கடவுளின் கைகள்
தருமமிகு
சென்னையில் கத்திப்பாரா சந்திப்பில் விரைவுவண்டியில் வந்து இறங்கப்போகிற நண்பர்
ஒருவருக்காகக் காத்திருக்க நேர்ந்தது. சாலையில் நெருக்கடி இல்லாத காலைப் பொழுது,
இலேசான காற்றும், அப்பொதுதான் பரவத்தொடங்கியிருக்கும் வெளிச்சமும் மனதை எங்கோ
இழுத்துச்சென்று கொண்டிருந்தது. மேகங்கள் மயிலைப்போலத் தோற்றங் கொண்டு பின்
குயிலாக மாறிக்கொண்டிருந்தது. (டேய்..டேய்..டேய்..) சரி பாரதிதாசன் மன்னிக்கட்டும்.
ஒவ்வொரு பேருந்தும் வந்து நிற்கையில்
ஓட்டமாக ஓடி பயணிகளை இறங்கவிடாமல் வழிமறித்து,
பின்னாலேயேபோய் பேரம் படிந்தால் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு பறப்பதும், மீதிப்பேர்
அடுத்த பேருந்து வரும்வரை அரட்டையைத் தொடருவதுமாக ஜாலியாய் ஒரு ரகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்
ஆட்டோ ஓட்டுனர்கள். எவ்வளவு கெஞ்சியும் மறுத்து பிடிவாதமாக பஸ்ஸிலேயே போவேன்
என்று காத்திருக்கும் கல்லுளிமங்கர்களின் உடல்மொழியை அபிநயித்து, கிண்டல் வேறு.
எல்லாவற்றையும் பார்த்து சிரித்தவாறே காத்திருந்தபோது,
வேகமாய் வந்த ஒரு பேருந்து நடைமேடைக்கு மிக
அருகில் உரசினாற்போல நின்றது, அவசரமாய்
அதிலிருந்து தலையை வெளியே நீட்டிய நடத்துனர், “ ஏய் இங்க வாங்கப்பா” என்று ஆட்டோ ஓட்டுனர்கள் சிலரை பேருந்துக்குள் அழைத்தார். உள்ளே ஏறிய சிலர்
50 வயது மதிக்கத்தக்க ஒருவரை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி அவரை நடைமேடை மீது
படுக்கவைத்தார்கள். அவரோடு அவ்ர் மனைவியும் இறங்கினார். சில உடமைகள் வேறு. மிகவும் மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்துகொண்டிருந்த
அவர்கள் பொறுப்பாய் அவர் மனைவியிடம் என்ன நடந்தது ஏதேனும் உதவி தேவையா என்று
கவலையோடு விசாரிக்கத்துவங்கினார்கள். அவ்ர் ஒரு புற்றுநோயாளி
எனவும், கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்னை வந்ததாகவும், வருகிற
வழியிலேயே அவர் மயக்கமடைந்து விட்டதாகவும் அந்தப் பெண் சொன்னார்.
இப்போது கூட்டம் கொஞ்சம் குறைந்து கீழே படுத்திருந்தவரை என்னால் நன்றாகப்
பார்க்க முடிந்தது. நடைமேடையில் படுத்திருந்தவர் மூச்சுவிடச் சிரமப்படுவதாகத்
தோன்றியது, சற்று அருகில் சென்று பார்த்தபோது அவ்ர் தலைக்கும் முதுகிற்கும் இரண்டு
பைகளை வைத்திருந்தார்கள் அதனால் தொண்டைப்பகுதி தாழ்ந்து போனதால் அவரால் இயல்பாக
மூச்சுவிட முடியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். இரண்டு ஒட்டுனர்களை அழைத்து
அவரை தூக்கிப்பிடிக்கச் சொல்லிவிட்டு கீழே இருந்த பையை எடுத்துவிட்டு, இதுபோன்ற
தருணங்களில் நோயாளியை கிடை மட்டமாகத் தரையில் படுக்க வைப்பதே நல்லது என்று சொல்லி,
அவரைப் படுக்கவைத்தேன்.
இதற்கிடையில் அவர்களை வந்து மருத்துவமனைக்கு அழைத்துப்போவதாகச் சொன்ன உறவினர்
காரோடு வழி தெரியாமல் எங்கோ சுற்றிக்கொண்டிருப்பதாக அறிந்தோம். சென்னையில்
கத்திப்பாராவைச் சுற்றியுள்ள அத்தனை முக்கியமான கட்டிடங்கள், பாலங்கள், பெரிய் தங்கும் விடுதிகள், சினிமா
தியேட்டர் (சென்னையில்ஜோதியைத்தெரியாதவர்கள் இருக்கிறார்களா என்ன?) என்று எல்லாம் சொல்லியும் மனிதருக்குப் புரியவில்லை,
அவர் எங்கு இருக்கிறார் என்று எங்களுக்கும்.
