ஞாயிறு, 28 அக்டோபர், 2012

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!      ஊரெல்லாம் உங்க பேச்சாத்தாம்ணே கெடக்கு, பத்திரிகைக்காரவுங்கள போடாங்கறமாரி ஏதோ சொல்லிட்டீங்களாம். சொல்லத்தான் சொல்லுவீங்க, பின்னாடியே தொரத்திக்கிட்டே இருந்தா? ஒரு மனுஷனுக்கு தாங்கமுடியாத வேதனயான நேரத்துல, அடுத்து என்ன செய்யலாம்ணு முடிவெடுக்க முடியாத இக்கட்டான சூழ்நிலயில என்னயக்கேட்டாலும் இப்படித்தேன் கோவம் வரும். இந்தப் பத்திரிகைக்காரவுங்களுக்கு செய்தி சூடா வேணும்ணே, அவ்வளவுதான். டயானாவ வெரட்டிவெரட்டியே கொன்னவங்கதானண்ணே இவிய்ங்க. ஆனா பாருங்க பொது வாழ்க்கயில இதல்லாம் சாதாரணம்ணே, ஒங்களுக்குத் தெரியாததா என்ன, நம்ம கோவத்தக் காட்டுற எடம் இதாண்ணே, எத்தன மாசம், எத்தன சந்துபொந்தெல்லாம் நுழைஞ்சு, எவ்வளவு மக்கள சந்திச்சு, எப்படிக் கஷ்டப்பட்டு வாங்குன வெற்றிண்ணே இது. 
            10 சதவீதம் ஓட்டுண்ணா சும்மாவாண்ணே, எத்தன எத்தன அப்ளிகேஷன அலசி ஆராஞ்சு, எப்படியெல்லாம் சோதன செஞ்சு வேட்பாளர்கள தேர்ந்தெடுத்து, அவங்கள ஜெயிக்கவைக்கிறதுக்கு தொண்டதண்ணி வத்தக் கத்தி, அப்படிக் கெடச்ச வெற்றிண்ணே இது. அது மட்டுமில்லாம யார்கூட சேந்தா சட்டசபைக்குள்ள மரியாதையா நுழையற அளவுக்கு சீட்டு கிடைக்கும்னு பலப்பல கணக்குகளப்போட்டு, அதனால கிடைச்ச பல அவமானங்களயும் தாங்கிக்கிட்டு நிண்ணு கிடச்ச வெற்றி இல்லியாண்ணே. அத தூக்கிட்டு திடுதிப்புண்ணு வேற கட்சிலேபோய் சேரப்போறேண்ணா, எப்படியிருக்கும். ஏண்டா உசிரக்குடுத்து உழச்சு உன்ன செயிக்கவச்சா, நீ மசிரேபோச்சிண்ணு போவியோடா,ண்ணு கேக்கத்தோணும்ணே, ஆனா அத அந்த எம்மெல்லேக்களப் பாத்துல்லாண்ணே நீங்க கேட்டுருக்கணும்? 

