சனி, 20 அக்டோபர், 2012

சுவரோடு ஒட்டிய சென்னைசென்னையையும் சுவரொட்டியையும் நீங்கள் பிரித்துப்பார்க்க நினைத்தால் அது மிகச்சிரமமான காரியம்தான். சென்னைச் சுவர்களோடு பிரிக்கமுடியாத பந்தம் கொண்டிருப்பவை ஏசியன், நெரோலாக், பெர்ஜெர்களைவிடவும் இந்த சுவரொட்டிகள்தான். கொஞ்சநாட்களுக்கு முன்னதாக ஒரு சினிமா விளம்பரம் உங்களுக்கு 21 கோடி கிடைத்தால் என்ன செய்வீர்கள்  என்று கேட்டுக் கடுப்படித்தது. இப்படிப் பொத்தாம் பொதுவாக ஒரு கவன ஈர்ப்பை ஏற்படுத்தி அப்புறம் சப்பென்று முடிப்பது ஒரு விளம்பர உத்தி. புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா, சண்டேண்ணா ரெண்டு என்று அவ்வப்போது பொதுப்பார்வையை தங்கள் பக்கம் திருப்பி பலனடைந்தவர்கள் ஏராளம். சமீபத்தில் தொலைகாட்சித் தொடர்களுக்கும் அதுமாதிரி ஒரு திடீர் திருப்பவிளம்பரங்களை சுவரொட்டிகள் மூலம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியதில் சரவணன் மீனாட்சிக்கு பெரும் பங்கு உண்டு. என் நண்பனின் 8 வயது மகள் சரவணன்மீனாட்சி திருமணம் ஒளிபரப்பான அன்று 11 மணிவரை விழித்திருந்து பார்த்துவிட்டு அயர்ச்சியாய் சொன்ன வார்த்தை “ நல்லவேளைப்பா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சது, இனிமே பிரச்சினை இல்ல  தமிழகத்தின் பெரும்பாலான மனிதர்கூடுமிடங்களிலெல்லாம் பரவலாக இந்தப் “பிரச்சினைபற்றிப் பேசப்பட்டது. எல்லாம் விளம்பர மகிமை.           சுவரொட்டிகள் எல்லாம் விளம்பரங்கள் ஆகிவிடாது. கண்ணகலங்கவைக்கும் ஃபிகரு வேணாண்டா, எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா  என்று சொல்வதிலிருந்து போஸ்டர் ஒருவன் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. சென்னையில் மிக முக்கியமானது கண்ணீர் அஞ்சலிசுவரொட்டிகள். பலபேரின் மரணம் அவர்களைத் தெரிந்தவர்களுக்கே சுவரோட்டிகளின் மூலமே சொல்லப்படுகிறது. இதில் 16 வருடங்களுக்குப் பிறகும் தொடரும் கண்ணீரஞ்சலிகள் நம்மை மலைக்க வைக்கும். இது ஒரு புறமென்றால் 92 வயதில் மறைந்த ஆயாவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் என்று அவர்கள் குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பிரசுரித்து விளம்பரித்திருந்த தொங்குதிரையில் ஆயா புள்ளியாகத்தான் தெரிந்தார். அந்தக் குடும்ப உறுப்பினர்களிலும் கொஞ்சப் பேர் உயிருடன் இல்லை.
     சினிமா சுவரொட்டிகளை அடுத்து அதிகம் தென்படுவது நிலவிற்பனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு விற்பனையாளர்களின் அறிவிப்புகள்தான். திருச்சியில் துவங்கி நெல்லூர் வரை நீளும் மனைப்பிரிவுகளை நீங்கள் கவர்ச்சியான இலவசங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன்பெற கால அவகாசத்துடன்கூடிய அழைப்பு சுவரொட்டிகளாக உங்களை அழைக்கும். இவற்றில் சில சென்னையின் பிரபல இசைக்குழுக்களின் கச்சேரிகளோடு உங்களை குதூகலப்படுத்தும். இவைகள் பெயரிலேயே உங்களை வசீகரிக்கும். அப்படி சமீபத்தில் ஒட்டப்பட்டிருந்த ஒரு மனைப்பிரிவின் பெயர் பத்மஸ்ரீ டாக்டர் கமல்ஹாசன் ஹைவேசிட்டி. சுவரோட்டிகளில் எட்டுக்கு நாலு இஞ்ச் அளவுள்ள மூலம் பவுத்திர விளம்பரங்களிலிருந்து பனிரெண்டுக்கு எட்டடி மெகாசைஸ் வரை ஒட்டுவதற்கு தோதான இடமாக மெட்ரோ ரயிலின் தூண்கள் விளங்குவது சென்னையின் சிறப்பு.                                      
       சுவரொட்டிகளிலேயே அதிர்ச்சியூட்டும் பவர்ஸ்டார் கொஞ்ச நாட்களாக செயல்படாததால் அந்த வேலையை நம்ம எஸ்ஜே சூர்யா செய்தார். இசை என்கிற அவருடைய அவரே எல்லாம் செய்கிற படத்துக்கு அவர் செய்திருந்த விளம்பரம் கொஞ்சம் அதிர்ச்சி ரகம்தான். படம்வெளிவந்து முடிவு தெரிந்தபின் அவரும் அதை அனுபவிக்கக்கூடும். நான் சொல்லவந்தது சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்த இரண்டு சுவரொட்டிகள். ஒன்று தமிழின் பட்டிமன்ற நடுவர், அவரின் அமெரிக்கப் பயணம் வெற்றிகரமாக முடிந்ததற்கான வரவேற்பு மற்றது கொத்தனார் தேவை என்பதற்கானது. கொத்தனார் என்றால் வீடுகட்டுவதற்காக இல்லை அப்படி நடிப்பதற்கு

கொத்தனார்கள்..ஸாரி, அப்படி நடிக்கத்தெரிந்தவர்கள் உடனே அணுகவும்.           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக