ஃபுட்பால் ஃபீவர் - ஆட்டம் ஒன்று.
கால்கள் தடுத்து
நிறுத்தியிருக்க வேண்டிய பந்து அது, அவரின் கால்கள் கட்டுப்பாடு இழந்துவிட்டபடியால்
குரோஷியாவிற்காக தனது முதல் கோலைப்போடும்படியாக நேர்ந்தது அவரின் துரதிருஷ்டம். உலகின்
ஆகப்பெரிய விளையாட்டுத்திருவிழா அதை நடத்துகிற பிரேஸிலின் ஒரு வீரராலேயே தவறாகத் துவக்கி
வைக்கப்பட்டது. ஆட்டம் துவங்கிய 11 வது நிமிடத்தில் நிகழ்ந்த இந்த தவறுக்காக பிரேஸிலின்
நெய்மர் 29வது நிமிடத்தில் ஒரு கோலடித்து பிராயச்சித்தம் தேடிக்கொண்டார். ஆனால் அதற்குச்
சற்றுமுன்புதான் அவருக்கு மஞ்சள் எச்சரிக்கை அட்டை தரப்பட்டிருந்தது.
ஆட்டத்தின் பெரும்பாலான
நேரங்கள் பந்து பிரேஸிலின் வசமே இருந்தது. குரோஷியாவின் கவனம் முழுவதும் தடுப்பாட்டத்தில்
இருந்தது. மிகச் சிறப்பான தடுப்பாட்டம் அது. பிரேஸிலின் படு ஆக்ரோஷமான ஆட்டதினூடே குரோஷ்யாவின்
லாரன், நெய்மரின் தோள்களைப்பற்றி விளையாடவிடாமல் தடுத்ததன்மூலம் ஒரு பெனால்டிகிக் கிற்கு
வழி ஏற்படுத்திக்கொடுக்க, கொஞ்சமும் தவறாமல்
அதை கோலாக்கினார் நெய்மர். அதன்பிறகான குரோஷியாவின் ஆட்டம் கொஞ்சம் சூடுபிடித்தபோதிலும்,
ஓரிச்’சின் ஒரு கோல் முயற்சி – நிச்சயம் கோலாகியிருக்க வேண்டிய பந்து – தோற்றுப்போன
பிறகு, அவர்களின் ஆட்டம் பலவீனமாகிப்போனது. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் ஆஸ்கர் ஒரு
கோலடித்து ஆட்டத்தை 3-1 என்ற கணக்கில் முடித்துவைத்தார். பிரேஸில் தனது கணக்கை இனிதே
துவங்கியிருக்கிறது. போட்டியை நடத்திய நாடே வெல்வது என்கிற நிகழ்தகவிற்கு 20 சதவீதச்
சாத்தியம் இருக்கிறது. காத்திருப்போம்.
கருத்துகள்
கருத்துரையிடுக