                
             ஒண்ணு சொல்லட்டுமாண்ணே, எம்ஜியாரு கட்சி தொடங்கி செயிச்சு அமச்ச ஆட்சிய கலச்ச ஒடனே பாதிக்குமேற்பட்ட முன்னாள் எம் எல் ஏக்கள் தாய்க்கழகத்துக்குத் தாவினாங்களே, ஒரு தடவ கட்சியவிட்டுப் பிரிஞ்சு எதிர்க்கட்சியில இணைஞ்ச 4 பெரும்தலைகள, என் தலையில இருந்து 4 முடி கழிஞ்சதுண்ணு அப்ப அந்தக் கட்சித்தலைவர் சொல்லலையாண்ணே. அவ்வளவு ஏன், போன ஆட்சியில மந்திரியா இருந்த ஒரு பிரபலம் அதுக்கு முந்தின ஆட்சியில இருந்து இடம் மாறினவர்தானேண்ணே. எம்புட்டுக் கூத்து நடந்திருக்கு நாம பாத்துக்கிட்டுதானே இருக்கோம், அதுக்காக அப்படிப் போனவங்க திரும்பிவந்தா நாம சேக்காமலா போயிருவோம், இல்ல அதுமாரி எதுவும் மத்த கட்சிகள்ல நடக்காமதான் இருந்திருக்கா.
     எனக்கு ரெண்டு கேள்வி கேக்கணும்ணே, ஒண்ணு இவ்வளவுநாள் ஒங்ககூட இருந்தும் ஒங்க கஷ்டமெல்லாம் புரிஞ்சும் இப்ப இடம் மார்ராய்ங்கண்ணா, என்னண்ணே அர்த்தம். அவங்களுக்கு ஏதோ அதிருப்தி நம்ம எடத்துல, அப்டித்தானண்ணே, அது என்ன ஏதுண்ணு எப்பவாவது நீங்க விசாரிச்சிருக்கீங்களாண்ணே? நம்ம ஒண்ணும் அம்மா மாதிரி கட்சி நடத்தமுடியாதுண்ணே, நம்ம நம்மபயலுகள அரவணைச்சி அவங்க பிரச்சினைய தெரிஞ்சுகிட்டு, அத தீர்க்கமுடியலண்ணாலும், அவங்களுக்கு ஆதரவா பேசி, உங்கமேல நம்பிக்கய ஊட்டணும்ணே, அத எப்பவாவது செஞ்சீங்களாண்ணே? மக்களும்தான் நம்பி ஓட்டப்போட்டு உங்கள சட்டசபைக்கு அனுப்புனாங்களே அங்கபோய் அந்த அருமையான எதிர்கட்சித் தலைவர் பதவிய வச்சுக்கிட்டு ஆறுமாசம் மவுனமா அப்படி என்னண்ணே பண்ணிட்டிருந்தீங்க. ஒங்களுக்கு கோவம்எல்லாம் அப்பாவிங்க மேலதாண்ணே வருது. நாட்டுல நடக்கிற எந்த விஷயமும் உங்கள அவ்வளவா பாதிக்கறதா தெரியலண்ணே. அப்புறம் எப்படிண்ணே நம்ம ஆளுகளுக்கு உங்கமேல நம்பிக்க வரும்?

                            

     அது ஏண்ணே எப்பப்பாத்தாலும்  அண்ணியையும், மச்சானயும் கூட்டிக்கிட்டே அலயுறீங்க, அதுக்கு நீங்க கவர்னரோ, வெளிநாட்டுட்டுத் தூதுவரோ இல்லண்ணே. நல்ல பழுத்த அரசியல்வாதிகளோட துணைதாண்ணே உங்களுக்கு இப்ப தேவை. ஒரு நல்லது பொல்லது எடுத்துச்சொல்ல,சமநிலையோட சிந்திக்கற, எதிர்கால வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான செயல்கள செய்ய நமக்கு வேண்டியது அவங்கதாண்ணே. கைய விடுங்கண்ணே, ஏர்போர்ட்டுல நீங்க கைய ஆட்டிக்கிட்டு கத்திக்கிட்டே நடந்துவந்ததப் பாக்கும்போது நம்ம சோளக்கொல்லையில் காக்கா விரட்டுதமாரியே இருந்துதுண்ணே, அண்ணே கட்சியக் காப்பாத்துங்கண்ணே!
இப்படிக்கு,
உங்கள மலையா நம்பிக்கிட்டிருக்கும்
கூமாப்பட்டி வேலுக்குட்டி.

