• பல பெர்பாமன்சுகள, வெரைட்டியாக் குடுத்து வின்பண்ணி...
·                                          டிவேலு என்கிற மகாநடிகனை அவ்வளவு சீக்கிரம் தமிழ் சினிமா நகைச்சுவை ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று இரண்டு வருடத்திற்கு முன்பு யாராவது யோசித்திருப்பார்களா என்ன? 90களின் ஆரம்பத்தில் போடாபோடா புண்ணாக்கு என்ற பாடலோடு தனது சினிமாக் கணக்கைத் துவங்கியவர் வைகைப்புயலாய் வடிவம் பெற்று 2011ன் அரசியல் அரங்கத்திற்குள் யாரும் அழைக்காமலேயே நுழைந்து சக்கரவியூகத்தை உடைத்து வெளிவரத்தெரியாது உள்ளே மாட்டிக்கொண்ட சோகம் நிகழ்ந்தே விட்டது.

           தமிழ், தென்னிந்திய, இந்திய சினிமாக்களில் நகைச்சுவைக்கலைஞன் பலவீனனாகவே சித்தரிக்கப்படுபவன். கதாநாயகியின் தோழியான ஒரு புத்திசாலிப் பெண்ணுக்கு காதலனாக வரும் ஒரு அசடன், ரசிகர்களை கதையின் மையநீரோட்டத்திலிருந்து விலக்கி சிரிக்கவைப்பதற்காகவே படைக்கப்பட்ட ஒரு பாத்திரம்.
·        அவ்வளவே!

           டி.ஆர்.ராமச்சந்திரன் அதற்கு 100 சதவீதம் பொருந்துபவர். தங்கவேலுவும் தன்னுடைய பங்கிற்கு அசட்டுப்பணியாற்றினார். நாகேஷ் தன்னுடைய ஒவ்வொரு உடலசைவிலும் அதை வெளிப்படுத்தியபடி இருப்பார். நகைச்சுவைக்கலைஞனாக வந்து சமூக சீர்திருத்தக்கருத்துகளை மென்மையாக என்.எஸ்.கிருஷ்ணனும், நக்கலாக எம்.ஆர் ராதாவும் சொன்னார்கள். இந்த இரண்டையும் கலந்து விவேக் சொன்னார். வடிவேலுவின் நகைச்சுவை இதில் எல்லாவற்றிலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு உடல்மொழி கலந்து, அசட்டுத்தனம் மிகுந்த மென்மையான வகையைச் சேர்ந்தது. கூப்பாடு போட்டுக்கத்தி சாதாரண வார்த்தைகளையே நகைச்சுவை என்று சிரிக்கக்கோரி நிற்கிற கவுண்டமணியின் பாணியிலிருந்து விலகி கூட்டணி இல்லாத ஒற்றைக்காமெடி  என்கிற வகையில் வடிவேலுவின் வரவு, தமிழ் சினிமாவில் ரசிகர்களின் காது கிழிந்து தொங்கியபோது நிகழ்ந்தது. சிங்காரவேலனில் ஒரு பபூனாக வந்தவர் தேவர்மகனில் தன் கையை கமலுக்காகத்தந்து நகைச்சுவையாளனுக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபித்தார்.


·                                                             படிப்படியாய் உயரங்கள் தொட்டார். 2000 முதல் 2010 வரை சினிமாவின் நகைச்சுவை வடிவேலு மற்றும் விவேக் ஆகிய இருவரின் கைகளிலிருந்தது. இருவரும் இணைந்து கொஞ்சகாலம் பணியாற்றிய பிறகு அவரவர் வழியில் அவரவர் பயணம் தொடர்ந்தது. வடிவேலுவின் வெகுளித்தனம் வெகுவாக்க கவனிக்கப்பட்டதற்கு அவருடைய மீசையற்ற நீள்சதுர முகமும் மதுரையின் சொல்லாடல்களும் உதவியாக இருந்தது. வளராத மீசையை பென்சிலால் வரைந்துகொண்டு அத்தனை பேரிடமும் அடிவாங்குகிற தைரியம் அவருக்கிருந்தது. திரிஷாவைக்கல்யாணம் செய்து கொள்வதற்காக கூவத்தில் குதிக்கவும் அவர் தயாராக இருந்தார். வாழ்வில் நாம் தினசரி சந்திக்கும் அத்தனை கதாபாத்திரங்களிடமும் அடி
வாங்கியவர் ஒருவர் உண்டென்றால் அது வடிவேலு மட்டும்தான். அவர் கூட்டணியில் உள்ளவர்களின் வார்த்தைகளை அப்படியே நம்பிவிடும் வடிவேலு அதன் காரணமாகவே மூக்கு உடைபட்டுத் திரும்பி அதே கூட்டணியில் மீண்டும் இணைந்துகொள்வது அவர்மேல் நமக்கு பரிதாபத்தை ஏற்படுத்துமளவுக்கு யதார்த்தமானது.

