்ட ஒலி அளவு 98dB யிலிருந்து 112dB வரை இது கிடைமட்டமாக 7.5மீட்டர் தூரமும், 0.5 லிருந்து 1.5 மீட்டர்கள் வரை உயரத்திலும் கேட்கும் வகையிலாக வரையறுக்கப்பட்டது. அதை 100dB யாகக் குறைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மல்டி டோன் ஹார்ன்’ என்றழைக்கப்படும் பலவித ஒலிகளை உள்ளடக்கிய ஹார்ன் கள் 140dB வரை ஆற்றல்கொண்டவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


உலக சுகாதர நிறுவனத்தின் தரவுகள், தெற்கு ஆசியாவில்தான் அதிகமும் கேட்கும்திறன் குறைபாடு இருப்பதாகச் சொல்கிறது.இவையெல்லாம் அரசின் முயற்சிகள்தான், ஆனால் காவலர்களுக்கு ஹாங் ஒலி இரண்டாம்பட்சம்தான். சாலை விதிமீறல், தலைக்கவசம் அணியாமை (தற்போது முகக்கவசமும்) ஓட்டுனர் உரிமம், காப்பீட்டிற்கான பத்திரங்கள் என்று எவ்வளவோ. ஓட்டுநர்களாய்ப் புரிந்துகொண்டு சப்தமின்றிப் பயணிப்பதை ஒரு வழக்கமாக்கிக் கொண்டால் காதுக்கு நல்லது, நாட்டுக்கும் தான். 


சப்தமற்ற சென்னை எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே சாத்தியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!