வியாழன், 12 ஜூலை, 2012

கொஞ்சம் கவனமாய்த்தான் வாழவேண்டியிருக்கிறது, வாழ்க்கையை!


 அவரோடு பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்தபிறகு      

அவ்வளவாய்ப் பேசுவதில்லை இவர் என்னோடு,        

இதுவரை விலகியே இருந்த மற்றொருவர் இப்போது           

என் நெருக்கமான நண்பர், மற்றவர் நெருங்கியது              

தெரிந்ததும், அவர் கொஞ்சமாய் விலகிப்போனார்.               

அவர் விலகியதை அறிந்து இவர் மீண்டும்                

பேசத்துவங்கினார். பிறிதொருவர் இப்போது அவருக்கு          

நண்பரானார், இவரும் மற்றவரும் பேசிக்கொள்ளத்       

துவங்கிய நாளிலிருந்து, நான் இருவரோடும்                  

இப்பொது பேசுவதில்லை.

புதன், 11 ஜூலை, 2012

மனிதனை நோக்கிய மனுஷ்ய’னின் கேள்வி. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?


      மனுஷ்யபுத்திரன், ஞானி மாதந்தோறும் நடத்திவருகிற கேணி இலக்கிய அமர்வில் வாசித்த “ நாம் ஏன் இப்படி இருக்கிறோம்என்கிற கவிதையை நண்பர்.பத்ரி சேஷாத்ரியின் பதிவில் (http://www.badriseshadri.in/2012/07/blog-post.html) காணொளியாகக் காணநேர்ந்தபோது இனம்புரியாத ஒரு உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டேன். ஒரு நாளில் ஒரு மனிதனின் நித்தியப்படி கடமைகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனை சம்பவங்களையுமே கேள்விகளாக்கி, ஏன் இப்படி என்று கேட்பதன்மூலம் நம்மை நோக்கிய ஒரு சுயவிமர்சனத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறார். 

      நாம் என்னவெல்லாம் செய்யக்கிடக்க, உண்மையிலேயே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அறியவரும்போது, ஒரு திடுக்கிடலைத் தவிர்க்க முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே கவிதையைக்கேட்டேன், அதன் கூடவே பயணித்தேன், அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கிறேன். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றலாம். 

      பயண அவசரத்தில் பாதையின் குறுக்கே வந்துவிட்ட நாய்க்குட்டியை வண்டியேற்றிக் கொன்றுவிட்ட குற்றவுணர்ச்சி, அன்றைய நாளின் எல்லா வேலைகளையும் பாதித்து விடுகிறதுதானே. இங்கு நாய்க்குட்டியையல்ல ஒரு குழந்தையைக் கொன்றுவிடுகிறேன், ஆம் என்னுடைய நேரங்கள் என்னாலேயே சிதைக்கப்படும் அனுபவத்தை கவிதையில் கொடூரமாய் அனுபவிக்கிறேன்.

      சும்மா சில கேள்விகள், அவ்வளவுதான். என் ஒரு  
நாளில் செய்யும் அத்தனை சரியான என்று நான்         
நினைத்துக்கொண்டிருக்கிற,அல்லது தவறான, கேவலமான         
செயல்களும் கேள்விக்குட்படுகின்றன. இத்தனைக்கும் கவிஞனிடம்  
பயங்கரமான ஆயுதங்கள் எதுவுமில்லை, மிரட்டல்தொனியுமில்லை. 
தகவல் எதையும் கோரி நிற்கவோ, நான் இன்னார் கேட்கிறேன் 
என்கிற சுயவிளம்பரத் தம்பட்டமோ இல்லை. கவிஞன் அவனையும் 
உள்ளிட்ட ஒரு சமூகத்திற்கான கேள்விகளையே 
கேட்கநினைக்கிறான். ஆனால்அது எனக்கான பிரத்யேக 
கேள்விகளாகவே எனக்குப் படுகிறது. 