·                                                           நம்மில் பலருக்கு வாய்க்கிற அன்றாட அனுபவங்களை அவர் எப்படி நகைச்சுவையாக்குகிறார் என்பதிலேயே அவரின் வெற்றி அடங்கியிருந்தது. தன்னிடம் தவறாகத் தரப்பட்ட மணியார்டர், புதிதாக டீக்கடை திறந்தவனிடம் ஓசி டீ கேட்டு பண்ணிய பந்தா, இளம்பெண்ணின் இடுப்பைக்கிள்ளிய பஞ்சாயத்து, குளிர்பானத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு, பக்கத்தில் குடித்துக் கொண்டிருப்பவரோடு காட்டிய அழிச்சாட்டியம், கட்சி மேடையில் வீராப்பாய்ப்பேசிவிட்டு, எதிக்கட்சிக்குப் பயந்து அடுத்த நிமிடமே கட்சித்தாவல், நாய்சேகரின் காதல் என்று எல்லா சாத்தியங்களையும் நகைச்சுவையாக்கியவர்.

·                                                  தொலைபேசி உரையாடலை இவ்வளவு நகைச்சுவையோடு யாரும் இதுவரை வெளிப்படுத்தியதில்லை. சென்னையிலிருந்து மன்னார்குடிக்கு ஃபோனைப்போட்டு அரைமணிநேரம் பேசிய பிறகு 2 ரூபாயைக்கொடுத்து அசத்துவார். ரிசீவரை எடுத்துப்
பேச ஆரம்பித்ததிலிருந்து கடைசிவரை தான் சொல்லவந்ததைச் சொல்லமுடியாமலேயே, ஃபோனை வைத்துவிட்ட எதிராளியை நொந்துகொள்வார். எடுத்துக்கீழே வைக்கப்பட்டிருக்கிற ரிசீவரை எடுத்து ‘யார் பேசறது?என்று ஒரேஒரு கேள்வியைக்கேட்டதற்காக காது வழியே ரத்தம் சொட்ட வசவுகளை வாங்குவார். இதுபோன்ற நம் எல்லா அன்றாட அனுபவங்களும் அவர்வழி நகைச்சுவையாக மாறியது. 
·                                                            இப்படி எல்லோர் வாழ்விலும் அவரவர்களின் அனுபவங்களையே நகைச்சுவையாக மாற்றி ஓடவிட்டுக்கொண்டிருந்த தருணத்தில்தான் அவருக்கும் விஜகாந்த்திற்குமான மோதல் வலுப்பட்டது. தமிழக அரசியலில் தனக்கென ஒரு வாக்குவங்கியை நிலைப்படுத்தியிருந்த நேரத்தில், அவருக்கு எதிரான இவருடைய கேலிப்பேச்சுகள் வெறும் சினிமா
நகைச்சுவையைப் போலவே மக்களால் எடுத்துக் கொள்ளப்பட்டதே சினிமாவிலிருந்து இவர் வெகுகாலம் விலகி இருக்கக் காரணமாகவும் அமைந்துவிட்ட்து. இரண்டரை ஆண்டுகால இடைவெளிக்கப்புறம் வெளிவந்த தெனாலிராமனில் தன்னை ஒரு நகைச்சுவையாளனாகவும், கதாநாயகனாகவும் நிறுவ அவருக்கு மிகுந்த முயற்சி தேவைப்பட்டது. இதேபோன்ற ஒரு இரட்டைக் கதாபாத்திரத்தை 23ம் புலிகேசியாக அநாயாசமாகச் செய்த அதே வடிவேலு, இந்தமுறை தோல்வியைத் தழுவியதற்கு சினிமா நகைச்சுவை தன்னை நாளுக்குநாள் புதுப்பித்துக்கொண்டே வருகிறது என்பதே காரணம்.
·         

               இது மிகுந்த போட்டி நிறைந்திருக்கிற நேரம். தன்னை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு புதுப்பித்துக்கொள்ள வடிவேலுவிற்கு பயிற்சி தேவைப்படலாம். பலபாணியில், பல படங்களில் அவர் செய்திருந்த சின்னச்சின்ன காட்சிகளையே, தனித்தனிக்காமெடியாக்கி, அதற்கென பல நடிகர்களும் உருவாகிவிட்டார்கள். 'நான் சினிமாவில் காமெடி பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்என்று பேட்டி கொடுப்பதெல்லாம் இப்போது அவருக்கு உதவப்போவதில்லை. எல்லோருடைய காமெடிகளையும் பார்த்து அதைவிடப் புதிதாக ஏதாவது முயற்சித்தால்தான் இழந்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ள இயலும். அவரே ஒரு திரைப்படத்தில் சொல்வதுபோல, “ பல பெர்பாமன்சுகள வெரைட்டியாக் கொடுத்து வின்பண்ணி வந்தவண்டாஎன்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்க வடிவேலு கடுமையான தற்சோதனைக்கு தன்னை உட்படுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். 


          அதுவரை எண்டு கார்டுபோடாமல் காலம் அவருக்காகக் காத்திருக்கவேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!