வியாழன், 12 ஜூன், 2014

ஃபுட்பால் ஃபீவர் - ஆட்டம் ஒன்று.           பிரேஸிலின் மார்சலோவின் 
கால்கள் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய பந்து அது, அவரின் கால்கள் கட்டுப்பாடு இழந்துவிட்டபடியால் குரோஷியாவிற்காக தனது முதல் கோலைப்போடும்படியாக நேர்ந்தது அவரின் துரதிருஷ்டம். உலகின் ஆகப்பெரிய விளையாட்டுத்திருவிழா அதை நடத்துகிற பிரேஸிலின் ஒரு வீரராலேயே தவறாகத் துவக்கி வைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கிய 11 வது நிமிடத்தில் நிகழ்ந்த இந்த தவறுக்காக பிரேஸிலின் நெய்மர் 29வது நிமிடத்தில் ஒரு கோலடித்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டார். ஆனால் அதற்குச் சற்றுமுன்புதான் அவருக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை தரப்பட்டிருந்தது.
ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்கள் பந்து பிரேஸிலின் வசமே இருந்தது. குரோஷியாவின் கவனம் முழுவதும் தடுப்பாட்டத்தில் இருந்தது. மிகச் சிறப்பான தடுப்பாட்டம் அது. பிரேஸிலின் படு ஆக்ரோஷமான ஆட்டதினூடே குரோஷ்யாவின் லாரன், நெய்மரின் தோள்களைப்பற்றி விளையாடவிடாமல் தடுத்ததன்மூலம் ஒரு பெனால்டிகிக் கிற்கு  வழி ஏற்படுத்திக்கொடுக்க, கொஞ்சமும் தவறாமல் அதை கோலாக்கினார் நெய்மர். அதன்பிறகான குரோஷியாவின் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடித்தபோதிலும், ஓரிச்’சின் ஒரு கோல் முயற்சி – நிச்சயம் கோலாகியிருக்க வேண்டிய பந்து – தோற்றுப்போன பிறகு, அவர்களின் ஆட்டம் பலவீனமாகிப்போனது. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் ஆஸ்கர் ஒரு கோலடித்து ஆட்டத்தை 3-1 என்ற கணக்கில் முடித்துவைத்தார். பிரேஸில் தனது கணக்கை இனிதே துவங்கியிருக்கிறது. போட்டியை நடத்திய நாடே வெல்வது என்கிற நிகழ்தகவிற்கு 20 சதவீதச் சாத்தியம் இருக்கிறது. காத்திருப்போம்.

வியாழன், 29 மே, 2014

• பல பெர்பாமன்சுகள, வெரைட்டியாக் குடுத்து வின்பண்ணி...
·                                          டிவேலு என்கிற மகாநடிகனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு யாராவது யோசித்திருப்பார்களா என்ன? 90களின் ஆரம்பத்தில் போடாபோடா புண்ணாக்கு என்ற பாடலோடு தனது சினிமாக் கணக்கைத் துவங்கியவர் வைகைப்புயலாய் வடிவம் பெற்று 2011ன் அரசியல் அரங்கத்திற்குள் யாரும் அழைக்காமலேயே நுழைந்து சக்கரவியூகத்தை உடைத்து வெளிவரத்தெரியாது உள்ளே மாட்டிக்கொண்ட சோகம் நிகழ்ந்தே விட்டது.

           தமிழ், தென்னிந்திய, இந்திய சினிமாக்களில் நகைச்சுவைக்கலைஞன் பலவீனனாகவே சித்தரிக்கப்படுபவன். கதாநாயகியின் தோழியான ஒரு புத்திசாலிப் பெண்ணுக்கு காதலனாக வரும் ஒரு அசடன், ரசிகர்களை கதையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி சிரிக்கவைப்பதற்காகவே படைக்கப்பட்ட ஒரு பாத்திரம்.
·        அவ்வளவே!

