சனி, 5 மே, 2012




ர்ணங்களாலாகிய ஜாதிப்பிரிவுகள் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் மக்களைப் பேணி வந்ததன் பின்னணியில் அவைகள் போட்டிருந்த விலங்குகள் நொறுக்கப்பட்டு ஜாதிகளாலாகிய சமூகம் கொஞ்சமாய் நசிந்து சமஉரிமை, சமசமூக நீதி என்று போரிட்டுப் பெற்றுக்கொண்டிருக்கும் காலமிது. சமூக அடுக்குகள் ஜாதிகள் தவிர வறுமை, வேலையின்மை, அரசியல், சூது, பெரும்பணம் இவற்றால் இன்னமும் மாறாமலிருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை., அழித்தொழிக்கமுடியாத இந்த வேறுபாடுகள் தனிமனித உளவியல் சார்ந்த அம்சமேயாகும். கல்வியறிவு மறுக்கப்பட்ட ஒரு சமூகம், அடுத்த தலைமுறையையும் கற்க அனுப்பமுடியாத அவலம், எவ்வளவு உழைத்தாலும் வரும் காசு பிழைத்து வாழப்போதாது என்கிற நிலை. வட்டிக்குவிட்டு கொழுக்கும் செல்வந்தனால் அழிக்கப்படுகிற குடும்பங்கள் என்று ஒரு புறமும், அரசியலும் அதிகாரமும் இணைந்து கொடுக்கிற சமூக அந்தஸ்த்தும், பணமும்தருகிற போதை ததும்பும் திமிரான வாழ்வில் எதையுமே பணத்தால் சாதித்துவிடமுடியும் என்கிற கருத்துருவும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான சமூக வேறுபாடுகள். ஒரு சராசரியாக மாதச்சம்பளத்தை கவனத்தில்கொண்டே நாட்களை நகர்த்தும் நம் கண்களில் இந்த்ச் சமூக ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுகிற பெரும் விழைவுகள் படுவதேயில்லை. ஒருவேளை அது பற்றி அறிய நேர்ந்தாலும் நமக்கு அது வெறும் பெட்டிச் செய்திதான். அப்படி ஒரு பெட்டிச் செய்திதான் பாலாஜிசக்திவேலால் படமாக்கப்பட்டிருக்கிறது.                     
பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கண்வழியாக நாம் காண்கிற முதல் காட்சியில் அது ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவு எனவும், அந்தப்பெண்ணிற்கு ஏதோ அடி பட்டிருக்கிறது எனவும் உணர்கிறோம். அதன்பிறகு இடைவேளைவரை அதற்குக் காரணமானவன் என சந்தேகிக்கப்படும் நபரும், காவல்துறை துணை ஆய்வாளரும் உரையாடுகிறார்கள் கதை நகர்கிறது. இடைவேளைக்கு சற்றுமுன் காயம்பட்ட பெண் வேலை செய்துவந்த வீட்டு உரிமையாளரின் மகள் இன்னொருநபரையும் விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள். கதை வேறோரு திசையில் பயணிக்கிறது. இப்போது குற்றவாளி யார் என்று அறிந்த நிலையில் அதிகார வர்க்கம் என்ன முடிவு எடுத்தது என்பது கதை. அன்பான வார்த்தைகளால் திருந்துகிற