     எதிர்பார்ப்புகள் ஏதுமற்று ஒரு வழிப்போக்கனின் பாடலைப்   
போல,பாடல் ஒலிக்கிறது. ஒவ்வொரு வரிகளிலும் அன்றைய 
தினத்தின்  ஏதாவதொறு கணத்தில் நான் நிகழ்த்தியிருக்க, அல்லது 
என் மனது நிகழ்த்தியிருக்கச் சாத்தியமானதொரு செயலைக் குறித்த 
கேள்வியொடுங்கியிருக்கிறது. என்னில் என்னையுமறியாமல் 
நிகழ்ந்துவிடுகிற சில நல்லசெயல்கள் குறித்தும்கூட, நான் 
பெருமிதம்கொள்ள அவன் அனுமதிப்பதில்லை. 

    அதையும் அவன் கேள்விக்குட்படுத்தி மர்மச்சிரிப்புடன் 
தொடர்கிறான். இந்தக் கேள்விக்கான பதில்களைச் சேமிக்க எனக்கு 
அவகாசம் தரப்படவில்லை, கவிஞனுக்கு அது அவசியமுமில்லை. 
அவன் தொடர்ந்து கணைகளைவீசியபடி செல்கிறான். தெருவெங்கும் 
அவனுடைய கேள்விகள் இறைந்துகிடக்க, நான் செய்வதறியாது 
அமர்ந்திருக்கிறேன். யாருமறியாத என்னுடைய அந்தரங்கத்தில் 
நுழைந்து என்னைக் கேலிச்சிரிப்பொன்றில் அடக்கி, ஒரு 
யானையைப் போல் வெளியேறிச் செல்கிறான் அவன். 

     தாங்கமுடியாத அவமானம் என்னை அடங்கி ஒடுங்கச் 
செய்கிறது. கொடுங்காற்றில் பறந்துபோய்விட்ட ஆடைகளை 
இழந்தவெட்கத்தில் நான் என் அந்தரங்கத்தைக் கைகளால் 
மறைத்தவாறு, ஊர்ப் பொது முற்றத்தில் அமர்ந்திருக்கிறேன் 
அம்மணமாக. இதைவிட வேறு கொடிய தண்டனையை எனக்கு 
யாரும் தந்துவிட முடியாது.

மனுஷ்யபுத்திரன் குரலில் கவிதையைக் கேட்க,

செவ்வாய், 10 ஜூலை, 2012

சிக்மண்ட் ஃப்ராய்டும், செல்லுலாய்ட் அழகும்.

          நண்பன் ரஃபீக் அழைத்தது ஒரு தேவலோக விழாவை பைசா செலவில்லாமல் பார்க்க அனுமதிக்கும் அனுமதிச்சீட்டைத்தருவதற்காக. அந்த விழாவிற்கு ஃபிலிம்ஃபேர் விருது வழ்ங்கும் விழா என்று பெயர். கிடைத்த இரண்டு அனுமதிச் சீட்டில் மூன்று பேர் நுழைய எனக்குத்தெரிந்த அத்தனை வித்தைகளையும் பயன்படுத்தி ( அங்க ஒருத்தர் ஃபேமிலியோட நின்னு அழுதுக்கிட்டிருக்கார் பார்) உள்ளே போனபோது, சீட்டில் இருந்த பேரைப்படித்துவிட்டு ஒரு உதவியாள இளைஞன் ஆர் யூ வசண்ட்டபாலன்? என்றதற்கு ஒரு வினாடி புளகாங்கித்து, ஹி..ஹி.. ஐம் ஹிஸ் அசிஸ்டண்ட் என்று சமாளித்தேன்.
  