           டி.ஆர்.ராமச்சந்திரன் அதற்கு 100 சதவீதம் பொருந்துபவர். தங்கவேலுவும் தன்னுடைய பங்கிற்கு அசட்டுப்பணியாற்றினார். நாகேஷ் தன்னுடைய ஒவ்வொரு உடலசைவிலும் அதை வெளிப்படுத்தியபடி இருப்பார். நகைச்சுவைக்கலைஞனாக வந்து சமூக சீர்திருத்தக்கருத்துகளை மென்மையாக என்.எஸ்.கிருஷ்ணனும், நக்கலாக எம்.ஆர் ராதாவும் சொன்னார்கள். இந்த இரண்டையும் கலந்து விவேக் சொன்னார். வடிவேலுவின் நகைச்சுவை இதில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு உடல்மொழி கலந்து, அசட்டுத்தனம் மிகுந்த மென்மையான வகையைச் சேர்ந்தது. கூப்பாடு போட்டுக்கத்தி சாதாரண வார்த்தைகளையே நகைச்சுவை என்று சிரிக்கக்கோரி நிற்கிற கவுண்டமணியின் பாணியிலிருந்து விலகி கூட்டணி இல்லாத ஒற்றைக்காமெடி  என்கிற வகையில் வடிவேலுவின் வரவு, தமிழ் சினிமாவில் ரசிகர்களின் காது கிழிந்து தொங்கியபோது நிகழ்ந்தது. சிங்காரவேலனில் ஒரு பபூனாக வந்தவர் தேவர்மகனில் தன் கையை கமலுக்காகத்தந்து நகைச்சுவையாளனுக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபித்தார்.


·                                                             படிப்படியாய் உயரங்கள் தொட்டார். 2000 முதல் 2010 வரை சினிமாவின் நகைச்சுவை வடிவேலு மற்றும் விவேக் ஆகிய இருவரின் கைகளிலிருந்தது. இருவரும் இணைந்து கொஞ்சகாலம் பணியாற்றிய பிறகு அவரவர் வழியில் அவரவர் பயணம் தொடர்ந்தது. வடிவேலுவின் வெகுளித்தனம் வெகுவாக்க கவனிக்கப்பட்டதற்கு அவருடைய மீசையற்ற நீள்சதுர முகமும் மதுரையின் சொல்லாடல்களும் உதவியாக இருந்தது. வளராத மீசையை பென்சிலால் வரைந்துகொண்டு அத்தனை பேரிடமும் அடிவாங்குகிற தைரியம் அவருக்கிருந்தது. திரிஷாவைக்கல்யாணம் செய்து கொள்வதற்காக கூவத்தில் குதிக்கவும் அவர் தயாராக இருந்தார். வாழ்வில் நாம் தினசரி சந்திக்கும் அத்தனை கதாபாத்திரங்களிடமும் அடி
வாங்கியவர் ஒருவர் உண்டென்றால் அது வடிவேலு மட்டும்தான். அவர் கூட்டணியில் உள்ளவர்களின் வார்த்தைகளை அப்படியே நம்பிவிடும் வடிவேலு அதன் காரணமாகவே மூக்கு உடைபட்டுத் திரும்பி அதே கூட்டணியில் மீண்டும் இணைந்துகொள்வது அவர்மேல் நமக்கு பரிதாபத்தை ஏற்படுத்துமளவுக்கு யதார்த்தமானது.

·                                                           நம்மில் பலருக்கு வாய்க்கிற அன்றாட அனுபவங்களை அவர் எப்படி நகைச்சுவையாக்குகிறார் என்பதிலேயே அவரின் வெற்றி அடங்கியிருந்தது. தன்னிடம் தவறாகத் தரப்பட்ட மணியார்டர், புதிதாக டீக்கடை திறந்தவனிடம் ஓசி டீ கேட்டு பண்ணிய பந்தா, இளம்பெண்ணின் இடுப்பைக்கிள்ளிய பஞ்சாயத்து, குளிர்பானத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பக்கத்தில் குடித்துக் கொண்டிருப்பவரோடு காட்டிய அழிச்சாட்டியம், கட்சி மேடையில் வீராப்பாய்ப்பேசிவிட்டு, எதிக்கட்சிக்குப் பயந்து அடுத்த நிமிடமே கட்சித்தாவல், நாய்சேகரின் காதல் என்று எல்லா சாத்தியங்களையும் நகைச்சுவையாக்கியவர்.

