அண்ணே, விஜயகாந்த் அண்ணே!
ஊரெல்லாம் உங்க பேச்சாத்தாம்ணே கெடக்கு, பத்திரிகைக்காரவுங்கள போடா’ங்கறமாரி ஏதோ சொல்லிட்டீங்களாம். சொல்லத்தான்
சொல்லுவீங்க, பின்னாடியே தொரத்திக்கிட்டே இருந்தா? ஒரு மனுஷனுக்கு தாங்கமுடியாத
வேதனயான நேரத்துல, அடுத்து என்ன செய்யலாம்ணு முடிவெடுக்க முடியாத இக்கட்டான
சூழ்நிலயில என்னயக்கேட்டாலும் இப்படித்தேன் கோவம் வரும். இந்தப் பத்திரிகைக்காரவுங்களுக்கு
செய்தி சூடா வேணும்ணே, அவ்வளவுதான். டயானாவ வெரட்டிவெரட்டியே கொன்னவங்கதானண்ணே
இவிய்ங்க. ஆனா பாருங்க பொது வாழ்க்கயில இதல்லாம் சாதாரணம்ணே, ஒங்களுக்குத் தெரியாததா
என்ன, நம்ம கோவத்தக் காட்டுற எடம் இதாண்ணே, எத்தன மாசம், எத்தன சந்துபொந்தெல்லாம்
நுழைஞ்சு, எவ்வளவு மக்கள சந்திச்சு, எப்படிக் கஷ்டப்பட்டு வாங்குன வெற்றிண்ணே இது.
10 சதவீதம் ஓட்டுண்ணா சும்மாவாண்ணே, எத்தன எத்தன அப்ளிகேஷன அலசி ஆராஞ்சு,
எப்படியெல்லாம் சோதன செஞ்சு வேட்பாளர்கள தேர்ந்தெடுத்து, அவங்கள
ஜெயிக்கவைக்கிறதுக்கு தொண்டதண்ணி வத்தக் கத்தி, அப்படிக் கெடச்ச வெற்றிண்ணே இது. அது
மட்டுமில்லாம யார்கூட சேந்தா சட்டசபைக்குள்ள மரியாதையா நுழையற அளவுக்கு சீட்டு
கிடைக்கும்னு பலப்பல கணக்குகளப்போட்டு, அதனால கிடைச்ச பல அவமானங்களயும்
தாங்கிக்கிட்டு நிண்ணு கிடச்ச வெற்றி இல்லியாண்ணே. அத தூக்கிட்டு திடுதிப்புண்ணு
வேற கட்சிலேபோய் சேரப்போறேண்ணா, எப்படியிருக்கும். ”ஏண்டா உசிரக்குடுத்து உழச்சு உன்ன செயிக்கவச்சா, நீ
மசிரேபோச்சிண்ணு போவியோடா”,ண்ணு கேக்கத்தோணும்ணே,
ஆனா அத அந்த எம்மெல்லேக்களப் பாத்துல்லாண்ணே நீங்க கேட்டுருக்கணும்?
ஒண்ணு
சொல்லட்டுமாண்ணே, எம்ஜியாரு கட்சி தொடங்கி செயிச்சு அமச்ச ஆட்சிய கலச்ச ஒடனே
பாதிக்குமேற்பட்ட முன்னாள் எம் எல் ஏக்கள் தாய்க்கழகத்துக்குத் தாவினாங்களே, ஒரு
தடவ கட்சியவிட்டுப் பிரிஞ்சு எதிர்க்கட்சியில இணைஞ்ச 4 பெரும்தலைகள, என் தலையில
இருந்து 4 முடி கழிஞ்சதுண்ணு அப்ப அந்தக் கட்சித்தலைவர் சொல்லலையாண்ணே. அவ்வளவு
ஏன், போன ஆட்சியில மந்திரியா இருந்த ஒரு பிரபலம் அதுக்கு முந்தின ஆட்சியில இருந்து
இடம் மாறினவர்தானேண்ணே. எம்புட்டுக் கூத்து நடந்திருக்கு நாம பாத்துக்கிட்டுதானே
இருக்கோம், அதுக்காக அப்படிப் போனவங்க திரும்பிவந்தா நாம சேக்காமலா போயிருவோம்,
இல்ல அதுமாரி எதுவும் மத்த கட்சிகள்ல நடக்காமதான் இருந்திருக்கா.
எனக்கு ரெண்டு
கேள்வி கேக்கணும்ணே, ஒண்ணு இவ்வளவுநாள் ஒங்ககூட இருந்தும் ஒங்க கஷ்டமெல்லாம்
புரிஞ்சும் இப்ப இடம் மார்ராய்ங்கண்ணா, என்னண்ணே அர்த்தம். அவங்களுக்கு ஏதோ
அதிருப்தி நம்ம எடத்துல, அப்டித்தானண்ணே, அது என்ன ஏதுண்ணு எப்பவாவது நீங்க
விசாரிச்சிருக்கீங்களாண்ணே? நம்ம ஒண்ணும் அம்மா மாதிரி கட்சி நடத்தமுடியாதுண்ணே,
நம்ம நம்மபயலுகள அரவணைச்சி அவங்க பிரச்சினைய தெரிஞ்சுகிட்டு, அத
தீர்க்கமுடியலண்ணாலும், அவங்களுக்கு ஆதரவா பேசி, உங்கமேல நம்பிக்கய ஊட்டணும்ணே, அத
எப்பவாவது செஞ்சீங்களாண்ணே? மக்களும்தான் நம்பி ஓட்டப்போட்டு உங்கள சட்டசபைக்கு
அனுப்புனாங்களே அங்கபோய் அந்த அருமையான எதிர்கட்சித் தலைவர் பதவிய வச்சுக்கிட்டு
ஆறுமாசம் மவுனமா அப்படி என்னண்ணே பண்ணிட்டிருந்தீங்க. ஒங்களுக்கு கோவம்எல்லாம்
அப்பாவிங்க மேலதாண்ணே வருது. நாட்டுல நடக்கிற எந்த விஷயமும் உங்கள அவ்வளவா
பாதிக்கறதா தெரியலண்ணே. அப்புறம் எப்படிண்ணே நம்ம ஆளுகளுக்கு உங்கமேல நம்பிக்க
வரும்?
அது ஏண்ணே
எப்பப்பாத்தாலும் அண்ணியையும், மச்சானயும்
கூட்டிக்கிட்டே அலயுறீங்க, அதுக்கு நீங்க கவர்னரோ, வெளிநாட்டுட்டுத் தூதுவரோ
இல்லண்ணே. நல்ல பழுத்த அரசியல்வாதிகளோட துணைதாண்ணே உங்களுக்கு இப்ப தேவை. ஒரு
நல்லது பொல்லது எடுத்துச்சொல்ல,சமநிலையோட சிந்திக்கற, எதிர்கால வளர்ச்சிக்கான
ஆக்கப்பூர்வமான செயல்கள செய்ய நமக்கு வேண்டியது அவங்கதாண்ணே. கைய விடுங்கண்ணே,
ஏர்போர்ட்டுல நீங்க கைய ஆட்டிக்கிட்டு கத்திக்கிட்டே நடந்துவந்ததப் பாக்கும்போது
நம்ம சோளக்கொல்லையில் காக்கா விரட்டுதமாரியே இருந்துதுண்ணே, அண்ணே கட்சியக்
காப்பாத்துங்கண்ணே!
இப்படிக்கு,
உங்கள மலையா நம்பிக்கிட்டிருக்கும்
கூமாப்பட்டி வேலுக்குட்டி.
கருத்துகள்
கருத்துரையிடுக