செல்லுலாய்ட் உலகம் பிரமிக்க வைக்கிறது. அதோ பாருங்க நமீதா, அட இங்க ப்ரியாமணிங்க, அய்யோ நம்ம முன் வரிசைல உக்கர்ந்திருக்கறது காவ்யாமாதவன், என்று ஏக ரகளை. விழாவை வேடிக்கை பார்க்க, பரிசு பெற, பரிசு தர என்றுவந்த மூன்றுவிதப் பெண்களும் சிலமணி நேரங்களை கண்ணாடிமுன் செலவு செய்து தங்கள் முகங்களையும் மற்ற அவயவங்களையும் தயார் செய்திருந்தது ஆண்களுக்கு கொஞ்சம் வெப்பமூட்டிக் கொண்டிருந்தது. அவர்களின் எப்போது அவிழ்ந்து விழுமோ என்று பயப்படுத்திக் கொண்டிருந்த ஆடை இதயத்துடிப்பின் கிராஃபை தாறுமாறாக வரைந்துகொண்டிருந்தது.

விழாவை பாடகர், இசையமைப்பாளர் கார்த்திக்கும், பாடகி சின்மயியும் தொகுக்க, பரிசை வழங்க வேறு வேறு கலைஞர்கள் மேடையேற ஆரவார அட்டகாசத்துக்குக் குறைவில்லை. -நயன்தாராவிடம் பிரபுதேவா எங்கே? விக்ரமைப் பேச விடாது தல ரசிகர்களின் கூச்சல்- என்று பயங்கர அலப்பரைகளுக்கு நடுவே, திடீரென்று தோன்றி அதே பாட்டுக்கு அதே நடனத்தை ஆடினார் தனுஷ். இடையில் எங்க ஏரியா உள்ளவராதே என்று எச்சரிக்கை வேறு.

எதிர்பார்த்த்துபோலவே ஆடுகளம் எல்லாப் பரிசுகளையும் வேண்டாமென்று சொல்லாமல் பெற்றுக்கொண்டது. அதைத் தொடர்ந்து வாகைசூடவா. வைரமுத்து போன்ற மூத்த கவிஞர்கள் மீண்டும் மீண்டும் வந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டு சிலவார்த்தைகள் பேசிவிட்டு, உடனே இடத்தைக் காலி செய்வதற்கு, பேசாமல் மற்றவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிப்போகலாம் என்று தோன்றுகிறது. இப்படி தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே காரணத்தினால் அந்தப் படங்களுக்கே எல்லாவிருதுகளையும்  கொடுத்தால் மற்ற படங்களை தேர்வுக்குழுவினர் பார்க்க வேண்டிய அவசியமே இல்லையே. எனவே இனி வரும் விழாக்களில் தேசிய விருதுபெற்ற படங்களைத்தவிர மற்றவற்றையே கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்று தோன்றுகிறது.

கேரள சிறந்த நடிகர் விருதுபெற்ற சலீம்குமார் சொன்னார் “அதாயது ஞங்கட நாட்டில ஓரொண்ணினும் ஒரு சீஸனுண்டு, இது மாங்ஙா சீஸன், இது சக்க சீஸன் என்னுள்ளதுபோலே இது அவார்ட் சீஸனா. எனிக்கு இதுவரே 24 கிட்டிட்டுண்டு. இது இருபத்தஞ்சாமத்ததா.அங்கும் இதே கதைதான் போலிருக்கிறது. சின்னச்சின்ன காமெடிப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு, முழுப்படத்திலும் ஒரு வயதான கதாநாயகத் தோற்றம், ஆதாமிண்டெமகன் அபு என்று படம், 25 விருதுகள். நம் ஊரில் வைரமுத்து என்றால் அங்கு ஒஎம்வி குரூப். ஒரு மாற்றாக மலையாள ஜாஸ்ஸிகிஃப்ட் கன்னடப்படத்திற்கு விருது வாங்கினார். அப்புறம் டூக்குடு என்று ஒரு படம். நம்ம ஊர் வெடிஎன்று சொல்லலாம்போல அத்தனை மசாலா, தெலுங்கின் சிறந்த படமாம். ஏகப்பட்ட விசில் கைதட்டல்களுக்கு நடுவே மகேஷ்பாபு விருது பெற்றார். நமக்கும் அவர்களுக்கும் சாப்பாட்டிலிருந்து சகலமும் வெவ்வேறு ரசனை.

