சண்டே ஸ்நாக்ஸ்


     
         வழக்கமாய் நான் அலுவலகம் செல்லும் வழியில் (வேளச்சேரி-ஜிஎஸ்டி ரோடு) ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் தினமும் யாராவது ஒருவர் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் வண்டியைச் சாய்த்துப் படுக்கவைத்து பெட்ரோலைச் சேகரிக்க முயன்றுகொண்டிருப்பார். வாரத்தில் மூன்று நாட்களாவது காணக்கிடைக்கிற காட்சி இது. பெர்முடா முக்கோணத்தில் காணாமல்போகிற கப்பல்கள்மாதிரி இது என்னடா, இந்த இட்த்திற்கு ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்று என்னையே நான் வியந்து கேட்டுக்கொள்வதுண்டு. நேற்று காலை நான் அந்த இடத்தை நெருங்குவதற்கு சற்று முன் வண்டியிலிருந்து இஞ்சின் சப்தம் மெள்ளக் குறைய ஆரம்பித்தது. நான் பெட்ரோல் அளவு மீட்டரைப் பார்த்தேன் அதன் அளவுமுள் கொஞ்சமும் மேலெழும்பவில்லை. அப்போதுதான் ஞாபகம் வந்த்து நேற்று வண்டியை நிறுத்தும்போதே இன்று காலை எடுக்கும்போது பெட்ரோல் நிரப்பி எடுத்துவரவேண்டும் என்று முடிவு செய்திருந்தது. இதற்குள் வண்டி சரியாக அந்த திருப்பத்தில்போய் நின்றது. வேறு யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தேன், யாருமில்லை. இன்றைய கோட்டா நான்தான் என்று விதியைநொந்துகொண்டே வண்டியைத் தள்ளிக்கொண்டே பெட்ரோல்பல்க்கை அடைந்து பெட்ரோல் நிரப்பிக்கொண்டு திரும்பினால், நான் நின்ற அதே இடத்தில் இப்போது ஒரு பல்சர்220 சாய்ந்துகிடந்த்து. சற்றுதள்ளி ஒருவர் செல்ஃபோனில் நான் எம்மார்ட்டீயெஸ் பாலத்துக்குக்கீழ... என்று பேசத்துவங்கியிருந்தார். நான் சிரித்துக்கொண்டேன். இறைவன் மிகப்பெரியவன்.  
      காலையில் எழுந்தவுடனேயே முடிவு செய்துவிடுவேன், இண்ணைக்கு ஃபுல் எஃப்ஃபோர்ட்டோட வேல செய்யணும்,. அலுவலகம் போனால் நிலவும் சூழல் கொஞசம் பொருத்து ஆரம்பிக்கலாம், என்று சொல்லும். வெட்டியாய் ஒரு ஒரு அரைமணிநேரத்தை செலவு செய்த பிறகு, வேலை செய்யலாம் என்று தோன்றும்போது டீயக்குடிச்சுட்டு தொடங்கலாமேஎன்று ஒரு குரல் கேட்கும். டீயும் தொடரும் அரட்டையும் 11.30 வரை போகும். மனது சொல்லும் ஒரேயடியா லஞ்ச்சுக்குப் பிறகு ஸ்பீடாச் செய்யணும். டைனிங்ஹாலில் நடப்புப்பிரச்சினை ஏதாவது ஓடிக்கொண்டிருந்தால் 4 மணிவரை வேலையில் மனசுகொள்ளாது, அப்புறம் மீண்டும் டீ, 6 மணிக்கு ஸ்நாகஸ்,டீ என்று 7 மணிவரை போகும். அப்புறம் உதவியாளரிடம் கேட்பேன், ‘பாலாஜி போயாச்சுல்ல, வின்செண்ட், மோகன், ஆரெஸ் மோகன்?என்று எல்லோரையும் விசாரித்துவிட்டு, நேற்றைப்போலவே இன்றும் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டை எழுத ஆரம்பிப்பேன். ’டுடேஸ் ஓவரால் மான் பவர்..உதவியாளரின் ‘சார் போகசொல்லோ லைட் ஆஃப் பண்ணிட்டு போ சார்’ என்ற குரல் காற்றில் கரையும். இரவு 10 மணிக்கு வீட்டுவாசலில் பைக்கை நிறுத்தும்போது கேட்கிறகுரல் கொஞ்சம் ‘கர்ணகடூரரகம் ’அப்படி என்னதான் வேலபாக்குறாரோ உங்க அப்பா, அந்த ஹேண்ட்பேக் கிழிஞ்சுருக்கு, அத மாத்தித்தாங்கண்ணு தினசரி புலம்பறேன். ஆஃபீசக் கட்டிக்கெடந்தே அழறாரு, வீட்டுவேல ஒண்ணையும் கவனிக்கறதில்லமனசுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே முகத்தை களைப்பாக மற்றிக்கொண்டு ‘ஒரு காஃபி கொடுறா செல்லம்’.      
