ர்ணங்களாலாகிய ஜாதிப்பிரிவுகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பேணி வந்ததன் பின்னணியில் அவைகள் போட்டிருந்த விலங்குகள் நொறுக்கப்பட்டு ஜாதிகளாலாகிய சமூகம் கொஞ்சமாய் நசிந்து சமஉரிமை, சமசமூக நீதி என்று போரிட்டுப் பெற்றுக்கொண்டிருக்கும் காலமிது. சமூக அடுக்குகள் ஜாதிகள் தவிர வறுமை, வேலையின்மை, அரசியல், சூது, பெரும்பணம் இவற்றால் இன்னமும் மாறாமலிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை., அழித்தொழிக்கமுடியாத இந்த வேறுபாடுகள் தனிமனித உளவியல் சார்ந்த அம்சமேயாகும். கல்வியறிவு மறுக்கப்பட்ட ஒரு சமூகம், அடுத்த தலைமுறையையும் கற்க அனுப்பமுடியாத அவலம், எவ்வளவு உழைத்தாலும் வரும் காசு பிழைத்து வாழப்போதாது என்கிற நிலை. வட்டிக்குவிட்டு கொழுக்கும் செல்வந்தனால் அழிக்கப்படுகிற குடும்பங்கள் என்று ஒரு புறமும், அரசியலும் அதிகாரமும் இணைந்து கொடுக்கிற சமூக அந்தஸ்த்தும், பணமும்தருகிற போதை ததும்பும் திமிரான வாழ்வில் எதையுமே பணத்தால் சாதித்துவிடமுடியும் என்கிற கருத்துருவும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான சமூக வேறுபாடுகள். ஒரு சராசரியாக மாதச்சம்பளத்தை கவனத்தில்கொண்டே நாட்களை நகர்த்தும் நம் கண்களில் இந்த்ச் சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிற பெரும் விழைவுகள் படுவதேயில்லை. ஒருவேளை அது பற்றி அறிய நேர்ந்தாலும் நமக்கு அது வெறும் பெட்டிச் செய்திதான். அப்படி ஒரு பெட்டிச் செய்திதான் பாலாஜிசக்திவேலால் படமாக்கப்பட்டிருக்கிறது.                     
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கண்வழியாக நாம் காண்கிற முதல் காட்சியில் அது ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு எனவும், அந்தப்பெண்ணிற்கு ஏதோ அடி பட்டிருக்கிறது எனவும் உணர்கிறோம். அதன்பிறகு இடைவேளைவரை அதற்குக் காரணமானவன் என சந்தேகிக்கப்படும் நபரும், காவல்துறை துணை ஆய்வாளரும் உரையாடுகிறார்கள் கதை நகர்கிறது. இடைவேளைக்கு சற்றுமுன் காயம்பட்ட பெண் வேலை செய்துவந்த வீட்டு உரிமையாளரின் மகள் இன்னொருநபரையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். கதை வேறோரு திசையில் பயணிக்கிறது. இப்போது குற்றவாளி யார் என்று அறிந்த நிலையில் அதிகார வர்க்கம் என்ன முடிவு எடுத்தது என்பது கதை. அன்பான வார்த்தைகளால் திருந்துகிற பாலியல் தொழிலாளி, வசனத்தை மனப்பாடம் செய்ய இயலாத நவீன நடிகன், அவனைக் கேலிசெய்து சிரிக்கும் கூத்துக் கலைஞனாக வரும் சிறுவன், மன வளர்ச்சி குன்றிய சிறுவன் என்று உதிரிப் பாத்திரங்களின் பங்கு அலாதியானது. தன்னைப்போலவே இரக்க குணம் கொண்ட வேலைக்காரப் பெண்ணின் மீது தள்ளுவண்டிக்கடைப்பையன் இயல்பாகவே கொள்கிற பிரியம், இது எதையும் யோசிக்காது கருமமே கண்ணாய் இயங்கிக்கொண்டிருக்கும் வேலைக்காரப் பெண், சூழ்ச்சி என்று அறியாது நேர்மையானவன் என்று நம்பி நண்பனோடு இயல்பாய் பழ்குகிற அடுக்குமாடி வீட்டுப்பெண், அசாத்திய பொறுமையோடு தனக்குச்சாதகமாய் காய் நகர்த்துகிற காவலதிகாரி என்று கச்சிதமான பாத்திரப் படைப்புகள். இயல்பாய் நகர்கிறது படம். இசையும், ஒளிப்பதிவும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றன. மிரட்டிப்பணீய வைக்க இயல்கிற அதிகாரம் இங்கு அன்பாய் பேசிப் பணிய வைக்கிறது. எண்ணெய அவன் மூஞ்சில ஊத்தியிருக்கணும்டா என்று சொல்வதன் மூலமும், அவளக் குணப்படுத்த நெறய செலவாகும்டா, நீ மனசு வச்சா நடக்கும் என்று அவனையே முடிவெடுக்கத்தூண்டுவதிலும் அதிகாரம் மிகச்சிறப்பான வெற்றி பெறுகிறது. அசைக்கவேமுடியாத அதிகார வர்க்கம் தோற்றுப்போவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது ஜெயிப்பதற்கு அடிமை வர்க்கம் தங்களுடைய உயிரைத்தரவேண்டும் என்கிற பொது விதி இங்கும் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் அதிகார வர்க்கம் தண்டிக்கப்படும்போதும் மேல் வர்க்கம் தப்பித்துக் கொள்கிறது, இடைத்தரகனே மாட்டிக்கொள்கிறான். இதுவும் சாத்தியமானதுதான். சரியானதும் கூட, எனெனில் மேல்வர்க்கத்தின் கைப்பாவையாக ஆட்சியிலிருப்பவர்கள் மாறும்போதுதான் நலிந்தவர்கள் மீதான வன்கொடுமை துவங்குகிறது. எனவே அவர்களை அழிப்பதுதான் சரியானதாக இருந்திருக்கும். எல்லாம் முடிந்து இறுதியாக தன்னை சந்திக்கவரும் காதலனிடம் தனது முகம் காட்டுகிறாள் நாயகி, எவ்வளவு குரூரமான சமுதாயத்தில் நாம் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம், பாதுகாப்பற்ற ஒரு சமூக அமைப்பில் நலிந்தவர்களின் நிலை எதுவாக இருக்கும், கம்பிகளின் பின்னே வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கழிக்கும் பலரில் உண்மையிலேயே தண்டிக்கப்ப்ட வேண்டியவர்கள் எத்தனைபேர் என்று கேள்விகள் தொடர, கனத்த மவுனத்துடன் துக்கம் பொங்க வெளியேறுகிறோம். தமிழில் இன்னொரு சிறந்த படைப்பு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறிவை அளக்கலாம் வாங்க.

சுவரோடு ஒட்டிய சென்னை

அண்ணே, விஜயகாந்த் அண்ணே!