கொலுவோடு கொண்டாடு
      கொலு என்றால் சின்னவயதில் கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகளில் மட்டும் வைக்கப்பட்டிருக்கும் 9 படிகள்கொண்ட பிரம்மாண்டம்தான் ஞாபகம் வருகிறது. 9 நாட்களிலும் தவறாது நண்பர்கள் சகிதம் ஆஜராகிவிடுவேன். பெரியவர்கள் இரண்டு பக்திப்பாடலகளைப் பாடிமுடித்தபிறகு சிறுமியர்களின் நடனம் ஆரம்பமாகும். வெறுமே கைகொட்டியும் பின்பு கோலாட்டோடும் பாடப்படுகிற கதையோடு நகைச்சுவை கலந்த பாடல்கள் இப்போதும் ஊர்த்தெருக்களில் கற்றி அலையக்கூடும். இதில் பாடப்படுகிற பல பாடல்களை பள்ளிகளில் பாடி கேலி செய்து, சம்பத்தப்பட்ட சிறுமியிடம் திட்டு வாங்குவதும், பின்பு மாலையில் கொலுவைக்கும் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லப்பட்டு மிரட்டவும் படுவோம். ‘கிண்டல் பண்ணீங்கண்ணா இனிமே இங்க வரக்கூடாது’. இழக்கவே முடியாத கொலுவிற்காக, எல்லோர் முன்பும் கிண்டல் செய்துவிட்டு தனிமையில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்ட கதைகள் ஒரு தனி அத்தியாயம். அந்த 9 நாட்களிலும் அவர்கள்தான் ஹீரோக்கள்,
மாலை 5 மணிக்கே கொலுவைத்திருக்கிற வீட்டின் வாசலில்கூடிவிடுவோம். வீட்டுமுற்றத்தில் ஏதாவது விளையாடுவதும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுமாக இருப்போம், அது வீட்டிலுள்ளவர்களை எரிச்சலூட்ட, விரட்டப்படுவதும் அவ்வப்போது நடக்கும். பெண்குழந்தைகளுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை, நடன ஒத்திகை என்கிறபேரில் அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இடையிடையே வெளியே விளையாடுவதாக பாவ்லா செய்துகொண்டிருக்கும் எங்களை வந்து கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வது அவர்களில் பலரின் தினப்படி வழக்கம். இருங்கடி,நவராத்திரி முடியட்டும்’ என்று மனதுக்குள்ளே கருவுவோம். ஒருவழியாக விளக்கேற்றியபிறகு நாங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவோம். கொலுவிலிருந்து 6 அடிக்கும் குறையாத தூரத்தில்தான் எங்கள் இருப்பிடம். நடனமாடுகிறோம் என்ற பேரில் பெண்கள் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வார்கள். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து முழுக்கொலுவையும் பார்க்க இயலாது. அப்படி ஒரு கோணமே எங்களுக்கு வாய்க்கும். 
 
