சனி, 10 நவம்பர், 2012

சண்டே ஸ்நாக்ஸ் 3 • பேச்சுவழக்கிலுள்ள வார்த்தைகளில் சில எல்லோரும் அதிகம் பயன்படுத்துபவையாக இருக்கும். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒருசில வார்த்தைகள் அதிகமாகப் புழங்கும். திருநெல்வேலியில் அண்ணவும் மதுரையில் அண்ணேவும் சென்னையில் அண்ணாவும் போல ஒரே வார்த்தை வெவ்வேறு தொனிகளில் உச்சரிக்கப்படுவதுமுண்டு. ஆங்கிலவார்த்தைகள் அன்றாட வாழ்வின் பேச்சுபோக்கில் கலந்தபிறகு ஏரியாவேறுபாடின்றி ஒரே உச்சரிப்பில் எங்கும் புழங்கும் சமத்துவ வார்த்தைகளாக சிலவும் நிலவிவருகின்றன. அப்படி ஒரு வார்த்தை லூசு’. நீங்கள் பஸ்ஸிலோ ரயிலிலோ பிரயாணம் செய்யும்போது அல்லது காத்திருக்கும்போதோ இந்த வார்த்தையை யாராவது யாரிடமாவது சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு தானிருப்பீர்கள். செல்ஃபோனில் பறிமாறப்படுகிற 25 வார்த்தைகளில் இது இரண்டுமுறை இடம்பெறும். பேசிக்கொள்பவர்கள் காதலர்களானால் இதன் எண்ணிக்கை 10ஐத்தாண்டும். லூசு என்பது தமிழ்வார்த்தையா என்று சொல்லுங்கண்ணே சொல்லுங்கஇமான் அண்ணாச்சியிடம் சொல்லி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள் சத்தியம் செய்வார்கள் தமிழ்தானென்று. என் மகள் அவள் பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தாள், அப்பா, ஸ்கூல்ல இல்லப்பா, அந்த லூசு சயின்ஸ் டீச்சரு, லூசுத்தனமா ஒரு ஹோம்வொர்க் குடுத்திச்சுப்பா. தெர்மோகோல்ல ஒரு ராக்கெட் லாஞ்ச்பேட் செய்யணுமா, அதில லூசா இல்லாம டைட்டா ராக்கெட்ட வேற ஃபிக்ஸ் பண்ணனுமாம். அஸ்ட்ரொநட்ஸ், ஸ்டேண்ட், அது இதுண்ணு எல்லாமே அதில இருக்கணுமா, அதயும் நாளைகே செஞ்சு எடுத்துட்டு வரணுமாம். அந்த லூசு சொல்லிட்டேபோகுது, அதுக்கு இந்த லூசுங்களும் சரிசரிண்ணு தலய ஆட்டுதுங்க. எனக்கு கண்ணைக்கட்டிக்கொண்டு வந்தது, கண்களைமூடி சாய்ந்து அமர்ந்தேன். ‘அம்மா இந்த லூஸப் பாரேன் நான் சொல்லிடே இருக்கேன், அது பாட்டுக்கு தூங்குது.... 

 • ·         யாரோடோ செல்ஃபோனில் பேசிக்கொண்டிருக்கிற அப்பா அப்போதுதான் கவனிப்பார், குட்டிமகள் கரடிபொம்மையோடு ஏதோ தனியாகப்பேசிக்கொண்டிருப்பாள். கரடியின் பின்னால்போய் அவ்ளுக்குத் தெரியாமல் அமர்ந்துகொள்வார். இப்போது அவள் க்ரீம்பிஸ்கட்டை எப்படிச் சாப்பிடுவது என்று பொம்மைக்கு விளக்கிக்கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டு, அவள் கரடியைக் கை நீட்டச்சொல்லும்போது அப்பா கை நீட்டுவார். மகளுக்கு அப்பா ஒளிந்திருக்கிறார என்று தெரிந்தபிறகும் விளையாட்டு தொடரும். அப்புறம் பிஸ்கெட்டின் ஒருபகுதியை நக்கச்சொல்லும்போது அப்பா முகம் காட்டுவார், அப்போது மகள் அதுவரை தெரியாத்துபோல் ‘அட நீயா ஒளிஞ்சுக்கிட்டிருக்கேஎன்பதுபோல் சிரித்துக்கொண்டே கை ஆட்டுவாள். வாழ்வின் அற்புத தருணங்கள் அவை. குழந்தைகளின் உலகத்துக்குள் பயணித்துவிட நேர்கிர தருணங்களை நல்ல விளம்பரங்களே நமக்கு உருவாக்கித்தருகின்றன. ஒரியோவின் விளம்பரங்களில் அதுகொஞ்சம் அதிகமாகவே வெளிப்படும். அந்த வரிசையில் கண்ணைக்கட்டிக்கொண்டு ஒரியோ சாப்பிடும் இந்தக்குழந்தைள் ஒரியோவின் சமீபத்திய வரவு, தமிழில் இன்னும் வரவில்லை.