பாலியல் தொழிலாளி, வசனத்தை மனப்பாடம் செய்ய இயலாத நவீன நடிகன், அவனைக் கேலிசெய்து சிரிக்கும் கூத்துக் கலைஞனாக வரும் சிறுவன், மன வளர்ச்சி குன்றிய சிறுவன் என்று உதிரிப் பாத்திரங்களின் பங்கு அலாதியானது. தன்னைப்போலவே இரக்க குணம் கொண்ட வேலைக்காரப் பெண்ணின் மீது தள்ளுவண்டிக்கடைப்பையன் இயல்பாகவே கொள்கிற பிரியம், இது எதையும் யோசிக்காது கருமமே கண்ணாய் இயங்கிக்கொண்டிருக்கும் வேலைக்காரப் பெண், சூழ்ச்சி என்று அறியாது நேர்மையானவன் என்று நம்பி நண்பனோடு இயல்பாய் பழ்குகிற அடுக்குமாடி வீட்டுப்பெண், அசாத்திய பொறுமையோடு தனக்குச்சாதகமாய் காய் நகர்த்துகிற காவலதிகாரி என்று கச்சிதமான பாத்திரப் படைப்புகள். இயல்பாய் நகர்கிறது படம். இசையும், ஒளிப்பதிவும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கின்றன. மிரட்டிப்பணீய வைக்க இயல்கிற அதிகாரம் இங்கு அன்பாய் பேசிப் பணிய வைக்கிறது. எண்ணெய அவன் மூஞ்சில ஊத்தியிருக்கணும்டா என்று சொல்வதன் மூலமும், அவளக் குணப்படுத்த நெறய செலவாகும்டா, நீ மனசு வச்சா நடக்கும் என்று அவனையே முடிவெடுக்கத்தூண்டுவதிலும் அதிகாரம் மிகச்சிறப்பான வெற்றி பெறுகிறது. அசைக்கவேமுடியாத அதிகார வர்க்கம் தோற்றுப்போவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அது ஜெயிப்பதற்கு அடிமை வர்க்கம் தங்களுடைய உயிரைத்தரவேண்டும் என்கிற பொது விதி இங்கும் எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால் அதிகார வர்க்கம் தண்டிக்கப்படும்போதும் மேல் வர்க்கம் தப்பித்துக் கொள்கிறது, இடைத்தரகனே மாட்டிக்கொள்கிறான். இதுவும் சாத்தியமானதுதான். சரியானதும் கூட, எனெனில் மேல்வர்க்கத்தின் கைப்பாவையாக ஆட்சியிலிருப்பவர்கள் மாறும்போதுதான் நலிந்தவர்கள் மீதான வன்கொடுமை துவங்குகிறது. எனவே அவர்களை அழிப்பதுதான் சரியானதாக இருந்திருக்கும். எல்லாம் முடிந்து இறுதியாக தன்னை சந்திக்கவரும் காதலனிடம் தனது முகம் காட்டுகிறாள் நாயகி, எவ்வளவு குரூரமான சமுதாயத்தில் நாம் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கிறோம், பாதுகாப்பற்ற ஒரு சமூக அமைப்பில் நலிந்தவர்களின் நிலை எதுவாக இருக்கும், கம்பிகளின் பின்னே வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கழிக்கும் பலரில் உண்மையிலேயே தண்டிக்கப்ப்ட வேண்டியவர்கள் எத்தனைபேர் என்று கேள்விகள் தொடர, கனத்த மவுனத்துடன் துக்கம் பொங்க வெளியேறுகிறோம். தமிழில் இன்னொரு சிறந்த படைப்பு.