சனி, 27 அக்டோபர், 2012

சண்டே ஸ்நாக்ஸ்


     
         வழக்கமாய் நான் அலுவலகம் செல்லும் வழியில் (வேளச்சேரி-ஜிஎஸ்டி ரோடு) ஒரு குறிப்பிட்ட திருப்பத்தில் தினமும் யாராவது ஒருவர் பைக்கில் பெட்ரோல் இல்லாமல் வண்டியைச் சாய்த்துப் படுக்கவைத்து பெட்ரோலைச் சேகரிக்க முயன்றுகொண்டிருப்பார். வாரத்தில் மூன்று நாட்களாவது காணக்கிடைக்கிற காட்சி இது. பெர்முடா முக்கோணத்தில் காணாமல்போகிற கப்பல்கள்மாதிரி இது என்னடா, இந்த இட்த்திற்கு ஏதேனும் சிறப்பிருக்கிறதா என்று என்னையே நான் வியந்து கேட்டுக்கொள்வதுண்டு. நேற்று காலை நான் அந்த இடத்தை நெருங்குவதற்கு சற்று முன் வண்டியிலிருந்து இஞ்சின் சப்தம் மெள்ளக் குறைய ஆரம்பித்தது. நான் பெட்ரோல் அளவு மீட்டரைப் பார்த்தேன் அதன் அளவுமுள் கொஞ்சமும் மேலெழும்பவில்லை. அப்போதுதான் ஞாபகம் வந்த்து நேற்று வண்டியை நிறுத்தும்போதே இன்று காலை எடுக்கும்போது பெட்ரோல் நிரப்பி எடுத்துவரவேண்டும் என்று முடிவு செய்திருந்தது. இதற்குள் வண்டி சரியாக அந்த திருப்பத்தில்போய் நின்றது. வேறு யாராவது நிற்கிறார்களா என்று பார்த்தேன், யாருமில்லை. இன்றைய கோட்டா நான்தான் என்று விதியைநொந்துகொண்டே வண்டியைத் தள்ளிக்கொண்டே பெட்ரோல்பல்க்கை அடைந்து பெட்ரோல் நிரப்பிக்கொண்டு திரும்பினால், நான் நின்ற அதே இடத்தில் இப்போது ஒரு பல்சர்220 சாய்ந்துகிடந்த்து. சற்றுதள்ளி ஒருவர் செல்ஃபோனில் நான் எம்மார்ட்டீயெஸ் பாலத்துக்குக்கீழ... என்று பேசத்துவங்கியிருந்தார். நான் சிரித்துக்கொண்டேன். இறைவன் மிகப்பெரியவன்.  
      காலையில் எழுந்தவுடனேயே முடிவு செய்துவிடுவேன், இண்ணைக்கு ஃபுல் எஃப்ஃபோர்ட்டோட வேல செய்யணும்,. அலுவலகம் போனால் நிலவும் சூழல் கொஞசம் பொருத்து ஆரம்பிக்கலாம், என்று சொல்லும். வெட்டியாய் ஒரு ஒரு அரைமணிநேரத்தை செலவு செய்த பிறகு, வேலை செய்யலாம் என்று தோன்றும்போது டீயக்குடிச்சுட்டு தொடங்கலாமேஎன்று ஒரு குரல் கேட்கும். டீயும் தொடரும் அரட்டையும் 11.30 வரை போகும். மனது சொல்லும் ஒரேயடியா லஞ்ச்சுக்குப் பிறகு ஸ்பீடாச் செய்யணும். டைனிங்ஹாலில் நடப்புப்பிரச்சினை ஏதாவது ஓடிக்கொண்டிருந்தால் 4 மணிவரை வேலையில் மனசுகொள்ளாது, அப்புறம் மீண்டும் டீ, 6 மணிக்கு ஸ்நாகஸ்,டீ என்று 7 மணிவரை போகும். அப்புறம் உதவியாளரிடம் கேட்பேன், ‘பாலாஜி போயாச்சுல்ல, வின்செண்ட், மோகன், ஆரெஸ் மோகன்?என்று எல்லோரையும் விசாரித்துவிட்டு, நேற்றைப்போலவே இன்றும் ப்ரோக்ரஸ் ரிப்போர்ட்டை எழுத ஆரம்பிப்பேன். ’டுடேஸ் ஓவரால் மான் பவர்..உதவியாளரின் ‘சார் போகசொல்லோ லைட் ஆஃப் பண்ணிட்டு போ சார்’ என்ற குரல் காற்றில் கரையும். இரவு 10 மணிக்கு வீட்டுவாசலில் பைக்கை நிறுத்தும்போது கேட்கிறகுரல் கொஞ்சம் ‘கர்ணகடூரரகம் ’அப்படி என்னதான் வேலபாக்குறாரோ உங்க அப்பா, அந்த ஹேண்ட்பேக் கிழிஞ்சுருக்கு, அத மாத்தித்தாங்கண்ணு தினசரி புலம்பறேன். ஆஃபீசக் கட்டிக்கெடந்தே அழறாரு, வீட்டுவேல ஒண்ணையும் கவனிக்கறதில்லமனசுக்குள் சிரித்துக்கொண்டே வெளியே முகத்தை களைப்பாக மற்றிக்கொண்டு ‘ஒரு காஃபி கொடுறா செல்லம்’.      
  படைப்புகளில் ஆச்சர்யமானது எது என்று கேட்டால் நான் எறும்பு என்பேன். எங்கள் வீட்டைச்சுற்றி நான்கைந்துவகை எறும்புகள் அலைகின்றன. எல்லாமே உருவம் மற்றும் நிறங்களால் வெவ்வேறானவை. தொடர்ந்து எங்கெங்கோ அலைந்துகொண்டிருக்கும் அவைகள் நம் வழியில் குறுக்கிடாதவரை நமக்கு எந்தப்பிரச்சினையுமில்லை. அவை நம்மை அண்டிவாழ்பவை தவிர பெரிய தீங்குசெய்யாதவை எனவே அவைகள் தாராளமாக என்வீட்டில் நடமாட, நடனமாட நான் அனுமதித்துள்ளேன். சுறுசுறுப்பிற்குப் பெயர்போன எறும்புகள் கடைப்பிடிக்கும் ஒழுங்கு மிக ஆச்சர்யமானது என்பதே நான் கண்டுபிடித்த உண்மை. சர்க்கரை டப்பாவைத் திறந்துவைத்தால் என்ன ஆகும், முழுவதும் மொய்க்கும் எறும்புகள், அருகிலேயே ஒரு ஜிலேபியை வைத்துப் பாருங்கள், திரும்பியே பார்ப்பதில்லை. தேங்காய் மூடியை கொஞ்சநேரம் தனித்திருக்கவிட்டால் அந்த தேங்காயே கண்ணுக்குத் தெரியாதவாறு சூழ்ந்துகொள்ளும் எறும்புகள், சர்க்கரையைக் கண்டுகொள்வதில்லை. அதுபோலவே, தேங்காய் எண்ணெயை மொய்க்கும் எறும்புகளும். இது தவிர அரிசிச் சோற்றை மொய்ப்பவை, கீழே சிந்துகிற உணவுப்பண்டங்களை உண்பவை, இறந்துகிடக்கிற ஈசல் போன்றவற்றை இழுத்துச் செல்பவை எல்லாம் வேறுவேறு வகைகளாகவே இருக்கின்றன. இவை எல்லாவற்றையும்விட கம்பு இவற்றிற்கு மிக விருப்பமான ஒன்றாக இருப்பது அதிசயம். கம்பை எப்போது வாங்கிவந்தாலும் உடனே உபயோகப்படுத்திவிடுகிறோம். எங்கு ஒளித்துவைத்தாலும் ஆபத்துதான். ஆனால் இவை எதானாலுமே தொடப்படாத ஒன்று என்றால் அது நெய்’.  கிராமத்தில் நாங்கள் பிள்ளையார் எறும்பு என்றழைத்த படுவேகமாக இயங்குகிற கறுப்பெரும்புகள் இங்கே சென்னையில் காணப்படவில்லை. அட எறும்புதானே என்று அலட்சியப்படுத்தாமல் கொஞ்சம் கவனியுங்கள், நிறைய தெரிந்துகொள்வீர்கள்.                                     
காத்துக்கறுப்பு ரசிகர்மன்றத்தலைவர் ஆவேசம்.                          

