மனிதனை நோக்கிய மனுஷ்ய’னின் கேள்வி. நாம் ஏன் இப்படி இருக்கிறோம்?


      மனுஷ்யபுத்திரன், ஞானி மாதந்தோறும் நடத்திவருகிற கேணி இலக்கிய அமர்வில் வாசித்த “ நாம் ஏன் இப்படி இருக்கிறோம்என்கிற கவிதையை நண்பர்.பத்ரி சேஷாத்ரியின் பதிவில் (http://www.badriseshadri.in/2012/07/blog-post.html) காணொளியாகக் காணநேர்ந்தபோது இனம்புரியாத ஒரு உணர்ச்சியால் ஆட்கொள்ளப்பட்டேன். ஒரு நாளில் ஒரு மனிதனின் நித்தியப்படி கடமைகளாக நான் நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனை சம்பவங்களையுமே கேள்விகளாக்கி, ஏன் இப்படி என்று கேட்பதன்மூலம் நம்மை நோக்கிய ஒரு சுயவிமர்சனத்தின் தேவையை நமக்கு உணர்த்துகிறார். 

      நாம் என்னவெல்லாம் செய்யக்கிடக்க, உண்மையிலேயே நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று அறியவரும்போது, ஒரு திடுக்கிடலைத் தவிர்க்க முடியவில்லை. ஒரே ஒருமுறை மட்டுமே கவிதையைக்கேட்டேன், அதன் கூடவே பயணித்தேன், அதன்பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் அமர்ந்திருக்கிறேன். கொஞ்சம் மிகைப்படுத்தப் பட்டதாகத் தோன்றலாம். 

      பயண அவசரத்தில் பாதையின் குறுக்கே வந்துவிட்ட நாய்க்குட்டியை வண்டியேற்றிக் கொன்றுவிட்ட குற்றவுணர்ச்சி, அன்றைய நாளின் எல்லா வேலைகளையும் பாதித்து விடுகிறதுதானே. இங்கு நாய்க்குட்டியையல்ல ஒரு குழந்தையைக் கொன்றுவிடுகிறேன், ஆம் என்னுடைய நேரங்கள் என்னாலேயே சிதைக்கப்படும் அனுபவத்தை கவிதையில் கொடூரமாய் அனுபவிக்கிறேன்.

      சும்மா சில கேள்விகள், அவ்வளவுதான். என் ஒரு  
நாளில் செய்யும் அத்தனை சரியான என்று நான்         
நினைத்துக்கொண்டிருக்கிற,அல்லது தவறான, கேவலமான         
செயல்களும் கேள்விக்குட்படுகின்றன. இத்தனைக்கும் கவிஞனிடம்  
பயங்கரமான ஆயுதங்கள் எதுவுமில்லை, மிரட்டல்தொனியுமில்லை. 
தகவல் எதையும் கோரி நிற்கவோ, நான் இன்னார் கேட்கிறேன் 
என்கிற சுயவிளம்பரத் தம்பட்டமோ இல்லை. கவிஞன் அவனையும் 
உள்ளிட்ட ஒரு சமூகத்திற்கான கேள்விகளையே 
கேட்கநினைக்கிறான். ஆனால்அது எனக்கான பிரத்யேக 
கேள்விகளாகவே எனக்குப் படுகிறது. 

     எதிர்பார்ப்புகள் ஏதுமற்று ஒரு வழிப்போக்கனின் பாடலைப்   
போல,பாடல் ஒலிக்கிறது. ஒவ்வொரு வரிகளிலும் அன்றைய 
தினத்தின்  ஏதாவதொறு கணத்தில் நான் நிகழ்த்தியிருக்க, அல்லது 
என் மனது நிகழ்த்தியிருக்கச் சாத்தியமானதொரு செயலைக் குறித்த 
கேள்வியொடுங்கியிருக்கிறது. என்னில் என்னையுமறியாமல் 
நிகழ்ந்துவிடுகிற சில நல்லசெயல்கள் குறித்தும்கூட, நான் 
பெருமிதம்கொள்ள அவன் அனுமதிப்பதில்லை. 

    அதையும் அவன் கேள்விக்குட்படுத்தி மர்மச்சிரிப்புடன் 
தொடர்கிறான். இந்தக் கேள்விக்கான பதில்களைச் சேமிக்க எனக்கு 
அவகாசம் தரப்படவில்லை, கவிஞனுக்கு அது அவசியமுமில்லை. 
அவன் தொடர்ந்து கணைகளைவீசியபடி செல்கிறான். தெருவெங்கும் 
அவனுடைய கேள்விகள் இறைந்துகிடக்க, நான் செய்வதறியாது 
அமர்ந்திருக்கிறேன். யாருமறியாத என்னுடைய அந்தரங்கத்தில் 
நுழைந்து என்னைக் கேலிச்சிரிப்பொன்றில் அடக்கி, ஒரு 
யானையைப் போல் வெளியேறிச் செல்கிறான் அவன். 

     தாங்கமுடியாத அவமானம் என்னை அடங்கி ஒடுங்கச் 
செய்கிறது. கொடுங்காற்றில் பறந்துபோய்விட்ட ஆடைகளை 
இழந்தவெட்கத்தில் நான் என் அந்தரங்கத்தைக் கைகளால் 
மறைத்தவாறு, ஊர்ப் பொது முற்றத்தில் அமர்ந்திருக்கிறேன் 
அம்மணமாக. இதைவிட வேறு கொடிய தண்டனையை எனக்கு 
யாரும் தந்துவிட முடியாது.

மனுஷ்யபுத்திரன் குரலில் கவிதையைக் கேட்க,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!