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

வணக்கம் வாழவைக்கும் சென்னை - 1

அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி அதன்          அருகினில் ஓலைக்குடிசைகட்டி                பொன்னான உலகென்று பெயருமிட்டால்             இந்த பூமி சிரிக்கும்                                 அந்த சாமி சிரிக்கும்   

 பார வளர்ச்சியில் மணிக்கொரு மாற்றங்களைச் சந்திக்கிறது சென்னை. உலகின் மிகச்சிறந்த உணவகங்கள் தங்கள் தயாரிப்புகளை தள்ளுபடி விலையில் தந்து தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிவிட்டார்கள். அமெரிக்க கோழியிறைச்சிக்காக நீங்கள் மால்களில் கால்கடுக்க நிற்பதற்கு பழகிக்கொண்டாக வேண்டும். வீட்டிலிருந்தபடியே உண்ணவிரும்பினாலும் கவலையில்லை சுடச்சுட வீட்டிற்குவரும் பதப்படுத்தப்பட்ட உணவுகள். திரையரங்குகள் தங்கள் தோற்றத்தை நீங்கள் விரும்பும் புதிய வடிவத்திற்கு மாற்றிக்கொண்டுவிட்டன.ஒற்றை  அரங்க முறை ஒழிந்துவிட்ட்து. தேர்ந்தெடுக்க வசதியாக வெவ்வேறு நேரங்களில் திரையிடப்படும் பல திரைப்படங்களை ஒரே கட்டிடத்தில் நீங்கள் கண்டு மகிழலாம். இருக்கைகளை முன்பதிவு செய்வதும் இணையம் வழி எளிதாக முடியும். இடைவேளையில் பொறித்த சோளத்திற்கும் குளிர்பானத்திற்கும் நீங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணலாம். பிரபலங்கள் எல்லோருக்கும், சொந்தமாக மால்கள் இருக்கின்றன. உங்கள் சேமிப்புகளை உறுஞ்சுவதற்கென்றே ப்ரத்யேகமாய் வடிவமைக்கப்பட்டவை அவை. உலகின் சிறந்த தயாரிப்புகள் அனைத்தையும் தள்ளுபடி விலையில் நீங்கள் வாங்கலாம். எல்லா துணிக்கடைகளும் வருடம் முழுவதுமே தள்ளுபடி விலையில் துணிகளை வழங்குகின்றன. காய்கறிகளுக்கும், பழங்களுக்கும்கூட இலவச இணைப்புகள் அறிவிக்கப்படுகின்றன.                                         பில்டர்களும் ப்ரமோட்டர்களும் தமிழ்சமூகத்தை மிகமிகப் பாதுகாப்பான “அரண் சமூகமாக” ( Gated Community ) மாற்ற அல்லும் பகலும் அரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மிகச்சிறந்த உணவையும் உடன் வழங்கும் ஓய்வுபெற்றோருக்கான கட்டிடங்களும் தயார். 24 மணிநேர மருத்துவம்,  நடைபழக சற்றே சொரசொரப்பான நடைபாதை, ஓய்வெடுக்க அழகிய பூங்காக்கள் எல்லாம் கொண்ட அழகிய கட்டிடங்கள். பெற்றோரை அங்கு ஒப்படைத்துவிட்டு மகன்கள் பணத்தைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கலாம். சென்னையின் இதயப்பகுதியில் ஒரு சதுர அடி கட்டிடத்தின் விலை பதினோராயிரம் ரூபாய்கள். இதெற்கெல்லாம் நீங்கள் சம்பாதிக்க வேண்டாமா... கவலையே வேண்டாம் மிகச்சிறந்த கல்வியை வழங்க ஆயிரக்கணக்கான கல்வி நிலையங்கள் தங்கள் மாணவர்கள் எந்தெந்த நிறுவனங்களில் பணியாற்றுகிறார்கள் என்கிற பட்டியலோடு காத்திருக்கின்றன. இவ்வளவு சிறப்புகள்கொண்ட சென்னையை ஒரு முறை முழுவதுமாக அலசிப்பார்ப்பதற்கு முன்னால் இந்த வீடியோவை ஒரு முறை..ப்ளீஸ்.                                                                     

       http://www.youtube.com/watch?v=0qxPZ81C8VQ&noredirect=1                                                                                                                                          

ஞாயிறு, 20 மார்ச், 2011

உன்னைப்போல்...ஒருவர்?

 
ப்ளாக்குகளில்தான் எத்தனை விதம்? நகைச்சுவை, விமர்சனம், சினிமா, விளையாட்டு, கலாட்டா,கல்வி,அறிவியல் என்று இணையப் பதிவுலகம் மிக சுவாரஸ்யமாக இயங்கி வருகிறது. இதில் அதிகம் கவனம் கொள்வது மொக்கைஎனப்படும் நகைச்சுவை கலாட்டாக்கள் செய்கிற தளங்களாகத்தான் இருக்கக்கூடும். சீரியஸான அரசியல் கட்டுரை, மனதைப் பிழியும் ஒரு சிறுகதை, இதமாய் ஒரு கவிதை என்று வாசித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக நாம் தேடுவது இவைகளைத்தான். இந்த வகை ப்ளாக்குகளில் சீரியஸாகவும் இல்லாமல் காமெடியாகவும் இல்லாமல் கொஞ்சமாய், இல்லையில்லை கடுமையாய் மெனக்கெட்டு ஒரேமாதிரி தோற்றமுள்ள பிரபலங்களின் புகைப்படங்களை மட்டுமே ஒரு பதிவர் குழு- டோனி செபாஸ்டின், கார்த்திக் நாராயண், வினோத் ராமன் – உள்ளிட்ட 35 பேர் வெளியிடுகிறார்கள். மாதிரிக்கு சில..
       