கீழே படுத்திருந்தவரின் மூச்சு முன்புபோல் சீராக இல்லை, ஏதாவது முதல் உதவி
அவ்சியம் என்று தோன்றியது. இனியும் தாமதித்தால் தவறாகிவிடும் என்று ஆம்புலன்ஸை
அழைத்தோம், மூன்றாவது நிமிடத்தில் வந்தது. எல்லா ஓட்டுனர்களும் உதவ அவ்ர்
ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டார், கண்ணீர் மல்க அந்தப் பெண்மணி கையெடுத்துக்
கும்பிட்டார். எல்லோரும் அடுத்த பேருந்திற்காக காத்திருக்க ஆரம்பித்தனர். ஒவ்வொரு
பேருந்து வரும்போதும் ஓடிச்சென்று மறித்து, அது நிற்காமல் ஒடும்போது பின்னாலேயே
ஓடி ஒவ்வொரு பயணியிடமும் கெஞ்சி சவாரிக்காக அலைந்தவர்கள், அந்தப் பெரியவர்
வண்டியிலிருந்து இறக்கப்பட்டு பின்பு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பப்படும் வரை எந்தப்
பேருந்தின் பின்னாலும் ஓடவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
இரக்கமற்றவர்கள் என்றறியப் படுகிற சென்னை ஆட்டோ ஓட்டுனர்கள் இந்தச் சம்பவம்
நிகழ்ந்த 20 நிமிடங்களில், படுத்திருந்த நோயாளிக்கு ஒருவர் மாற்றி ஒருவர்
விசிறியபடி இருந்தார்கள், ஒவ்வொருவரும் வழிதெரியாமல் அலைந்த உறவினருக்கு தொலைபேசியில்
வழிசொல்லி விளங்க வைக்கப் பெரு முயற்சி செய்தார்கள், வரத்தாமதமான ஒவ்வொரு
கணத்திலும் அவரைத்திட்டியபடி (....த்தா,
தே......ப்பையா என்று, எல்லாம் உண்டு) பரபரப்போடு அலைந்து கொண்டிருந்தார்கள்.
சவாரிக்கு 100ரூபாய் என்று பேரம் பண்ணிக்கொண்டிருக்கிற ஒரு ஆட்டோக்காரரை, ஓவர்டேக்
செய்து, நான் 80 ரூபாய்க்கு வாரேன் என்று சவாரிக்காக எதையும் செய்பவர்கள், பயணிகள்
வந்து அழைத்தபோதும் வேறொரு ஓட்டுனரிடம் ‘ நீ இட்டும் போப்பா, நான் இவர
பாத்துங்கறன்” என்று கவலை காட்டினார்கள்.
மனிதனின் இயலாத நிலையில் உதவிக்காக நீள்கிற கைகள், கடவுளுடையவை என்பதில் சந்தேகமில்லை.
அப்போதுதான் கவனித்தேன் இதுவரை இங்கு நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்த அந்த மனம்பிறழ்ந்த நபர்,பேருந்திலிருந்து இறங்கிய யாரோ ஒருவர் வீசியெறிந்திருந்த உணவுப்பொட்டலத்தைப் பிரித்து வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்திருந்தார்.
சென்னையில் ஆட்டோக் காரர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல !!! நல்ல இதயங்கள் பல உள்ளன என்பதை இப்பதிவு நிரூபிக்கின்றது .. நன்றிகள்
பதிலளிநீக்குநெகிழ்ச்சியான நிகழ்வுகள், சென்னையில் ஆட்டோகாரர்களுக்கும் இதயம் உண்டு என்பதை உணர்த்துகிறது.
பதிலளிநீக்குமனிதனின் இயலாத நிலையில் உதவிக்காக நீள்கிற கைகள், கடவுளுடையவை என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குஒவ்வொரு பேருந்து வரும்போதும் ஓடிச்சென்று மறித்து, அது நிற்காமல் ஒடும்போது பின்னாலேயே ஓடி ஒவ்வொரு பயணியிடமும் கெஞ்சி சவாரிக்காக அலைந்தவர்கள், அந்தப் பெரியவர் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு பின்பு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பப்படும் வரை எந்தப் பேருந்தின் பின்னாலும் ஓடவில்லை என்பது இதில் கவனிக்க வேண்டிய செய்தி.
மனித நேயம் மரித்துப் போகவில்லை.நல்ல பகிர்வு நன்றிங்க.
கருத்துகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு இக்பால் செல்வன், கோவி கண்ணன் மற்றும் sasi kala வுக்கும் நன்றி.
பதிலளிநீக்கு