·                                                  தொலைபேசி உரையாடலை இவ்வளவு நகைச்சுவையோடு யாரும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு ஃபோனைப்போட்டு அரைமணிநேரம் பேசிய பிறகு 2 ரூபாயைக்கொடுத்து அசத்துவார். ரிசீவரை எடுத்துப்
பேச ஆரம்பித்ததிலிருந்து கடைசிவரை தான் சொல்லவந்ததைச் சொல்லமுடியாமலேயே, ஃபோனை வைத்துவிட்ட எதிராளியை நொந்துகொள்வார். எடுத்துக்கீழே வைக்கப்பட்டிருக்கிற ரிசீவரை எடுத்து ‘யார் பேசறது?என்று ஒரேஒரு கேள்வியைக்கேட்டதற்காக காது வழியே ரத்தம் சொட்ட வசவுகளை வாங்குவார். இதுபோன்ற நம் எல்லா அன்றாட அனுபவங்களும் அவர்வழி நகைச்சுவையாக மாறியது. 
·                                                            இப்படி எல்லோர் வாழ்விலும் அவரவர்களின் அனுபவங்களையே நகைச்சுவையாக மாற்றி ஓடவிட்டுக்கொண்டிருந்த தருணத்தில்தான் அவருக்கும் விஜகாந்த்திற்குமான மோதல் வலுப்பட்டது. தமிழக அரசியலில் தனக்கென ஒரு வாக்குவங்கியை நிலைப்படுத்தியிருந்த நேரத்தில், அவருக்கு எதிரான இவருடைய கேலிப்பேச்சுகள் வெறும் சினிமா
நகைச்சுவையைப் போலவே மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டதே சினிமாவிலிருந்து இவர் வெகுகாலம் விலகி இருக்கக் காரணமாகவும் அமைந்துவிட்ட்து. இரண்டரை ஆண்டுகால இடைவெளிக்கப்புறம் வெளிவந்த தெனாலிராமனில் தன்னை ஒரு நகைச்சுவையாளனாகவும், கதாநாயகனாகவும் நிறுவ அவருக்கு மிகுந்த முயற்சி தேவைப்பட்டது. இதேபோன்ற ஒரு இரட்டைக் கதாபாத்திரத்தை 23ம் புலிகேசியாக அநாயாசமாகச் செய்த அதே வடிவேலு, இந்தமுறை தோல்வியைத் தழுவியதற்கு சினிமா நகைச்சுவை தன்னை நாளுக்குநாள் புதுப்பித்துக்கொண்டே வருகிறது என்பதே காரணம்.
·         

               இது மிகுந்த போட்டி நிறைந்திருக்கிற நேரம். தன்னை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு புதுப்பித்துக்கொள்ள வடிவேலுவிற்கு பயிற்சி தேவைப்படலாம். பலபாணியில், பல படங்களில் அவர் செய்திருந்த சின்னச்சின்ன காட்சிகளையே, தனித்தனிக்காமெடியாக்கி, அதற்கென பல நடிகர்களும் உருவாகிவிட்டார்கள். 'நான் சினிமாவில் காமெடி பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்என்று பேட்டி கொடுப்பதெல்லாம் இப்போது அவருக்கு உதவப்போவதில்லை. எல்லோருடைய காமெடிகளையும் பார்த்து அதைவிடப் புதிதாக ஏதாவது முயற்சித்தால்தான் இழந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள இயலும். அவரே ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல, “ பல பெர்பாமன்சுகள வெரைட்டியாக் கொடுத்து வின்பண்ணி வந்தவண்டாஎன்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்க வடிவேலு கடுமையான தற்சோதனைக்கு தன்னை உட்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 


          அதுவரை எண்டு கார்டுபோடாமல் காலம் அவருக்காகக் காத்திருக்கவேண்டும்.