                  ப்ரியங்கா, ரேச்சல் மடோ




கலைஞர், ஜெபா த ஹட்
 


                                                                                                                                                                                                                               
                          லெவிஸ் ஹாமில்டன், லோ பெகா, பாரக் ஒபாமா




அட... பரவால்லயே என்றால், நீங்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு ரீடைரக்ட் செய்யப்படுகிறீர்கள்..                                                     http://botharesame.blogspot.com/

புதன், 16 மார்ச், 2011

சுனாமி ..


 லகில் யார் எவ்வித துன்பம் அனுபவித்தாலும், அதில் தனக்கான ஆதாயம் எவ்வளவு  என்று கணக்கிடுகிற  மானிடமனதை என்னவென்று சொல்வது?  துயரம் நிரம்பிய சுனாமி காட்சிகளைப் பார்த்து, மனம் வெதும்பி, இரங்கி, தம்மிடமுள்ள எதாவது ஒரு பொருளைக் கொடுத்து அவர்களின் துக்கத்தில் பங்குகொள்வதன்மூலம், ஒரு மன சமாதானம் அடையலாம் என்று நீங்கள் உதவிக்கரம் நீட்டினால், அதை பறித்துக்கொண்டுபோக 1000 கொடுங்கரங்கள் சுனாமி ரிலீஃப்  ஃப்ண்ட்’ என்ற் பெயரில் காத்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. நாம் உதவுகிற தளம் சரியானதுதானா என்று தெரிந்துகொள்ள ஒரு தளம். உங்கள் உதவிக்காக..

                http://www.charitynavigator.org/index.cfm?bay=content.view&cpid=1221

எங்கேயோ பார்த்த மயக்கம்..


பாப்பாகே தேஹெய்ன் படா நாமு கரேகா... என்று தன்னுடைய கணக்கைத்துவங்கினார் உதித் நாராயண். நேப்பாளின் மைந்தர், தொடர்ந்து எல்லா இந்திய மொழிகளிலும் பிச்சு உதறினார். (அந்தந்த மொழியையும்) வசீகரமான குரல் அனாயாசமாய் உச்ச ஸ்தாயியை தொட்டுத்திரும்பும் நெளிவு, கீழ்க்குரலிலும் கவர்ச்சியாகப் பாடக்கூடிய அசத்தும் ஆளுமை.  காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் என்று தமிழில் எஸ்பிபியுடன் சேர்ந்து அவர் தொடங்கிய கணக்கு இன்றுவரை நீள்கிறது. காதல்பிசாசே பாட்டில் ‘பருவாயில்லைஎன்ற தவறான உச்சரிப்பைக்கூட தமிழுலகம் ‘பரவாயில்லைஎன்று மன்னித்து ஏற்றுக்கொண்ட்து.   