    

   •    நவீன உலகில் பெண்கள்நிலை எனபதில் இன்னும் தீராத பழமையும், அதிநவீனமும் கலந்தே காணப்படுகிறது. இணையத்தில் சுதந்திரமாக உலவுவதில் பெண்கள் எதிர்கொள்கிற சங்கடங்களும், ஆண்கள்மேலான பாலியல்சார்ந்த பழிகளுமாக ஒருவரையொருவர் புரிந்துகொள்வதில் இருக்கிற உளவியல் சிக்கலில் இருந்து நம்மால் விடுபடமுடியவில்லையோ என்று எண்ணத்தோன்றுகிறது. இது நம்முடைய கர்வத்தை அதிகப்படுத்தி வழக்கு, விசாரணை என்று தொடர்கிறது. கருத்துகள் ஏதுமற்றவராக இருப்பவர் இணைய உலகில் உலவும் சாத்தியங்களை இழககிறார். எது எப்படியாயினும் ஆண்மனோபாவம் பெண்களின்மீதான ஒருபடிகுறைந்தபார்வையைத்தான் இன்னும் தொடர்கிறதோ என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்கமுடியவில்லை. என் எஸ் கிருஷ்ணன், டி.ஏ மதுரத்திடம் அந்தக்கால, இந்தக்காலப் பெண்களை ஒப்பிட்டு சொல்லிக்கொண்டிருப்பார்,                                                                                                                                                         ”அவ காட்டுக்குப் போவா, களையெடுப்பா,காரியம் பாப்பா, கஞ்சி குடிப்பா இவ கண்ணாடி பாப்பா, ஊரச்சுத்துவா,                          காருல போவா, காப்பி குடிப்பா                                                                 
        அது 1960 காலமாக இருக்கலாம்.