திங்கள், 19 மே, 2014

வாக்காளன் அப்பாவி அல்ல            
   ன்பதையே இந்த தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன. தேர்தலை திருவிழாவாகக் கொண்டாடிய இந்திய வாக்காளன் வகைதொகை இல்லாமல் யார் என்ன பேசினாலும் பெருங்கூட்டமாய்க் கூடி தனது கை தட்டல்களைப் பரிசாகத் தந்து உற்சாகப்படுத்திய வாக்காளன் ஓட்டளித்திருக்கிற விதம் அவன் உண்மையிலேயே யார் என்பதைத் தெளிவுபடுத்தி விட்டது. தொடர்ந்து தொங்கு பாராளுமன்றங்களையும், அதன் தொடர்ச்சியான பல நாடகங்களையும், பக்க விளைவான பொருளாதார நெருக்கடிகளையும் இந்தியாவுக்குத் தந்துகொண்டிருப்பதை ஒரு ஜனநாயகக் கடமையாகவே ஆற்றிவந்த இந்திய வாக்காளன் இந்தமுறை அந்த தர்மத்தை தன் உள்ளுணர்வையும் மீறி, மீறியிருக்கிறான். ஒரு தொங்கு பாராளுமன்றம் அமைவதைத் தவிர்த்ததன் மூலம் ஒரு ஆட்சியாளனை முழு சுதந்திரத்தோடு பணியாற்றுவதற்கு அனுமதியளித்திருக்கிறான். அவனுக்கு நன்றி.


இனி கேள்விகள் எழுகின்றன. மதசார்பின்மையை ஒரு வலுவான ஆயுதமாகப் பயன்படுத்திய எல்லாக் கட்சிகளும் தோற்றிருப்பது, வாக்காளன் மதசார்பற்றவனாய் இருப்பதை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அப்படியானால் எல்லா தரப்பு மக்களும் காவிக்கு வாக்களித்திருப்பது எதனால்? மதசார்பின்மை என்கிற போர்வைக்குள் மதம்பிடித்தலைகிற கட்சிகளைவிடவும், நான் மதச்சார்புடையவன் என்று அறிவித்துவிட்டு ஓட்டுக்கேட்கிறவனே நம்பிக்கையானவன் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்களா? இல்லை கடந்த பத்தாண்டுகளில் நடந்த மதப் படுகொலைகளுக்கு ஆளும்கட்சியின் மெத்தனப்போக்கே காரணம் என்று தீர்மானித்து விட்டதனாலா? வாக்காளனின் கூர்மையான அவதானிப்பில் ஆளும் கட்சியும் அதன் பொம்மைப்பிரதமரும் இந்த நாட்டைக்குறித்துக் கொள்கிற கவலைகளை விடவும் மற்ற விஷயங்களில் செலுத்திவந்த கவனம் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே இந்த தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்லும் தீர்ப்பு. அனைத்து மதத்தினருக்கும், பல்வேறு நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே தீர்வாக நமது புதிய பிரதமர் விளங்குவாரா? என்பதே இப்போது நம்முன் உள்ள ஆகப்பெரிய கேள்வி.