நிகழ்ச்சியின் ஹைலைட்டுகளில் ஒன்று, கமல், தனது மகள் ஷ்ருதிக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான விருது வழங்கியது. மகளைக் கட்டியணைத்து முத்தமிட்டு உணர்ச்சிவயப்பட்ட கமலுக்கு, தொண்டை கட்டிக்கொண்டதால் பேச்சு வரவில்லை. (மகளை  நினைத்தல்ல) வாழ்நாள் சாதனையாளர் விருது எஸ்.பி.முத்துராமனுக்கு வழ்ங்கியபோது அவர் இயக்கி கமல். ரஜினி நடித்த படங்களிலிருந்து பாடல்கள் ஒளிபரப்பினார்கள். ரஜினிக்கு சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு மாதிரி தத்துவப்பாடல்களை ஒளிபரப்ப, கமலுக்கு நிலக்காயுது, நேத்து ராத்திரி போன்ற பாடல்கள். ரசிகர்கள் கொந்தளித்துக் கூக்குரலிட, கமல் ரொம்பவே நெளிந்தார்.


அதற்கப்புறமாய் ஸ்ருதியின் கலவையான கூடவே கவர்ச்சியான நடனமும். பின்னர் தமன்னா, பிரியாமணி, ரீமா, ரிச்சா கங்கோபாத்யாயா போன்றவர்களும் தங்கள் பங்குக்கு ரசிகர்களை 12 மணிவரை விழிப்புடன் வைத்திருக்க உதவினார்கள்.
இது தவிர வாழ்நாள் சாதனைப் பெண்மணி சீமா. அறிமுகமே அவளோட ராவுகள். இவருக்கு விருதுதரவந்த கமல் அவரை அணைத்துக் கொண்டே மேடையேறி அணைத்துக்கொண்டே இறங்கினார்.

2011ல் வெளிவந்த நூற்றி ஐம்பத்துச் சொச்சம் படங்களில் போராளி, மவுனகுரு, யுத்தம் செய், பயணம், அவன் இவன்,  போன்ற எதுவுமே எந்தத் தலைப்பிலும் பங்குபெறவில்லை என்பது கவனிக்கப்படவேண்டிய செய்தி.  அட அதை விடுங்கள் கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, போடிநாயக்கனூர் கணேசன், திருமங்கலம் பேருந்து நிலையம், பரிமளா திரையரங்கம், மதி கெட்டான் சாலை, உயிரின் எடை 21 கிராம், பிள்ளையார்தெரு கடைசி வீடு போன்ற  படங்களுக்கு அவற்றின் வித்தியாசமான தலைப்புகளுக்காகவாவது ஏதாவது சிறப்பு விருது கொடுத்திருக்கலாம். (எப்படியெல்லாம் யோசிச்சாங்களோ) யாரைக் குறை சொல்வது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பவர்ஸ்டாரின் லத்திகா வை இப்படி மறந்திட்டாங்களே! என்று புலம்பியபடியே வீடு வந்தோம்.

ஆமா சிக்மண்ட் ஃப்ராய்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? 

ஃப்ராய்டுதான் கீழ்க்கண்ட தத்துவத்தை முதலில் சொன்னவர்.

விலங்குகளில் உயிரியல் நடத்தை அகச்சுரப்பித் தொகுதியினாலும், நரம்புத் தொகுதியினாலும் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு உயிரினத்தின் நடத்தையின் சிக்கல் தன்மை அதன் நரம்புத் தொகுதியின் சிக்கல் தன்மையில் தங்கியுள்ளது. பொதுவாக, சிக்கலான நரம்புத் தொகுதிகளுடன் கூடிய உயிரினங்கள், புதிய எதிர் வினைகளைக் கற்றுக்கொண்டு தமது நடத்தைகளை அதற்கேற்றாற்போல் மாற்றிக்கொள்ளும் தகுதி கொண்டவையாக இருக்கின்றன.” (அவனே மனிதன்)
 