  படைப்புகளில் ஆச்சர்யமானது எது என்று கேட்டால் நான் எறும்பு என்பேன். எங்கள் வீட்டைச்சுற்றி நான்கைந்துவகை எறும்புகள் அலைகின்றன. எல்லாமே உருவம் மற்றும் நிறங்களால் வெவ்வேறானவை. தொடர்ந்து எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கும் அவைகள் நம் வழியில் குறுக்கிடாதவரை நமக்கு எந்தப்பிரச்சினையுமில்லை. அவை நம்மை அண்டிவாழ்பவை தவிர பெரிய தீங்குசெய்யாதவை எனவே அவைகள் தாராளமாக என்வீட்டில் நடமாட, நடனமாட நான் அனுமதித்துள்ளேன். சுறுசுறுப்பிற்குப் பெயர்போன எறும்புகள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு மிக ஆச்சர்யமானது என்பதே நான் கண்டுபிடித்த உண்மை. சர்க்கரை டப்பாவைத் திறந்துவைத்தால் என்ன ஆகும், முழுவதும் மொய்க்கும் எறும்புகள், அருகிலேயே ஒரு ஜிலேபியை வைத்துப் பாருங்கள், திரும்பியே பார்ப்பதில்லை. தேங்காய் மூடியை கொஞ்சநேரம் தனித்திருக்கவிட்டால் அந்த தேங்காயே கண்ணுக்குத் தெரியாதவாறு சூழ்ந்துகொள்ளும் எறும்புகள், சர்க்கரையைக் கண்டுகொள்வதில்லை. அதுபோலவே, தேங்காய் எண்ணெயை மொய்க்கும் எறும்புகளும். இது தவிர அரிசிச் சோற்றை மொய்ப்பவை, கீழே சிந்துகிற உணவுப்பண்டங்களை உண்பவை, இறந்துகிடக்கிற ஈசல் போன்றவற்றை இழுத்துச் செல்பவை எல்லாம் வேறுவேறு வகைகளாகவே இருக்கின்றன. இவை எல்லாவற்றையும்விட கம்பு இவற்றிற்கு மிக விருப்பமான ஒன்றாக இருப்பது அதிசயம். கம்பை எப்போது வாங்கிவந்தாலும் உடனே உபயோகப்படுத்திவிடுகிறோம். எங்கு ஒளித்துவைத்தாலும் ஆபத்துதான். ஆனால் இவை எதானாலுமே தொடப்படாத ஒன்று என்றால் அது நெய்’.  கிராமத்தில் நாங்கள் பிள்ளையார் எறும்பு என்றழைத்த படுவேகமாக இயங்குகிற கறுப்பெரும்புகள் இங்கே சென்னையில் காணப்படவில்லை. அட எறும்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் கொஞ்சம் கவனியுங்கள், நிறைய தெரிந்துகொள்வீர்கள்.                                     
காத்துக்கறுப்பு ரசிகர்மன்றத்தலைவர் ஆவேசம்.                          

      நடிகர் காத்துக்கறுப்பு தனது ஊரில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக செல்லும்வழியில், அவருடைய தொகுதி வார்டுஉறுப்பினர்கள் அவரைச் சில கேள்விகள் கேட்கமுயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் கீழே விழுந்தார். இந்த சம்பவம் பற்றி அவரது ரசிகர்மன்றத்தலைவரும் அவரது மச்சானுமான கூத்துப்பட்டியான் நமக்கு அனுப்பியுள்ள செய்தி பின்வருமாறு  ”அண்ணன் காத்துக்கறுப்பு பக்ரீத்பிரியாணி சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு குப்பாம்பட்டி செல்லும்போது, இந்தக் கிரகம் புடிச்ச வார்டுமெம்பெர்கள் உள்ள புகுந்து ‘உங்க சட்டைல என்ன கிழிசல்?’ ‘பட்டாபட்டி எதும் புதுசா எடுத்திருக்கீங்களா?’ண்ணெல்லாம் கேள்விகேட்டதில் அண்ணன் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதுபோன்ற பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது, அதுவும் நல்ல பசியோடு செல்லும்போது இதுமாதிரியான கேள்விகளைத்தவிற்குமாறு, முடிந்த அளவு அவ்ரை அணுகுவதையே தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மீறிச்செய்யப்படும் முயற்சிகளில் ஏற்படும் சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.                                                                                                                                   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சப்தமில்லாச் சென்னை!!