      நடிகர் காத்துக்கறுப்பு தனது ஊரில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்துகொள்வதற்காக செல்லும்வழியில், அவருடைய தொகுதி வார்டுஉறுப்பினர்கள் அவரைச் சில கேள்விகள் கேட்கமுயற்சித்தனர். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் வார்டு உறுப்பினர் ஒருவர் கீழே விழுந்தார். இந்த சம்பவம் பற்றி அவரது ரசிகர்மன்றத்தலைவரும் அவரது மச்சானுமான கூத்துப்பட்டியான் நமக்கு அனுப்பியுள்ள செய்தி பின்வருமாறு  ”அண்ணன் காத்துக்கறுப்பு பக்ரீத்பிரியாணி சாப்பிடுவதற்காக குடும்பத்தோடு குப்பாம்பட்டி செல்லும்போது, இந்தக் கிரகம் புடிச்ச வார்டுமெம்பெர்கள் உள்ள புகுந்து ‘உங்க சட்டைல என்ன கிழிசல்?’ ‘பட்டாபட்டி எதும் புதுசா எடுத்திருக்கீங்களா?’ண்ணெல்லாம் கேள்விகேட்டதில் அண்ணன் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதுபோன்ற பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்ளச் செல்லும்போது, அதுவும் நல்ல பசியோடு செல்லும்போது இதுமாதிரியான கேள்விகளைத்தவிற்குமாறு, முடிந்த அளவு அவ்ரை அணுகுவதையே தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மீறிச்செய்யப்படும் முயற்சிகளில் ஏற்படும் சேதாரங்களுக்கு கம்பெனி பொறுப்பாகாது என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.                                                                                                                                   