ஆனால் பின்பு கேள்விப்பட்ட ஒரு செய்தி இதில் அடங்காதது, அன்று இரவு நடந்த பார்ட்டியொன்றில் மனோஜ்மஞ்சுவுடன் நெருக்கமானார் தாப்ஸி என்பதற்காக அவருடைய் நண்பரும் சக நடிகருமான மஹத் தால் மனோஜ் தாக்கப்பட்டார் என்பதுதான் அந்தச் செய்தி. இப்போது மீண்டுமொருமுறை சிக்மண்ட் ஃப்ராய்ட்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

கடவுளின் கைகள்


தருமமிகு சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் விரைவுவண்டியில் வந்து இறங்கப்போகிற நண்பர் ஒருவருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. சாலையில் நெருக்கடி இல்லாத காலைப் பொழுது, இலேசான காற்றும், அப்பொதுதான் பரவத்தொடங்கியிருக்கும் வெளிச்சமும் மனதை எங்கோ இழுத்துச்சென்று கொண்டிருந்தது. மேகங்கள் மயிலைப்போலத் தோற்றங் கொண்டு பின் குயிலாக மாறிக்கொண்டிருந்தது. (டேய்..டேய்..டேய்..)  சரி பாரதிதாசன் மன்னிக்கட்டும். 

ஒவ்வொரு பேருந்தும் வந்து நிற்கையில் ஓட்டமாக ஓடி பயணிகளை இறங்கவிடாமல்  வழிமறித்து, பின்னாலேயேபோய் பேரம் படிந்தால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறப்பதும், மீதிப்பேர் அடுத்த பேருந்து வரும்வரை அரட்டையைத் தொடருவதுமாக ஜாலியாய் ஒரு ரகளை நடத்திக்கொண்டிருந்தார்கள் ஆட்டோ ஓட்டுனர்கள். எவ்வளவு கெஞ்சியும் மறுத்து பிடிவாதமாக பஸ்ஸிலேயே போவேன் என்று காத்திருக்கும் கல்லுளிமங்கர்களின் உடல்மொழியை அபிநயித்து, கிண்டல் வேறு. எல்லாவற்றையும் பார்த்து சிரித்தவாறே காத்திருந்தபோது,

     வேகமாய் வந்த ஒரு பேருந்து நடைமேடைக்கு மிக அருகில் உரசினாற்போல  நின்றது, அவசரமாய் அதிலிருந்து தலையை வெளியே நீட்டிய நடத்துனர், “ ஏய் இங்க வாங்கப்பா என்று ஆட்டோ ஓட்டுனர்கள் சிலரை பேருந்துக்குள் அழைத்தார். உள்ளே ஏறிய சிலர் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி அவரை நடைமேடை மீது படுக்கவைத்தார்கள். அவரோடு அவ்ர் மனைவியும் இறங்கினார். சில உடமைகள் வேறு. மிகவும் மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்துகொண்டிருந்த அவர்கள் பொறுப்பாய் அவர் மனைவியிடம் என்ன நடந்தது ஏதேனும் உதவி தேவையா என்று கவலையோடு விசாரிக்கத்துவங்கினார்கள். அவ்ர் ஒரு புற்றுநோயாளி எனவும், கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்னை வந்ததாகவும், வருகிற வழியிலேயே அவர் மயக்கமடைந்து விட்டதாகவும் அந்தப் பெண் சொன்னார். 

இப்போது கூட்டம் கொஞ்சம் குறைந்து கீழே படுத்திருந்தவரை என்னால் நன்றாகப் பார்க்க முடிந்தது. நடைமேடையில் படுத்திருந்தவர் மூச்சுவிடச் சிரமப்படுவதாகத் தோன்றியது, சற்று அருகில் சென்று பார்த்தபோது அவ்ர் தலைக்கும் முதுகிற்கும் இரண்டு பைகளை வைத்திருந்தார்கள் அதனால் தொண்டைப்பகுதி தாழ்ந்து போனதால் அவரால் இயல்பாக மூச்சுவிட முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். இரண்டு ஒட்டுனர்களை அழைத்து அவரை தூக்கிப்பிடிக்கச் சொல்லிவிட்டு கீழே இருந்த பையை எடுத்துவிட்டு, இதுபோன்ற தருணங்களில் நோயாளியை கிடை மட்டமாகத் தரையில் படுக்க வைப்பதே நல்லது என்று சொல்லி, அவரைப் படுக்கவைத்தேன்.