சில பதில்களுக்காக நாம் காத்திருக்கிறோம். இந்தியாவை மிகவும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிற உள்ளூர் தீவிரவாதம், மாவோயிஸ்டுகள். வாழும் நிலங்கள் அபகரிக்கப்பட்டதால், காடுகளின் கனிம வளம் விற்கப்பட்டுவிட்டு அதனால் சமவெளிக்கு விரட்டப்பட்ட பழங்குடியினரின் கோபம் தணிப்பது எவ்வாறு? சீனர்களின் பாகிஸ்தானியர்களின் எல்லைதாண்டிய ஊடுறுவலை எப்படிச் சமாளிப்பது? தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை எப்படித் தடுப்பது? மாநிலங்களிடையே நீர்ப்பங்கீடு அமைதியான முறையில் எப்படிச் செய்வது? நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் குடிநீர், மின்சாரம் வழங்க மேற்கொள்ள வேண்டிய தொலைநோக்கு நடவடிக்கைகள் என்னென்ன? நாட்டின் நிதிப்பற்றாக்குறையை எப்படிச் சீராக்குவது? இறக்குமதி- ஏற்றுமதி ஏற்றத்தாழவை நீக்க என்ன செய்யவேண்டும்? மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க என்ன நடவடிக்கை தேவைப்படும்? சுற்றுலாவின் மூலம் வெளிநாட்டுப் பயணிகளைக் கவர இன்னும் என்னென்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்? இன்னும் ஆயிரமாயிரம் பதில்களுக்கு பிரதமர் தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டிய அதே நேரம், மதசார்பற்ற ஒரு நாட்டில் எல்லாமதத்தினரும் பாதுக்காப்பாக வாழ வகைசெய்ய வேண்டியவரும் அவரே!

எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அவரால் நிறைவேற்ற இயலும் என்பது ஓட்டளித்தவர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அதற்கு உத்தரவாதமிருக்கச் சாத்தியமில்லை. ஒரு எதற்கும் லாயக்கற்ற அரசை, செயல்படத்தயங்கிய ஒரு அரசை அகற்றியிருக்கிறார்கள் என்றால், செயல்பாடு முக்கியம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள். அதுவும் நாட்டின் பல முக்கிய ஊழல்களில் சம்பந்தப்பட்டிருக்கிற அரசியல்வாதிகளின் மேலான கடுமையான நடவடிக்கையில், அச்சுறுத்தும் தீவிரவாதத்தை அடக்குவதில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மற்றும் விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதில்.


வாக்காளனுடைய மனபாரம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. கொஞ்சநாள் அவன் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். அவன் விரும்பிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்வரை நம்பிக்கையோடு காத்திருப்பான்.ஒருவேளை அப்படி எதுவும் நடக்காமல்போனால், வழக்கம்போல அவன் வேலையைப்பார்த்துக்கொண்டு போவான். என்ன செய்வது அடுத்த ஐந்தாண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஓட்டுச் சாவடிக்குள் நுழையும்நாள்வரை சாப்பாட்டிற்கு வழிசெய்ய வேண்டுமே?