திங்கள், 5 நவம்பர், 2012

ரிமோட் கண்ட்ரோல்
சேனல்சுப்ரமணி

 • காலையில கடவுள்வணக்கம் ரொம்ப முக்கியம்டா சுப்ரமணிண்ணு நம்ம தெக்குத்தெரு திண்ணவீட்டு ஆச்சி சொல்லுவாக, அஞ்சறைக்கெல்லாம் ‘மலர்போல மலர்கின்ற மனம்வேண்டும்தாயேண்ணு ஆரம்பிச்சுருதான் விஜய்யில, ஏழறவர பக்தித்திருவிழா, வீடுதேடிவருவான் விட்டலன், பாரதக்கதைகள்னு நல்ல ஆரம்பந்தான். கேக்கதுக்குச் சொகமாத்தான் இருக்கு, கதைக்குள்ள இத்தனகதயா?ண்ணு ஆச்சர்யப்பட்டான் சொக்கு. கேக்கதுக்கே நமக்கு இப்படியிருக்கே, அதெல்லாம் எழுதிவச்சுருக்காவளே, அவுகளுக்கு எப்படி இருந்திருக்கும்ணேன் நான். என்னசொல்லுதிய, அட கண்ணன், ராமன்லாம் இருக்காவ அல்லது இல்ல, ஆனா அதெயெல்லாம் ஒரு கதையா யோசிச்சு நம்ம பயலுவளுக்கு படிக்கதுக்கு கொடுக்கணும்னு தோணுச்சுபாத்தியளா, அதச் சொல்லணும்.
 •  இந்தவாரம் பேர்கிரில்ஸு ஒரு பூச்சிய திண்ணாரு, நல்ல பெரிய பூச்சி, ஏகப்பட்ட காலுவளும், கொடுக்குமா இருந்திச்சி. கொடுக்கக்கடிச்சு துப்பிட்டு முகத்தச் சுளிச்சுகிட்டே சாப்ட்டு முடிச்சாரு. ‘இது பயங்கரமா நாருதுண்ணு சொல்லிக்கிட்டெ திண்ண அவரோட மனசு அப்போ என்ன நெனைச்சிருக்கும்ணு யோசன பண்ணேன். காடுகரைகள்ல, மக்கமனுஷங்க இல்லாத இடத்துல தனியா மாட்டிக்கிட்டா எப்படி தப்பிக்கணும்னு சொல்லித்தாராரு, திருநவேலியத்தாண்டாத(நான் என்னச் சொல்லுதேன்) நமக்கு இல்ல, பலநாடுகள்ல வாழற ராணுவவீரங்களுக்கு இந்தச்சேதி ரொம்ப உபயோகப்படும்னு சொல்லுதாங்க. அதுக்கு அவருகொடுக்குற வில ரொம்ப அதிகம்தான்ணு தோணும். ஆகாசத்துல இருந்து குதிக்கம்போது, பாராச்சூட்ட அறுத்துவிடறது, முதலைக நிறைஞ்சிருக்கிற ஏரில குதிக்கிறது, கொதிச்சுகிட்டிருக்க எரிமலமேல நடந்துபோறதுண்ணு எல்லாமே சாவோடமொகத்த கிட்டத்துல பாக்கறமாரித்தான். எனக்கு ஸ்டீவ் இர்வினோட ஞாபகம்வாறத தடுக்கமுடியல. 
 •  
 •                                   
 •  
 •   செஃப் ஜேக்கப்முந்தாநாள் ராத்திரி இறந்துபோனார். அவரோட சமையல் நிகழ்ச்சிகள பொம்பளைங்க மட்டுமில்லாம ஆம்பளைங்களும் ரசிச்சுப் பாத்ததுக்கு காரணம் அவரோட ஸ்டைல் மட்டுமில்ல அழகான நீரோடயான பேச்சுந்தான். நான் கடைசியாப் பாத்தப்போ கடற்கரையோரம் ஒரு பாறையில ஸ்டவ்வ வச்சு ‘கணவாய் ஃபிஷ் கார்னெட்ண்ணுசொல்லி ஒரு அயிட்டம் செஞ்சு காட்டிக்கிட்டிருந்தார். அங்க மட்டுமில்ல போட்ல வச்சு, ரோட்டுல வச்சு, அருவிக்கரயில வச்சுண்ணு பல எடங்கள்ல அவரு வெரைட்டியா செஞ்சுகாமிக்கிற ஸ்டைலு இருக்கே, நமக்கு ரொம்ப புடிக்கும். தனிமனுஷனாவும் சமுதாயத்துல பசிய ஒழிக்கப்போராடணும்னு ஒரு கொள்க வச்சிருந்திருக்கார், என்ன பண்ணுதது, விதியப்புடிக்க முடியாது.
 •  

·        

 •  சன்னுல ஞாயித்துக்கெழம காலைல நம்ம சிரிப்பழகன் மதன்பாப்கொடுக்கற பல்சுவை நிகழ்ச்சி “பாட்டோட கத கேளு” நல்ல பொழுதுபோக்கு. முதல்ல ஒரு பாடகரோட பாட்டு, அப்புறம் கொஞ்சம் சிரிப்பு, கடைசியா பிரபலம் ஒருத்தரோட பேட்டின்ணு கலவயா கொடுக்காரு. அவரு சிரிக்கிறத கொறச்சுக்கிட்டார்னா நம்ம நல்லா சிரிக்கலாம். சமீபத்துல மனோ அப்புறம் பி.பி.ஸ்ரீனிவாஸ் ரெண்டுபேரோட பேட்டியும் நல்லா வந்திருந்திச்சி.
 •  

·        

 •  தொலைக்காட்சி தோன்றுன நாள்ளயிருந்து இண்ணேவரைக்கும் ஒரு நிகழ்ச்சி தொடர்ந்து நடக்குதுண்ணா அது பிஎச் அப்துல்ஹமீது நடத்துத பாட்டுக்குப்பாட்டுதான். அதே ஆர்வம் கொஞ்சங்கூடக்குறையாம தொடர்ந்து அவர் நடத்திகிட்டு வர்றதுக்காவேண்டியே கண்டிப்பா பாக்கணும். ஒருகாலத்துல சிலோன் ரேடியோவுல நடத்தும்போது இருந்த கண்டிப்பு இப்போஇல்ல, நெறைய விட்டுத்தான் புடிக்கிறாரு அனாலும் நம்ம ஆளுக அஞ்சு பாட்டத்தாண்ட மாட்டங்காக, என்ன பண்றது? நம்ம தமிழ்சினிமாப் பாடல்கள் அத்தனயயும் அதன் முழுவெவரத்தோடு தெரிஞ்சு வச்சிருக்கிற ஒரே ஆத்மா, அவர்தான். நாம அவர சரியா பயன்படுத்திக்கலயோ?