எப்போதும் ஜலதோஷம் பிடித்த மாதிரியான குரலில் ரசிகர்களை வசீகரிக்கிற வித்தை தெரிந்தவர். குலுவாலிலே என்ற இவரது இரண்டாவது பாடலில் நானென்ன கலைக்கிற ஆளா? என்று தமிழக மக்களைப்பார்த்து ரஜினிக்காக இவர் கேட்டார் அர்த்தம் புரியாமலேயே.. இவர் என்ன கேட்கிறார் என்பது மக்களுக்கு கொஞ்சம் லேட்டாக... ஆனாலும் புரிந்தது. ஏழையை தூக்கி எறியாதே, என்கிற இவரது அடுத்த பாடல் இலையை’ என்பதாக புரிந்து கொள்ளப்பட்டது இவருடைய தவறாக இருக்க முடியாது. ’சோனியா சோனியா’ மற்றும் ’கோயமுத்தூர் மாப்பிள்ளைக்கு’ பாடல்களில் கொஞ்சம் தெளிவான தமிழுக்கு இடம் பெயர்ந்தார். சோதனையாக வந்தது அய்யோ பத்திக்கிச்சு பாடல், ‘முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் தீயை தீயால் அணைப்போம் வா’  உண்மையிலேயே அவருக்கு தொண்டையில் சிக்கிய முள்தான். பிறகுதான் வந்தது பருவாயில்லைபாடல். காட்சியமைப்பும் இசைக்கோர்ப்பும் மிகச்சிறப்பான இடத்தை பாடல் அடைவதற்கு உதவின. பாடகர் பற்றிய எதிர் விமர்சனங்களெதுவுமின்றி வென்றது. 
உச்சரிப்புத்தவறெதுவுமின்றி கொக்கரக்கொக்கரக்கோமிக எளிதாக வசப்பட்ட்து. கண்ணுக்குள்ள கனவிருக்க நெஞ்சுக்குள்ள நெனப்பிருக்க யாருக்குள்ள யாரு இருக்கா தெரிஞ்சவங்க யாருமில்லஎன்று பாடியதை நாம் குழப்பமின்றி புரிந்து கொள்ளமுடிந்தது. அடுத்து கொஞ்சம் வேகமான பாடல். நீ தமிழ் பேசயிலே, அய்யோ. நான் அதைக் கேட்கையிலே, அய்யோ என்று அவரால் தைரியமாக கேட்க முடிந்தது அய்யோ அய்யோ பாடலில். கலகல எனவே பேசிடும் கண்கள் அய்யய்யோ.. சரியாகவே பாடினார். அடுத்து வந்த ஒரு வேகமான பாடல் என்னாத்த சொல்வேனுங்கோகுரலில் கொஞ்சல் எல்லாம் சேர்த்து நம்மை ஒரு மிரட்டு மிரட்டியிருப்பார். வாடியம்மா ஜக்கம்மா வந்து நில்லு பக்கம்மா என்று ஒரு மிரட்டல் அப்புறமாய் வந்தது.
தேன் தேன் தேன் என்று தேன் குரலில் ஒரு பாட்டு. முழுவதும் மூக்காலேயே பாட ஆரம்பித்தது இந்தப் பாடலுக்குப் பிறகுதான் என்று நினைக்கிறேன். அப்புறம் வா செல்லம் வா வா செல்லம் என்று ஒரு கொஞ்சல். வானவில்லில் துப்பட்டா வாங்கிவந்து வைக்கட்டா பவுர்ணமிக்கே பவுடர் போடட்டா என்று ஏக அலப்பறை. மிகச்சமீபமாய் வாம்மா துரையம்மா என்று கீழ்க்குரலில் ஒரு மெலடி தந்தார். கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும் செந்தமிழ் எங்கள் மொழியாகும்’  என்று தகராறாய் ஒரு தமிழ் பாட்டு.

இத்தனை பாட்டுகளிலும் சிறந்ததாய் எனக்குத் தோன்றுவது இரண்டு பாடல்கள், ஒன்று சஹானா சாரல் தூவுதோ, மற்றது எங்கேயோ பார்த்த மயக்கம். சஹானா வில் மிக நிதானமாய் காதலை வாசித்தவர், அதற்கு அப்புறம் வந்த எங்கேயோ பார்த்த மயக்கத்தில் குழைந்து கிறங்கி நம்மை எங்கேயொ இழுத்துச்செல்வார் பாருங்கள்.
                        
                         http://www.youtube.com/watch?v=OqwhUub2va0&feature=related

தமிழில் ஏன் வேறு பாடகர்களா இல்லை இப்படி தமிழைக் குதறி கொலை செய்பவர்களையெல்லாம் அழைத்து வந்து பாட வைக்கத்தான் வேண்டுமா என்று தமிழ் பாடல் ரசிகர்களின் கோபக்குரல் ஒலித்துக்கொண்டிருந்தது உண்மைதான். ஆனால் வெற்றிப்பட அடையாளமாக இவரின் குரல் பல படங்களில் செண்டிமெண்ட்ஆக வைக்கப்பட்ட்து. தமிழில்தான் இவரை இப்படி விமர்சிக்க முடியும் ஹிந்தி யில் இவருடைய பாடல்களுக்கு ஒரு உதாரணம், தமிழில் ‘பூங்காற்றிலேஎன்ற உயிரே படப் பாடலை ஹிந்தியில் இவர் படியிருப்பார்.. ஏ அஜ் நபி து பி கபிஎன்று. கேட்டுப்பாருங்கள்.
                         http://www.youtube.com/watch?v=qXFmaHfOf6k

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

ஒரு படம், ஒரே ஒரு படம் நீங்க நல்லா நடிச்சிருப்பீங்க...