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

கொலுவோடு கொண்டாடு
      கொலு என்றால் சின்னவயதில் கிராமத்தில் இரண்டே இரண்டு வீடுகளில் மட்டும் வைக்கப்பட்டிருக்கும் 9 படிகள்கொண்ட பிரம்மாண்டம்தான் ஞாபகம் வருகிறது. 9 நாட்களிலும் தவறாது நண்பர்கள் சகிதம் ஆஜராகிவிடுவேன். பெரியவர்கள் இரண்டு பக்திப்பாடலகளைப் பாடிமுடித்தபிறகு சிறுமியர்களின் நடனம் ஆரம்பமாகும். வெறுமே கைகொட்டியும் பின்பு கோலாட்டோடும் பாடப்படுகிற கதையோடு நகைச்சுவை கலந்த பாடல்கள் இப்போதும் ஊர்த்தெருக்களில் கற்றி அலையக்கூடும். இதில் பாடப்படுகிற பல பாடல்களை பள்ளிகளில் பாடி கேலி செய்து, சம்பத்தப்பட்ட சிறுமியிடம் திட்டு வாங்குவதும், பின்பு மாலையில் கொலுவைக்கும் வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லப்பட்டு மிரட்டவும் படுவோம். ‘கிண்டல் பண்ணீங்கண்ணா இனிமே இங்க வரக்கூடாது’. இழக்கவே முடியாத கொலுவிற்காக, எல்லோர் முன்பும் கிண்டல் செய்துவிட்டு தனிமையில் அவர்களிடம் மன்னிப்புக்கேட்ட கதைகள் ஒரு தனி அத்தியாயம். அந்த 9 நாட்களிலும் அவர்கள்தான் ஹீரோக்கள்,
மாலை 5 மணிக்கே கொலுவைத்திருக்கிற வீட்டின் வாசலில்கூடிவிடுவோம். வீட்டுமுற்றத்தில் ஏதாவது விளையாடுவதும் அவ்வப்போது எட்டிப்பார்ப்பதுமாக இருப்போம், அது வீட்டிலுள்ளவர்களை எரிச்சலூட்ட, விரட்டப்படுவதும் அவ்வப்போது நடக்கும். பெண்குழந்தைகளுக்கு எந்தக்கட்டுப்பாடும் இல்லை, நடன ஒத்திகை என்கிறபேரில் அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இடையிடையே வெளியே விளையாடுவதாக பாவ்லா செய்துகொண்டிருக்கும் எங்களை வந்து கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டுச் செல்வது அவர்களில் பலரின் தினப்படி வழக்கம். இருங்கடி,நவராத்திரி முடியட்டும்’ என்று மனதுக்குள்ளே கருவுவோம். ஒருவழியாக விளக்கேற்றியபிறகு நாங்கள் உள்ளே அனுமதிக்கப்படுவோம். கொலுவிலிருந்து 6 அடிக்கும் குறையாத தூரத்தில்தான் எங்கள் இருப்பிடம். நடனமாடுகிறோம் என்ற பேரில் பெண்கள் பெரும்பாலான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வார்கள். நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து முழுக்கொலுவையும் பார்க்க இயலாது. அப்படி ஒரு கோணமே எங்களுக்கு வாய்க்கும். 
 