என்ன பாக்கிறிய எனக்குத்தெரிஞ்சத, ஏன் பாஷயில எழுதிருக்கேன். புடிச்சிருந்தா கீழ உள்ள பொட்டியில ஒரு ஓட்டப் போட்டுருங்க, புடிக்கலயா ஏதாவது திட்டணும்னாலும் கீழ தனியா ஒரு பொட்டி இருக்கு அதில திட்டலாம். அடுத்த செவ்வா வாறேன். வர்ட்டா!!

சனி, 3 நவம்பர், 2012

சண்டே ஸ்நாக்ஸ் 2·         ஐடியா மேக்ஸ் த மான்என்பார்கள். மனிதனின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் புதிய ஐடியாக்களை செயல்படுத்திப் பார்த்ததன் விளைவுதான். அப்படித்தான் அவன் ரூபாய்நோட்டுகளை எண்ணுவதற்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். வங்கிகளிலும் அதிகம் பணம்புழங்கும் அலுவலகங்களிலும் அதைப்பயன்படுத்தத் துவங்கினார்கள். என்றாலும் யாரும் அதை நம்புவதில்லை. எவ்வளவு கூட்டம் காத்திருந்தாலும் காசாளர்கள் ஒருமுறை கையால் எண்ணிவிட்டு பின்பு இயந்திரத்தில் போட்டு எண்ணி மீண்டும் ஒருமுறை கையால் எண்ணி அதன்பிறகே அந்தத்தொகை சரியாக இருக்கிறது என்று முடிவுக்கு வருவார்கள். சமீபத்தில் ஒருநாள் பணம் கட்டுவதற்காக் தொலைபேசி அலுவலகம் சென்றிருந்தேன். அங்கு இதுபோன்ற ஒரு இயந்திரமிருந்தது. பணம் வசூலிக்கிற பெண்மணி சற்றே வயதானவராக இருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர் பணத்தை அவரிடம் கொடுத்தார். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லறைகளுமாக இருந்த அவற்றில் சில்லறை நோட்டுகளை தனியே வைத்துவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளையும் இரண்டு முறை(??) எண்ணியபிறகு அந்த பணமெண்ணும் இயந்திரத்தில் போட்டார். அது 2 என்று ஒளிர்ந்தது. காசாளர் திருப்தியடைந்து, ரசீது பிரிண்ட் செய்வதற்கான பொத்தானை அழுத்தி ரசீதை எடுத்துக் கொடுத்தார். அதன்பின் எனதுமுறை, ஆயிரத்துப் பதினோரு ரூபாய்களை சில்லறையாக பதினோரு ரூபாயும் ஒரு 1000 ரூபாய் நோட்டையும் கொடுத்தேன். காசாளர் 1000 ரூபாயை உயர்த்தி வெளிச்சத்திற்கு நேரே பிடித்து ஆராய்ந்தார். அதன் நான்குமுனைகளையும் நீவி விட்டார். என்னை ஒருமுறை பார்த்தார். நான ரசீதுக்காக கையை நீட்டினேன், அவ்ர் அமைதியாக அந்த ஒற்றை நோட்டை பணம் எண்ணும் இயந்திரத்தில் போட்டார், அது மறுபுறம் வந்து விழுந்தது, அதன் டிஜிட்டல்திரையில் 1 என ஒளிர்ந்தது.         