மேலே சரஸ்வதியிலிருந்து கீழே ஊர்வன, விலங்குகள் என்று ஒன்பது படிகளும் ஒருவித ஒழுங்கோடு அமைக்கப்பட்டிருக்கும். முன்னால் ஒரு தெப்பக்குளம் அமைத்து அதில் ஒரு மோட்டார்போட் ஒன்று சுற்றிவந்துகொண்டிருக்கும். அருமையான பூங்காவும் அதில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளும் கண்ணைக்கவர்வார்கள். ரோடுகளில் நடைபாதை அமைக்கப்பட்டு மக்கள் அதில் ஒழுங்காக நடந்து செல்வார்கள். ரோட்டோரமாக ஒரு கிளி ஜோசியக்காரன் யாருக்கோ எதிர்காலப் பலன்களைச் சொல்லிக்கொண்டிருப்பான். தெருவிளக்குகள் ஒரே சீராக எரிந்துகொண்டிருக்கும். அருகிலேயே காட்டில் மரத்தில் ஒரு பாம்பு ஒளிந்துகொண்டிருக்கும். சிங்கம், நரி, கரடி, யானை என்று எல்லாம் ஒரு நதியில் நீர்குடித்துக்கொண்டிருக்கும். தண்ணீரிலும் பாம்புகள் நெளிந்துகொண்டிருக்கும். இவையெல்லமே ஒருபுறக் காட்சிகள்தான், எங்களால் காணவியலாத பல பொம்மைகள் அங்கே இருந்தன. ராதா கிருஷ்ணன் கோபிகைகளோடு கேளிக்கையில் ஈடுபட்டிருந்த வனம், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, எண்ணெய்க்கடை செட்டியார், திருமணக்கோஷ்டி எல்லாம் எங்களுக்குத் தூரத்தில் இருந்தன. அவ்வப்போது புது பொம்மைகளும் சேர்க்கப்படும். யாராவது ஒரு புது பொம்மையைப் பார்த்துவிட்டால் அதை மற்றவர்களுக்குக் காட்ட முயல்கையில் ஏற்படும் சப்தம் அங்கே நிலவிவரும் அமைதியைக் குலைப்பதாக இருக்கும். சிறுமியரின் அழகழகான ஆடலும் பாடலும் ஒருபோதும் எங்களைக் கவராமல்போனதற்கு எங்களுக்கு எல்லா பொம்மைகளையும் பார்க்கமுடியாததே காரணம் இது அவர்களுக்குப் புரியாமல் அதிகம் சப்தம் எழுப்புபவன் என்று பட்டம் சூட்டப்பட்டு யாராவது ஒருவன் வெளியேற்றப்படுவான். பூஜை முடிந்ததும் தரப்படுகிற அருமையான சுண்டலையும், சர்க்கரைப்பொங்கல் இன்னபிற வகைகளை இழக்கத்தயாராக இல்லாதவர்கள் மீந்த நேரத்தை அமைதியாகக் கழிப்போம்.
 
6 வயதுமுதல் 15 வயதுவரை நீண்ட இந்த கொலு வைபவம், இடையே எங்களோடு கொலுபார்க்க வந்த ஒரு முஸ்லிம் நண்பனுக்கும், அதே காரணத்துக்காக வந்த மலையாள கிறிஸ்துவ மருத்துவர் ஒருவரின் மகளுக்கும் ஏற்பட்ட இனம்புரியாத கவர்ச்சியினால் திடீரெனத் தடைப்பட்டது ஒரு சோக சம்பவமே. ஆனால் கொலுவைவிடவும் சுவாரஸ்யமான பல விஷயங்கள் அந்த நண்பனால் எங்களுக்கு அறியத்தரப்பட்ட்து. சிந்தனா முறைகளில் சைத்தான் புகுந்த காலமென அதைக்கொள்ளலாம். கொலுவிற்கு வருவதற்கு நிரந்தரத் தடைவிதிக்கப்பட்டபிறகு கொஞ்சகாலம் அது மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்துவந்தது. 
 
சென்னையில் இன்று கொலு எல்லோர்வீட்டிலும் காணப்படுகிறது, பெரும்பாலும் எல்லா அம்மன்கோவில்களிலும் பார்க்கிறேன். ஆடம்பரத்தின் அத்தனை அடையாளங்களோடும் காணப்படுகிற கொலு ஏனோ மனதைத் தொடுவதில்லை. கொலுபார்க்க வருபவர்களுக்கு கொடுக்கவென்றே சேலைகளும் ரவிக்கைத் துணிகளும் மஞ்சள் குங்குமம், சிறிய பாத்திரங்கள் என்று எல்லாம் வாங்கப்படுகிறது. கொலு வைப்பதற்கான செலவு மாதந்திர பட்ஜெட்டில் ஒரு பெரும்தொகையைக் கோரிநிற்கிறது. மாறாக ஒரு எளிமையான கொலுவை நேற்று நான் பார்க்கநேர்ந்தது. அது ஒரு மாரியம்மன் கொவில்,கோவிலே பத்துக்குப் பத்துதான் இருக்கும்., அழகாக 7 படிகளில் குட்டிக்குட்டியாய் பொம்மைகள், நடுவில் சரஸ்வதியென்று மனசைத்தொட்டது. ஒரு கும்பிடுபோட்டுவிட்டு சுண்டலையும் வாங்கிக்கொண்டு திரும்பும்போதுதான் கவனித்தேன், பெயர்ப்பலகையில் ’பெரியார் நகர்என்று போட்டிருந்தது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சப்தமில்லாச் சென்னை!!