வாக்காளன் அப்பாவி அல்ல
இனி கேள்விகள் எழுகின்றன. மதசார்பின்மையை ஒரு வலுவான ஆயுதமாகப்
பயன்படுத்திய எல்லாக் கட்சிகளும் தோற்றிருப்பது, வாக்காளன் மதசார்பற்றவனாய்
இருப்பதை விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறதா? அப்படியானால் எல்லா தரப்பு மக்களும்
காவிக்கு வாக்களித்திருப்பது எதனால்? மதசார்பின்மை என்கிற போர்வைக்குள்
மதம்பிடித்தலைகிற கட்சிகளைவிடவும், நான் மதச்சார்புடையவன் என்று அறிவித்துவிட்டு
ஓட்டுக்கேட்கிறவனே நம்பிக்கையானவன் என்று மக்கள் தீர்மானித்துவிட்டார்களா? இல்லை
கடந்த பத்தாண்டுகளில் நடந்த மதப் படுகொலைகளுக்கு ஆளும்கட்சியின் மெத்தனப்போக்கே காரணம்
என்று தீர்மானித்து விட்டதனாலா? வாக்காளனின் கூர்மையான அவதானிப்பில் ஆளும்
கட்சியும் அதன் பொம்மைப்பிரதமரும் இந்த நாட்டைக்குறித்துக் கொள்கிற கவலைகளை
விடவும் மற்ற விஷயங்களில் செலுத்திவந்த கவனம் கணக்கிலெடுத்துக்
கொள்ளப்பட்டிருக்கிறது என்பதே இந்த தேர்தல் முடிவுகள் நமக்குச் சொல்லும் தீர்ப்பு.
அனைத்து மதத்தினருக்கும், பல்வேறு நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்களுக்கும் ஒரே தீர்வாக
நமது புதிய பிரதமர் விளங்குவாரா? என்பதே இப்போது நம்முன் உள்ள ஆகப்பெரிய கேள்வி.
சில பதில்களுக்காக நாம் காத்திருக்கிறோம். இந்தியாவை மிகவும்
அச்சுறுத்திக்கொண்டிருக்கிற உள்ளூர் தீவிரவாதம், மாவோயிஸ்டுகள். வாழும் நிலங்கள்
அபகரிக்கப்பட்டதால், காடுகளின் கனிம வளம் விற்கப்பட்டுவிட்டு அதனால் சமவெளிக்கு விரட்டப்பட்ட
பழங்குடியினரின் கோபம் தணிப்பது எவ்வாறு? சீனர்களின் பாகிஸ்தானியர்களின்
எல்லைதாண்டிய ஊடுறுவலை எப்படிச் சமாளிப்பது? தமிழக மீனவர்கள் படுகொலை
செய்யப்படுவதை எப்படித் தடுப்பது? மாநிலங்களிடையே நீர்ப்பங்கீடு அமைதியான முறையில்
எப்படிச் செய்வது? நாட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் குடிநீர், மின்சாரம் வழங்க
மேற்கொள்ள வேண்டிய தொலைநோக்கு நடவடிக்கைகள் என்னென்ன? நாட்டின்
நிதிப்பற்றாக்குறையை எப்படிச் சீராக்குவது? இறக்குமதி- ஏற்றுமதி ஏற்றத்தாழவை நீக்க
என்ன செய்யவேண்டும்? மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுக்குள்
வைத்திருக்க என்ன நடவடிக்கை தேவைப்படும்? சுற்றுலாவின் மூலம் வெளிநாட்டுப்
பயணிகளைக் கவர இன்னும் என்னென்ன திட்டங்களை நடைமுறைப்படுத்தலாம்? இன்னும்
ஆயிரமாயிரம் பதில்களுக்கு பிரதமர் தன்னை தயார்படுத்திக்கொள்ளவேண்டிய அதே நேரம்,
மதசார்பற்ற ஒரு நாட்டில் எல்லாமதத்தினரும் பாதுக்காப்பாக வாழ வகைசெய்ய
வேண்டியவரும் அவரே!
எதிர்பார்ப்புகள் அனைத்தையும் அவரால் நிறைவேற்ற இயலும் என்பது
ஓட்டளித்தவர்களின் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அதற்கு உத்தரவாதமிருக்கச்
சாத்தியமில்லை. ஒரு எதற்கும் லாயக்கற்ற அரசை, செயல்படத்தயங்கிய ஒரு அரசை
அகற்றியிருக்கிறார்கள் என்றால், செயல்பாடு முக்கியம் என்பதை சொல்லாமல்
சொல்லியிருக்கிறார்கள். அதுவும் நாட்டின் பல முக்கிய ஊழல்களில்
சம்பந்தப்பட்டிருக்கிற அரசியல்வாதிகளின் மேலான கடுமையான நடவடிக்கையில், அச்சுறுத்தும்
தீவிரவாதத்தை அடக்குவதில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மற்றும்
விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருப்பதில்.
வாக்காளனுடைய மனபாரம் கொஞ்சம் குறைந்திருக்கிறது. கொஞ்சநாள்
அவன் அமைதியாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். அவன் விரும்பிய மாற்றம் ஏற்படுவதற்கான
அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும்வரை நம்பிக்கையோடு காத்திருப்பான்.ஒருவேளை அப்படி
எதுவும் நடக்காமல்போனால், வழக்கம்போல அவன் வேலையைப்பார்த்துக்கொண்டு போவான். என்ன
செய்வது அடுத்த ஐந்தாண்டுகளுக்குப்பிறகு மீண்டும் ஓட்டுச் சாவடிக்குள்
நுழையும்நாள்வரை சாப்பாட்டிற்கு வழிசெய்ய வேண்டுமே?
கருத்துகள்
கருத்துரையிடுக