புதன், 23 ஏப்ரல், 2014

ஒரு அப்பாவி வாக்காளனின் புலம்பல்கள்.வணக்கம்.
மீண்டுமொருமுறை நாம் வாக்குச்சாவடிகளுக்கு “வருகைபுரிய” இருக்கிறோம். காலச்சுழற்சியில் இந்தியாவின் – சுதந்திர இந்தியாவின் – 16வது தேர்தலில் நாம் வாக்களிக்க இருக்கிறோம். நம் கைகளில் ஐந்தாண்டுகளுக்குஒருமுறை மட்டுமே தரப்படுகிற அடுத்த ஐந்தாண்டுகளுக்கான வாழ்க்கை அனுமதிச்சீட்டு. நாம் சில விஷயங்களை  நினைவுகொள்ளவேண்டிய தருணம் இது, ஆமாம் அது மிக அவசியமானதும்கூட.
ஒரு நாட்டின் மிக அடிப்படைத்தேவைகளான கல்வி, உணவு, மருத்துவம் போன்றவற்றில் சுதந்திரத்திற்கு பின்பான இந்த 67 வருடங்களில் நமது நிலை என்ன? ஏற்றுமதியிலும், உள்கட்டமைப்பு வசதிகளிலும் நாம் எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கு வளர்ந்திருக்கிறோம் அல்லது தள்ளப்பட்டிருக்கிறோம்? பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் நமது முன்னேற்றம் அல்லது பின்னடைவிற்கான உண்மையான காரணிகள் என்ன? நதிநீர் இணைப்பு இதுவரை சாத்தியமாகாததன் மர்மம் என்ன?
      இதற்கெல்லாம் ஒரே பதில்தான். அது, நம்முடைய எதற்கும் அசராத  சகிப்புத்தன்மை”.
நமது சகிப்புத்தன்மையின்மேல் கட்டமைக்கப்படுகிற அரசு, அதை தனக்குச் சாதகமாக்கிக் கொள்வதன் காரணமாகவே இந்தக் கேள்விகளுக்கு நமக்கு விடைதெரியாமலேயே, தெரிந்துகொள்ள முயலாமலேயே நாம் தொடர்ந்து “வாழ்கிறோம்”
நமது முதுகெலும்பில் நாம் எப்போது “ரப்பரைஸைடு” ரத்தமேற்றிக்கொண்டோம், ஏன் எது நடந்தாலும் – 3ஜி,4ஜி அல்லது 5ஜி- நமக்கு எதுவுமே சம்பந்தமில்லாதது போல நடந்துகொள்ளப் பழகிக்கொண்டோம். நாட்டில் பரவலாக நடந்துகொண்டிருக்கிற பாலியல் பலாத்காரங்கள் ஏன் நமக்கு வெறும் செய்தியாக மட்டும் தெரிகிறது. என்.ஜி.ஜி.ஓ க்களின் தன்னார்வத் தொண்டின் பின்னாலிருக்கிற பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வுக்கலாச்சாரப் பின்ணனி பற்றி நாம் ஏன் கண்டுகொள்வதே இல்லை. குற்றம் நிரூபிக்கப்படாமலேயே, அல்லது நீதிபதி குற்றமற்றவர் என்று அறிவித்த பின்னும் விடுதலை செய்யவோ அல்லது தூக்கிலிடவோ முடிவெடுக்க இயலாத அரசை நாம் ஏன் விமர்சிக்க மறுக்கிறோம். நமது இயற்கை வளங்களை சுரண்டிவிற்று வயிறுவளர்க்கிற நமது மாண்புமிகு மந்திரிகளை நாம் விலகிநின்று வேடிக்கை மட்டுமே பார்ப்பது எதனால்? அதெல்லாம் போகட்டும், திறந்திருக்கிற ஆழ்குழாய் கிணறுகளுக்கு 150 ரூபாய் விலையுள்ள ஒரு மூடியைப்போட்டு மூடாமல், மாதமொரு குழந்தையை பலிகொடுக்கிறோமே அது எதனால்?
              நமது முதுகெலும்பு வளையும் தன்மை கொண்டதுதான், ஆனால் அது நமது முதல்வர் முன்பு வளைகிற அமைச்சர்களின் முதுகுகள் போல ஆகிவிடக்கூடாது.