இதற்கிடையில் அவர்களை வந்து மருத்துவமனைக்கு அழைத்துப்போவதாகச் சொன்ன உறவினர் காரோடு வழி தெரியாமல் எங்கோ சுற்றிக்கொண்டிருப்பதாக அறிந்தோம். சென்னையில் கத்திப்பாராவைச் சுற்றியுள்ள அத்தனை முக்கியமான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய் தங்கும் விடுதிகள், சினிமா தியேட்டர்  (சென்னையில்ஜோதியைத்தெரியாதவர்கள் இருக்கிறார்களா என்ன?) என்று எல்லாம் சொல்லியும் மனிதருக்குப் புரியவில்லை, அவர் எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கும். 

கீழே படுத்திருந்தவரின் மூச்சு முன்புபோல் சீராக இல்லை, ஏதாவது முதல் உதவி அவ்சியம் என்று தோன்றியது. இனியும் தாமதித்தால் தவறாகிவிடும் என்று ஆம்புலன்ஸை அழைத்தோம், மூன்றாவது நிமிடத்தில் வந்தது. எல்லா ஓட்டுனர்களும் உதவ அவ்ர் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார், கண்ணீர் மல்க அந்தப் பெண்மணி கையெடுத்துக் கும்பிட்டார். எல்லோரும் அடுத்த பேருந்திற்காக காத்திருக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு பேருந்து வரும்போதும் ஓடிச்சென்று மறித்து, அது நிற்காமல் ஒடும்போது பின்னாலேயே ஓடி ஒவ்வொரு பயணியிடமும் கெஞ்சி சவாரிக்காக அலைந்தவர்கள், அந்தப் பெரியவர் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு பின்பு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பப்படும் வரை எந்தப் பேருந்தின் பின்னாலும் ஓடவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டிய செய்தி.

இரக்கமற்றவர்கள் என்றறியப் படுகிற சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் இந்தச் சம்பவம் நிகழ்ந்த 20 நிமிடங்களில், படுத்திருந்த நோயாளிக்கு ஒருவர் மாற்றி ஒருவர் விசிறியபடி இருந்தார்கள், ஒவ்வொருவரும் வழிதெரியாமல் அலைந்த உறவினருக்கு தொலைபேசியில் வழிசொல்லி விளங்க வைக்கப் பெரு முயற்சி செய்தார்கள், வரத்தாமதமான ஒவ்வொரு கணத்திலும் அவரைத்திட்டியபடி (....த்தா,  தே......ப்பையா என்று, எல்லாம் உண்டு) பரபரப்போடு அலைந்து கொண்டிருந்தார்கள். சவாரிக்கு 100ரூபாய் என்று பேரம் பண்ணிக்கொண்டிருக்கிற ஒரு ஆட்டோக்காரரை, ஓவர்டேக் செய்து, நான் 80 ரூபாய்க்கு வாரேன் என்று சவாரிக்காக எதையும் செய்பவர்கள், பயணிகள் வந்து அழைத்தபோதும் வேறொரு ஓட்டுனரிடம் ‘ நீ இட்டும் போப்பா, நான் இவர பாத்துங்கறன்” என்று கவலை காட்டினார்கள்.
             
     மனிதனின் இயலாத நிலையில் உதவிக்காக நீள்கிற கைகள், கடவுளுடையவை என்பதில் சந்தேகமில்லை
     
     அப்போதுதான் கவனித்தேன் இதுவரை இங்கு             நடப்பவற்றை  எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த அந்த மனம்பிறழ்ந்த நபர்,பேருந்திலிருந்து இறங்கிய யாரோ ஒருவர் வீசியெறிந்திருந்த உணவுப்பொட்டலத்தைப் பிரித்து வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்திருந்தார்.  

