சண்டே ஸ்நாக்ஸ் 2



·         ஐடியா மேக்ஸ் த மான்என்பார்கள். மனிதனின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் புதிய ஐடியாக்களை செயல்படுத்திப் பார்த்ததன் விளைவுதான். அப்படித்தான் அவன் ரூபாய்நோட்டுகளை எண்ணுவதற்கும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தான். வங்கிகளிலும் அதிகம் பணம்புழங்கும் அலுவலகங்களிலும் அதைப்பயன்படுத்தத் துவங்கினார்கள். என்றாலும் யாரும் அதை நம்புவதில்லை. எவ்வளவு கூட்டம் காத்திருந்தாலும் காசாளர்கள் ஒருமுறை கையால் எண்ணிவிட்டு பின்பு இயந்திரத்தில் போட்டு எண்ணி மீண்டும் ஒருமுறை கையால் எண்ணி அதன்பிறகே அந்தத்தொகை சரியாக இருக்கிறது என்று முடிவுக்கு வருவார்கள். சமீபத்தில் ஒருநாள் பணம் கட்டுவதற்காக் தொலைபேசி அலுவலகம் சென்றிருந்தேன். அங்கு இதுபோன்ற ஒரு இயந்திரமிருந்தது. பணம் வசூலிக்கிற பெண்மணி சற்றே வயதானவராக இருந்தார். எனக்கு முன்னால் நின்றிருந்தவர் பணத்தை அவரிடம் கொடுத்தார். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளும் கொஞ்சம் சில்லறைகளுமாக இருந்த அவற்றில் சில்லறை நோட்டுகளை தனியே வைத்துவிட்டு, இரண்டு 500 ரூபாய் நோட்டுகளையும் இரண்டு முறை(??) எண்ணியபிறகு அந்த பணமெண்ணும் இயந்திரத்தில் போட்டார். அது 2 என்று ஒளிர்ந்தது. காசாளர் திருப்தியடைந்து, ரசீது பிரிண்ட் செய்வதற்கான பொத்தானை அழுத்தி ரசீதை எடுத்துக் கொடுத்தார். அதன்பின் எனதுமுறை, ஆயிரத்துப் பதினோரு ரூபாய்களை சில்லறையாக பதினோரு ரூபாயும் ஒரு 1000 ரூபாய் நோட்டையும் கொடுத்தேன். காசாளர் 1000 ரூபாயை உயர்த்தி வெளிச்சத்திற்கு நேரே பிடித்து ஆராய்ந்தார். அதன் நான்குமுனைகளையும் நீவி விட்டார். என்னை ஒருமுறை பார்த்தார். நான ரசீதுக்காக கையை நீட்டினேன், அவ்ர் அமைதியாக அந்த ஒற்றை நோட்டை பணம் எண்ணும் இயந்திரத்தில் போட்டார், அது மறுபுறம் வந்து விழுந்தது, அதன் டிஜிட்டல்திரையில் 1 என ஒளிர்ந்தது.         