      சொல்லால் சொல்லை அறி” என்றார் கபீர்தாசர். “எவர்சொன்ன சொல்லானாலும் ஏன்? எதற்கு? எப்படி? என்று கேள்” என்று மந்தைகளாக வாழ்ந்த மனித சமுதாயத்தை தனது புத்திசாலித்தனமான உரைகளால் திசைதிருப்பி அடிமை வாழ்விற்கு முடிவுகட்டினார் சாக்ரடீஸ். இன்று நமக்கு தலைவர்களாக வரப்போகிறவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களின் உரைகளைக் கேளுங்கள். சேறும், சகதியும் வாரி எறியப்படுகிற வீதிகளில் நாம் வாக்குச் சீட்டுகளோடு பரிதாபமாக நின்றுகொண்டிருக்கிறோம். யாரை நம்புவது என்று தெரியவில்லை.
நீங்கள் யாரையாவது கண்ணைமூடிக்கொண்டு பின்பற்றுபவராக இருந்தால் விட்டுவிடலாம், அப்படி இல்லையென்றால் நீங்கள் நிச்சயம் பரிதாபமானவர்தான். அதுவும் நீங்கள் தினசரி அரசியல் நிகழ்வுகள் பற்றிஅறியாதவராக இருந்துவிட்டாலோ உங்கள் நிலை இன்னும் பரிதாபமானது. வாக்குறுதிகளை, இலவசங்களை, உறுதிமொழிகளை நாம் நம்பப்போவதில்லை, ஆனால் அதே சமயம் உள்ளூர் அரசியல்வாதிகளால் நாம் தேவையான அளவு குழப்பப்பட்டிருக்கிறோம். ஜாதி அல்லது மதம் நம்முடைய வாக்குகளைத் தீர்மானிக்கிறது. அதன் பெயரால் நாம் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம். மதசார்பின்மையைப் பேசுகிற கட்சி தனது வேட்பாளர்களை அந்தந்தப் பகுதியில் வாக்குகள் அதிகமுள்ள சமுதாயத்திலிருந்தே அல்லது மதத்திலிருந்தே தனது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. மதவாதக்கட்சி என்று அறியப்படுகிற கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்தத் தேர்தலே மதவாதத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரே நடக்கிற யுத்தம் என்பதாக சித்தரிக்கப்படுகிற இந்த குடுமிபிடிச்சண்டையில் நாம் மாறாமல் ஒரு குணத்தை விடாமல் பிடித்துத்தொங்கிக்கொண்டிருக்கிறோம். அது “சகிப்புத்தன்மை”

      பாராளுமன்றத்திற்கு நாம் சென்றமுறை அனுப்பிய 40 பேரில் பாராளுமன்றம் நடைபெற்ற நாட்கள் அத்தனைக்கும் ஆஜரானவ்ர் ஒரே ஒரு நபர்தான் என்பதை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். நம்மை முன்னிலைப்படுத்தி, நமக்கான குரல்கொடுக்க நாம் அனுப்பிய நபர்களுக்கு, பாராளுமன்றத்தில் சென்று குரல்கொடுக்கக்கூட வேண்டாம், உண்மையிலேயே அங்கு என்ன நடக்கிறது என்பதைக்கூடச் சென்று பார்க்க நேரமில்லாமல் போவதை நாம் பொறுமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோமே, அதன் பெயர் என்ன? இதற்கெல்லாம் உச்சமாக எம்,பிக்களுக்கு என்று தொகுதிமேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டிருந்த சில கோடி ரூபாய்களைக்கூட அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?
இவையெல்லாம் தினமும் நீங்கள் பத்திரிகைகளில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள்தான், இது ஒன்றும் புதிய தகவலாக இருக்கப்போவதில்லை, ஆனாலும் வாக்குச்சாவடியின்முன் நிற்கின்ற இந்த தருணத்தில் இவைகளையெல்லாம் நீங்கள் நினைவில் கொள்ளவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கப்போகிறவர் ஒரு சூப்பர்மேனாக நிச்சயமாக இருக்கமுடியாது ஆனால் அடிப்படை கடைமையுணர்ச்சி உள்ளவராக, நாட்டு முன்னேற்றம் குறித்து கவலைகொள்பவராக, மக்கள் முழு பாதுகாப்போடு வாழ்வதை உறுதி செய்யக்கூடியவராக, நாம் எளிதில் அணுகக்கூடியவராக, பாராளுமன்றம் என்கிற மாபெரும் சபையில், நாகரிகம் பேணுபவராக, நமக்கான உரிமைகளுக்காக ஒருமுறையேனும் குரல்கொடுப்பவராக, இருந்தால், இ..ரு…ந்…தா…ல் நமக்கும், நாட்டுக்கும் நல்லது. அதற்கு நீங்கள் உங்களாலான உதவியைச் செய்ய வேண்டும். தயங்காமல் வாக்களிக்க வேண்டும். நன்றி.
                                         இப்படிக்கு
                               ஒரு அப்பாவி வாக்காளன்.