மேலே சரஸ்வதியிலிருந்து கீழே ஊர்வன, விலங்குகள் என்று ஒன்பது படிகளும் ஒருவித ஒழுங்கோடு அமைக்கப்பட்டிருக்கும். முன்னால் ஒரு தெப்பக்குளம் அமைத்து அதில் ஒரு மோட்டார்போட் ஒன்று சுற்றிவந்துகொண்டிருக்கும். அருமையான பூங்காவும் அதில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகளும் கண்ணைக்கவர்வார்கள். ரோடுகளில் நடைபாதை அமைக்கப்பட்டு மக்கள் அதில் ஒழுங்காக நடந்து செல்வார்கள். ரோட்டோரமாக ஒரு கிளி ஜோசியக்காரன் யாருக்கோ எதிர்காலப் பலன்களைச் சொல்லிக்கொண்டிருப்பான். தெருவிளக்குகள் ஒரே சீராக எரிந்துகொண்டிருக்கும். அருகிலேயே காட்டில் மரத்தில் ஒரு பாம்பு ஒளிந்துகொண்டிருக்கும். சிங்கம், நரி, கரடி, யானை என்று எல்லாம் ஒரு நதியில் நீர்குடித்துக்கொண்டிருக்கும். தண்ணீரிலும் பாம்புகள் நெளிந்துகொண்டிருக்கும். இவையெல்லமே ஒருபுறக் காட்சிகள்தான், எங்களால் காணவியலாத பல பொம்மைகள் அங்கே இருந்தன. ராதா கிருஷ்ணன் கோபிகைகளோடு கேளிக்கையில் ஈடுபட்டிருந்த வனம், பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, எண்ணெய்க்கடை செட்டியார், திருமணக்கோஷ்டி எல்லாம் எங்களுக்குத் தூரத்தில் இருந்தன. அவ்வப்போது புது பொம்மைகளும் சேர்க்கப்படும். யாராவது ஒரு புது பொம்மையைப் பார்த்துவிட்டால் அதை மற்றவர்களுக்குக் காட்ட முயல்கையில் ஏற்படும் சப்தம் அங்கே நிலவிவரும் அமைதியைக் குலைப்பதாக இருக்கும். சிறுமியரின் அழகழகான ஆடலும் பாடலும் ஒருபோதும் எங்களைக் கவராமல்போனதற்கு எங்களுக்கு எல்லா பொம்மைகளையும் பார்க்கமுடியாததே காரணம் இது அவர்களுக்குப் புரியாமல் அதிகம் சப்தம் எழுப்புபவன் என்று பட்டம் சூட்டப்பட்டு யாராவது ஒருவன் வெளியேற்றப்படுவான். பூஜை முடிந்ததும் தரப்படுகிற அருமையான சுண்டலையும், சர்க்கரைப்பொங்கல் இன்னபிற வகைகளை இழக்கத்தயாராக இல்லாதவர்கள் மீந்த நேரத்தை அமைதியாகக் கழிப்போம்.
 
6 வயதுமுதல் 15 வயதுவரை நீண்ட இந்த கொலு வைபவம், இடையே எங்களோடு கொலுபார்க்க வந்த ஒரு முஸ்லிம் நண்பனுக்கும், அதே காரணத்துக்காக வந்த மலையாள கிறிஸ்துவ மருத்துவர் ஒருவரின் மகளுக்கும் ஏற்பட்ட இனம்புரியாத கவர்ச்சியினால் திடீரெனத் தடைப்பட்டது ஒரு சோக சம்பவமே. ஆனால் கொலுவைவிடவும் சுவாரஸ்யமான பல விஷயங்கள் அந்த நண்பனால் எங்களுக்கு அறியத்தரப்பட்ட்து. சிந்தனா முறைகளில் சைத்தான் புகுந்த காலமென அதைக்கொள்ளலாம். கொலுவிற்கு வருவதற்கு நிரந்தரத் தடைவிதிக்கப்பட்டபிறகு கொஞ்சகாலம் அது மிகுந்த மன உளைச்சலைக் கொடுத்துவந்தது. 
 
சென்னையில் இன்று கொலு எல்லோர்வீட்டிலும் காணப்படுகிறது, பெரும்பாலும் எல்லா அம்மன்கோவில்களிலும் பார்க்கிறேன். ஆடம்பரத்தின் அத்தனை அடையாளங்களோடும் காணப்படுகிற கொலு ஏனோ மனதைத் தொடுவதில்லை. கொலுபார்க்க வருபவர்களுக்கு கொடுக்கவென்றே சேலைகளும் ரவிக்கைத் துணிகளும் மஞ்சள் குங்குமம், சிறிய பாத்திரங்கள் என்று எல்லாம் வாங்கப்படுகிறது. கொலு வைப்பதற்கான செலவு மாதந்திர பட்ஜெட்டில் ஒரு பெரும்தொகையைக் கோரிநிற்கிறது. மாறாக ஒரு எளிமையான கொலுவை நேற்று நான் பார்க்கநேர்ந்தது. அது ஒரு மாரியம்மன் கொவில்,கோவிலே பத்துக்குப் பத்துதான் இருக்கும்., அழகாக 7 படிகளில் குட்டிக்குட்டியாய் பொம்மைகள், நடுவில் சரஸ்வதியென்று மனசைத்தொட்டது. ஒரு கும்பிடுபோட்டுவிட்டு சுண்டலையும் வாங்கிக்கொண்டு திரும்பும்போதுதான் கவனித்தேன், பெயர்ப்பலகையில் ’பெரியார் நகர்என்று போட்டிருந்தது.