                                        
·         சினிமா என்பது எப்போதுமே பிரமிப்பானதாகவே எனக்கு தோன்றியதற்கு காரணமிருந்தது. சின்னவயதில் குற்றாலம் பகுதிகளில் எடுக்கப்பட்ட பல படத்தின் ஷூட்டிங்குகளை நேரில் பார்த்ததும் ஒரு காரணம். என்னோடு படித்த பல தோழர்களின் ஆதர்சமாக விளங்கிய ரஜினிகாந்த்தை திடீரென்று செங்கோட்டையில் ஒரு பெட்ரோல்பல்க் கில் (கழுகு பட ஒளிப்பதிவு) பார்த்துவிட நேர்ந்தது புல்லரிப்பை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது. ஆனால் என் மனம்கவர்ந்த ஆளுமையான கமலை என்னால் நேரில்பார்க்க முடியாமலேயே போய்க்கொண்டிருந்தது. ஒருமுறை புன்னகைமன்னன் ஒளிப்பதிவிற்காக வந்திருந்ததாக அறிந்து எவ்வளவோ முயற்சி செய்தும் ஸ்ரீவித்யாவும், ரேவதியும்தான் காணக்கிடைத்தார்கள். அதற்கு ஒரு சந்தர்ப்பம் நான் ஏர்ணாகுளத்தில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கிடைத்த்து. 10 வருட இடைவெளிக்குப்பிறகு கமல் ஐவிசசியின் ஒரு மலையாளப் பட்த்தில் நடிப்பதாகவும், அந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு பாரத் டூரிஸ்ட் ஹோம் என்கிற பெரிய ஹோட்டலில் நடப்பதாகவும் அறிந்தபிறகு போகாமலிருக்க முடியுமா, போனோம். பெரிய ஹோட்டல் என்றபோதிலும் எதுவும் கேள்விகேட்காமலேயே உள்ளே அனுமதித்தார்கள். மேலே அதன் மொட்டைமாடியில் படப்பிடிப்பு நடப்பதாக அறிந்து அங்கே சென்றால், அந்த இடம் ஒரு பார்ட்டிஹால் போல அலங்கரிக்கப் பட்டிருந்தது. நிறையப்பேர் அங்காங்கே நின்று பேசிக்கொண்டிருந்தனர். கமல் சற்றுத்தொலைவில் யாருடனோ நின்றுகொண்டிருந்தார், பெரும் தயக்கத்துடன் அவரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொள்ள முயற்சிசெய்தோம், நிறையக்காற்று வெளியான பிறகு கொஞ்சம் வார்த்தைகளும் வர, ம்..ம் என்றபடியே நகர்ந்து போனார். படபடப்பு அடங்குவதற்கு முன்பே எல்லோருக்கும் ஒரு கோப்பையில் மதுபானம் (போல ஒரு பானம்) வழங்கப்பட்டது. தரையில் வட்டம்போட்டிருந்த இட்த்தில் குழுக்குழுவாக நிற்கச்சொன்னார்கள். விசில் ஊதப்பட்ட்து, தலைவர் பாடியாடத்தொடங்கினார். ‘அசுரேச தாளம், அதினாணு மேளம்என்று பாட்டு, கேமிரா எல்லாபக்கமும் சுழன்றது. அப்போதுதான் புரிந்தது கமல் பட்த்தில் நாங்களும் (குடிப்பதுபோல்) நடித்துக்கொண்டிருந்தோம் என்பது. நான் கமலுடனேயே நடித்தவனாக்கும். வ்ருதம்என்கிற அந்தப்படம் வெளிவந்தபோது முதல்காட்சியை சென்றுபார்த்து பாடலின் ஒரு ஃப்ரேமில்கூட எங்களைக் காணாமல் சோகத்தோடு வெளியேறியதற்கும் அந்தப்படம் படுதோல்வியடைந்ததற்கும் ஏதேனும் சம்மந்தமிருக்குமா என்ன? எதற்கும் ஒருமுறை ‘க்ளிக்’கிப் பார்த்துவிட்டு அப்புறமாய் சொல்லுங்கள்.

                                                             http://www.youtube.com/watch?v=PqkhI9MzMbI





·         புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட புதன்கிழமையன்று, ஒரு எட்டு பார்த்துவிட்டு வருவோமே என்று மெரினா வரை போயிருந்தேன். கடல் கொந்தளித்துக் கொண்டிருந்த்து தூரத்திலிருந்தே தெரிந்தது. கடலோரம் ஒருசில தலைகளைத்தவிர, தள்ளுவண்டிக்கடை உரிமையாளர்கள் மட்டும் கடலை தூரத்திலிருந்தே வேடிக்கை பார்த்தவாறு ஆங்காங்கே பதுங்கியிருந்தனர். காற்று மணலைவாரியடித்துக் கொண்டிருந்தது. காற்றிற்கு முதுகைக்காட்டியவாறே பின்புறமாக நடந்து கடலை அடைய முயற்சித்தேன். மழைக்கோட்டு மறைத்திருந்ததுபோக கீழே தெரிந்த கால்களில் மணல்துகள்கள் துப்பாக்கிக் குண்டுகளைப்போலத் தாக்கிக்கொண்டிருந்தன. கடலை அடைந்தேன், இதுவரை கண்டிராத கடூரமான முகமுடையதாயிருந்தது கடல். பார்க்கச்சலிக்காதவை என்ற பட்டியலில் இடம்பெற்றிருந்த கடல், இன்று சகிக்கமுடியாத தோற்றம் கொண்டிருந்தது. பெரும் இரைச்சலுடன் ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த கடலில் பயமேயின்றி நான்கைந்து சிறுவர்கள் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். கேட்டபோது ‘பயமா?என்று ஹோவெனச் சிரித்தார்கள். புகைப்படமெடுத்துக்கொண்டு கிளம்பும்போது ஒருவன் அருகில்வந்து கேட்டான், அண்ணா சன்டீவில கண்டி போட்றப்போற, அப்பால அம்மா என்னப்போட்ரும், அது இந்த அலயவிட பேஜாரு” நான் சிரித்துக்கொண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!