திங்கள், 2 ஜூலை, 2012

அறிவை அளக்கலாம் வாங்க.

      நுண்ணறிவு எண்(IQ)  என்பது நம்முடைய அறிவின் அளவினைக் கண்டறிய என்று தரப்படுத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ஒன்றின் மூலம் பெறப்படும் எண். உலகின் நாலாபக்கங்களிலும் சீரியஸாக ஒரு போட்டி நடந்து வருகிறது, யார் நுண்ணறிவில் அதிக எண்ணைப்பெறுகிறார்கள் என்று. சின்ன வயதில் பலப்பம் திருடி தின்றதிலிருந்து நேற்றுப் பார்த்த எம்மா ஸ்டோனின் ஸ்பைடெர்மேன் முத்தம் வரையிலும் மறக்காமலிருந்தால் உங்கள் எண் 200 ஆக இருக்கலாம். மாறாக நீங்கள் உங்கள் ஆருயிர் நண்பன் குமாரை, கிட்டு என்று அழைத்தால் அல்சைமர்ஸ் உஙகள் முதுகுக்குப்பின்னால் காத்திருக்கிறது என்று அர்த்தம். நு.எண் ஒரு அஞ்சோ, பத்தோ இருக்கலாம். 


     யூகியுடன் யூகியுங்களில் (ஜெயா டிவி) விஷாலினியை அறிமுகம் செய்தார் சேது. விஷாலினி கல்லூரிக்குச் சென்று வகுப்பெடுக்கிறாள், செமினார்களில் கலந்துகொண்டு கட்டுரை சமர்ப்பிக்கிறாள், சிக்கலான சில மனக்கணக்குகளை சேது போட்டபோது சரியான விடைகளை கொஞ்சமும் தாமதிக்காமல் சொன்னாள். MPC என்கிற மைக்ரோசாஃப்ட் ப்ரொஃபெஸனல் செர்டிஃபிகேட் பெற்றிருக்கிறாள். எல்லாப்பதில்களுக்கும் சேதுவின் புருவங்களை உயர்த்த வைத்தாள், நம்முடையதையும்தான். உன்னுடைய நுண்ணறிவு எண்ணை நம்புகிறேன் என்று பூங்கொத்து கொடுத்து சரணடைந்தார் சேது. அமெரிக்க சிஸ்கொ செர்டிஃபைடு நெட்வொர்க் அஸ்ஸோஸியேட் தேர்வில் (CCNA) 90% சதவிகிதம் பெற்று, அங்கு நடைபெற்ற அறிவுஜீவிகளின் கூட்ட்த்தில் உரையாற்றி கைதட்டலைப் பெற்ற விஷாலினி, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஒரு எலக்ட்ரீஷியன் அப்பாவிற்கும், வீடுவடிவமைப்பாளர்(House maker??) அம்மாவிற்கும் பிறந்த தற்போது 12 வயதாகும் குழந்தை என்பதுதான் ஆச்சர்ய கூடுதல் தகவல். பிறந்த்திலிருந்தே பேச்சு சரியாக வரவில்லை அதற்கு பயிற்சியெல்லாம் கொடுத்தோம் என்று பெற்றோர் சொல்வதை சூடனை அணைத்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள். நுண்ணறிவு எண் குறித்துப் பேசும்போது சராசரி மனிதனின் எண் 100 முதல் 110 வரை இருக்குமென்றும், ஐன்ஸ்டீனுக்கு 180, பில்கேட்ஸுக்கு 160, மடொனாவுக்கு 140 என்றும் உலகின் மிக அதிக எண் உடையவராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருப்பவர் சிங் யுங் யான் என்றார், அவரது எண் 210. அப்படியென்றால் 


விஷாலினிக்கோ, அதிகமில்லை ஜெண்டில்மென் 225 தான்.