                                        
·         சினிமா என்பது எப்போதுமே பிரமிப்பானதாகவே எனக்கு தோன்றியதற்கு காரணமிருந்தது. சின்னவயதில் குற்றாலம் பகுதிகளில் எடுக்கப்பட்ட பல படத்தின் ஷூட்டிங்குகளை நேரில் பார்த்ததும் ஒரு காரணம். என்னோடு படித்த பல தோழர்களின் ஆதர்சமாக விளங்கிய ரஜினிகாந்த்தை திடீரென்று செங்கோட்டையில் ஒரு பெட்ரோல்பல்க் கில் (கழுகு பட ஒளிப்பதிவு) பார்த்துவிட நேர்ந்தது புல்லரிப்பை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது. ஆனால் என் மனம்கவர்ந்த ஆளுமையான கமலை என்னால் நேரில்பார்க்க முடியாமலேயே போய்க்கொண்டிருந்தது. ஒருமுறை புன்னகைமன்னன் ஒளிப்பதிவிற்காக வந்திருந்ததாக அறிந்து எவ்வளவோ முயற்சி செய்தும் ஸ்ரீவித்யாவும், ரேவதியும்தான் காணக்கிடைத்தார்கள். அதற்கு ஒரு சந்தர்ப்பம் நான் ஏர்ணாகுளத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கிடைத்த்து. 10 வருட இடைவெளிக்குப்பிறகு கமல் ஐவிசசியின் ஒரு மலையாளப் பட்த்தில் நடிப்பதாகவும், அந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு பாரத் டூரிஸ்ட் ஹோம் என்கிற பெரிய ஹோட்டலில் நடப்பதாகவும் அறிந்தபிறகு போகாமலிருக்க முடியுமா, போனோம். பெரிய ஹோட்டல் என்றபோதிலும் எதுவும் கேள்விகேட்காமலேயே உள்ளே அனுமதித்தார்கள். மேலே அதன் மொட்டைமாடியில் படப்பிடிப்பு நடப்பதாக அறிந்து அங்கே சென்றால், அந்த இடம் ஒரு பார்ட்டிஹால் போல அலங்கரிக்கப் பட்டிருந்தது. நிறையப்பேர் அங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். கமல் சற்றுத்தொலைவில் யாருடனோ நின்றுகொண்டிருந்தார், பெரும் தயக்கத்துடன் அவரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொள்ள முயற்சிசெய்தோம், நிறையக்காற்று வெளியான பிறகு கொஞ்சம் வார்த்தைகளும் வர, ம்..ம் என்றபடியே நகர்ந்து போனார். படபடப்பு அடங்குவதற்கு முன்பே எல்லோருக்கும் ஒரு கோப்பையில் மதுபானம் (போல ஒரு பானம்) வழங்கப்பட்டது. தரையில் வட்டம்போட்டிருந்த இட்த்தில் குழுக்குழுவாக நிற்கச்சொன்னார்கள். விசில் ஊதப்பட்ட்து, தலைவர் பாடியாடத்தொடங்கினார். ‘அசுரேச தாளம், அதினாணு மேளம்என்று பாட்டு, கேமிரா எல்லாபக்கமும் சுழன்றது. அப்போதுதான் புரிந்தது கமல் பட்த்தில் நாங்களும் (குடிப்பதுபோல்) நடித்துக்கொண்டிருந்தோம் என்பது. நான் கமலுடனேயே நடித்தவனாக்கும். வ்ருதம்என்கிற அந்தப்படம் வெளிவந்தபோது முதல்காட்சியை சென்றுபார்த்து பாடலின் ஒரு ஃப்ரேமில்கூட எங்களைக் காணாமல் சோகத்தோடு வெளியேறியதற்கும் அந்தப்படம் படுதோல்வியடைந்ததற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்குமா என்ன? எதற்கும் ஒருமுறை ‘க்ளிக்’கிப் பார்த்துவிட்டு அப்புறமாய் சொல்லுங்கள்.

                                                             http://www.youtube.com/watch?v=PqkhI9MzMbI

·         புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட புதன்கிழமையன்று, ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோமே என்று மெரினா வரை போயிருந்தேன். கடல் கொந்தளித்துக் கொண்டிருந்த்து தூரத்திலிருந்தே தெரிந்தது. கடலோரம் ஒருசில தலைகளைத்தவிர, தள்ளுவண்டிக்கடை உரிமையாளர்கள் மட்டும் கடலை தூரத்திலிருந்தே வேடிக்கை பார்த்தவாறு ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். காற்று மணலைவாரியடித்துக் கொண்டிருந்தது. காற்றிற்கு முதுகைக்காட்டியவாறே பின்புறமாக நடந்து கடலை அடைய முயற்சித்தேன். மழைக்கோட்டு மறைத்திருந்ததுபோக கீழே தெரிந்த கால்களில் மணல்துகள்கள் துப்பாக்கிக் குண்டுகளைப்போலத் தாக்கிக்கொண்டிருந்தன. கடலை அடைந்தேன், இதுவரை கண்டிராத கடூரமான முகமுடையதாயிருந்தது கடல். பார்க்கச்சலிக்காதவை என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்த கடல், இன்று சகிக்கமுடியாத தோற்றம் கொண்டிருந்தது. பெரும் இரைச்சலுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலில் பயமேயின்றி நான்கைந்து சிறுவர்கள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். கேட்டபோது ‘பயமா?என்று ஹோவெனச் சிரித்தார்கள். புகைப்படமெடுத்துக்கொண்டு கிளம்பும்போது ஒருவன் அருகில்வந்து கேட்டான், அண்ணா சன்டீவில கண்டி போட்றப்போற, அப்பால அம்மா என்னப்போட்ரும், அது இந்த அலயவிட பேஜாரு” நான் சிரித்துக்கொண்டேன்.