எங்கேயோ பார்த்த மயக்கம்..
பாப்பாகே தேஹெய்ன் படா நாமு கரேகா... என்று தன்னுடைய கணக்கைத்துவங்கினார் உதித் நாராயண். நேப்பாளின் மைந்தர், தொடர்ந்து எல்லா இந்திய மொழிகளிலும் பிச்சு உதறினார். (அந்தந்த மொழியையும்) வசீகரமான குரல் அனாயாசமாய் உச்ச ஸ்தாயியை தொட்டுத்திரும்பும் நெளிவு, கீழ்க்குரலிலும் கவர்ச்சியாகப் பாடக்கூடிய அசத்தும் ஆளுமை. காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் என்று தமிழில் எஸ்பிபியுடன் சேர்ந்து அவர் தொடங்கிய கணக்கு இன்றுவரை நீள்கிறது. காதல்பிசாசே பாட்டில் ‘பருவாயில்லை’ என்ற தவறான உச்சரிப்பைக்கூட தமிழுலகம் ‘பரவாயில்லை’ என்று மன்னித்து ஏற்றுக்கொண்ட்து.
எப்போதும் ஜலதோஷம் பிடித்த மாதிரியான குரலில் ரசிகர்களை வசீகரிக்கிற வித்தை தெரிந்தவர். குலுவாலிலே என்ற இவரது இரண்டாவது பாடலில் ’நானென்ன கலைக்கிற ஆளா?’ என்று தமிழக மக்களைப்பார்த்து ரஜினிக்காக இவர் கேட்டார் அர்த்தம் புரியாமலேயே.. இவர் என்ன கேட்கிறார் என்பது மக்களுக்கு கொஞ்சம் லேட்டாக... ஆனாலும் புரிந்தது. ’ஏழையை தூக்கி எறியாதே, என்கிற இவரது அடுத்த பாடல் இலையை’ என்பதாக புரிந்து கொள்ளப்பட்டது இவருடைய தவறாக இருக்க முடியாது. ’சோனியா சோனியா’ மற்றும் ’கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு’ பாடல்களில் கொஞ்சம் தெளிவான தமிழுக்கு இடம் பெயர்ந்தார். சோதனையாக வந்தது அய்யோ பத்திக்கிச்சு பாடல், ‘முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் தீயை தீயால் அணைப்போம் வா’ உண்மையிலேயே அவருக்கு தொண்டையில் சிக்கிய முள்தான். பிறகுதான் வந்தது பருவாயில்லை’ பாடல். காட்சியமைப்பும் இசைக்கோர்ப்பும் மிகச்சிறப்பான இடத்தை பாடல் அடைவதற்கு உதவின. பாடகர் பற்றிய எதிர் விமர்சனங்களெதுவுமின்றி வென்றது.
உச்சரிப்புத்தவறெதுவுமின்றி கொக்கரக்கொக்கரக்கோ’ மிக எளிதாக வசப்பட்ட்து. கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்ல’ என்று பாடியதை நாம் குழப்பமின்றி புரிந்து கொள்ளமுடிந்தது. அடுத்து கொஞ்சம் வேகமான பாடல். ”நீ தமிழ் பேசயிலே, அய்யோ. நான் அதைக் கேட்கையிலே, அய்யோ” என்று அவரால் தைரியமாக கேட்க முடிந்தது ’அய்யோ அய்யோ’ பாடலில். கலகல எனவே பேசிடும் கண்கள் அய்யய்யோ.. சரியாகவே பாடினார். அடுத்து வந்த ஒரு வேகமான பாடல் ’என்னாத்த சொல்வேனுங்கோ’, குரலில் கொஞ்சல் எல்லாம் சேர்த்து நம்மை ஒரு மிரட்டு மிரட்டியிருப்பார். ’வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கம்மா’ என்று ஒரு மிரட்டல் அப்புறமாய் வந்தது.
தேன் தேன் தேன் என்று தேன் குரலில் ஒரு பாட்டு. முழுவதும் மூக்காலேயே பாட ஆரம்பித்தது இந்தப் பாடலுக்குப் பிறகுதான் என்று நினைக்கிறேன். அப்புறம் வா செல்லம் வா வா செல்லம் என்று ஒரு கொஞ்சல். வானவில்லில் துப்பட்டா வாங்கிவந்து வைக்கட்டா பவுர்ணமிக்கே பவுடர் போடட்டா என்று ஏக அலப்பறை. மிகச்சமீபமாய் வாம்மா துரையம்மா என்று கீழ்க்குரலில் ஒரு மெலடி தந்தார். கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்’ என்று தகராறாய் ஒரு தமிழ் பாட்டு.
இத்தனை பாட்டுகளிலும் சிறந்ததாய் எனக்குத் தோன்றுவது இரண்டு பாடல்கள், ஒன்று சஹானா சாரல் தூவுதோ, மற்றது எங்கேயோ பார்த்த மயக்கம். சஹானா வில் மிக நிதானமாய் காதலை வாசித்தவர், அதற்கு அப்புறம் வந்த எங்கேயோ பார்த்த மயக்கத்தில் குழைந்து கிறங்கி நம்மை எங்கேயொ இழுத்துச்செல்வார் பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=OqwhUub2va0&feature=related
தமிழில் ஏன் வேறு பாடகர்களா இல்லை இப்படி தமிழைக் குதறி கொலை செய்பவர்களையெல்லாம் அழைத்து வந்து பாட வைக்கத்தான் வேண்டுமா என்று தமிழ் பாடல் ரசிகர்களின் கோபக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் வெற்றிப்பட அடையாளமாக இவரின் குரல் பல படங்களில் செண்டிமெண்ட்’ ஆக வைக்கப்பட்ட்து. தமிழில்தான் இவரை இப்படி விமர்சிக்க முடியும் ஹிந்தி யில் இவருடைய பாடல்களுக்கு ஒரு உதாரணம், தமிழில் ‘பூங்காற்றிலே’ என்ற உயிரே படப் பாடலை ஹிந்தியில் இவர் படியிருப்பார்.. ஏ அஜ் நபி து பி கபி’ என்று. கேட்டுப்பாருங்கள்.
http://www.youtube.com/watch?v=qXFmaHfOf6k
ஹ்ம்ம்.. நல்ல பாடகர் தான் அவர்...நன்றி..
பதிலளிநீக்குஆனால் மலையாள உச்சரிப்பை விட்டு வர மாட்டேன் என்கிறார்..
சித்ராவைப் பாருங்கள்!