வீட்டிற்கு யாராவது விருந்தினர் வந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவது யாராக இருக்கும்? அந்த வீட்டிலுள்ள வாண்டுகள், தவிர கொஞ்சம் வயதானவர்கள். நேரில் சென்று பார்க்கமுடியாத நிலையில் வீடு தேடி விருந்தினர் வந்ததனால் அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கக்கூடும். ஒரு வீடே மகிழ்ச்சியடைகிறதென்றால் வந்திருப்பவர் எல்லா வயதினரையும் மகிழ்விக்கக்கூடியவராக இருக்க வேண்டும். அப்படி ஒருவர் அன்று அழைக்கப்பட்டிருந்தார். வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. மேஜை நாற்காலிகள் வாடகைக்கு வாங்கப்பட்டிருந்த்து. ரேடியோ ஒன்று தவணை முறையில். வீடு முழுவதும் புது வண்ணத்தில் குளித்திருந்தது. கோட் சூட் அணிந்து ஆண்கள் தயாராக, பெண்களுக்காக இரவல் வாங்கப்பட்ட நகைகள் காத்திருந்தன. விருந்தினர் குறித்த நேரத்தில் வந்தார், அவர் ஒரு நடிகை. பெயர் பாமா. வீடு டி.எஸ்.பாலையாவினுடையது, அழைத்துவந்தது மேஜர், முத்துராமன், நாகேஷ் சகோதரர்கள். முதலில் முத்துராமன் வீட்டிற்கும் பின்பு மேஜரின் வீட்டிற்கும் (வீடென்றால் வீடில்லை, அறை) போய்வரும் பாமா அடுத்ததாகப்போவது நாகேஷின் அறை. ஒரு நடிகை திடீரென்று உங்கள் வீட்டிற்கு வந்தால் ( என்னதான் முன்னறிவிப்பு செய்திருந்தாலும்) எப்படியெல்லாம் தடுமாறுவீர்கள் என்பதை நாகேஷ் நடித்து நீங்கள் பார்க்க வேண்டும்.
இது பெரிய விஷயமில்லை.. அந்த நடிகையிடம் அவரும் அவர் மனைவியும் கேட்கிற கேள்விகள்..தமிழ் சினிமாவில் சினிமா மற்றும் நடிகை குறித்த முதல் பகடியாக இருந்திருக்கக்கூடும் இது என்று தோன்றுகிறது. அவர் மனைவி, பாமாவிடம் கேட்பார்.. சோகக்காட்சிகளில் அழுதுகொண்டே ஒடிவந்து  பொத்தென்று மெத்தையிலே விழுறீங்களே அது ஏன்? அதற்கு நாகேஷின் பதில்...தரையில விழுந்தா பல்லு பேந்திரும் அதான். அடுத்த கேள்வி விதவிதமா சிகையலங்காரம் பண்ணிக்கிறீங்களே அது எப்படி? அதற்கு பதிலளித்திருப்பார் பாருங்கள்..   இதெல்லாம்விட இடையிடையே ஒரு டயலாக் வரும்..ஒரு படம் ஒரே ஒரு படம் நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருப்பீங்க..அது என்ன படம்? இண்டெர்வெல்ல எல்லோரும் வெளிய போய் சந்தோஷமா இருப்பாங்களே!!!”   சான்ஸே இல்ல... நீங்களும் பாருங்க.
http://www.youtube.com/watch?v=uwaMnVc_cmg

வெள்ளி, 18 பிப்ரவரி, 2011

சும்மா இரு, சொல்லற..

சுட்டுவிடக்கூடும் சில சொற்கள்..
இதமாய் இதயம் தடவும், முகம் மலர்த்தி
புன்னகைக்கும், ‘திடும்’ மென
கோரமுகம் காட்டி மனது குலைக்கும்,
எந்த விளைவுகளுமற்று பொருளற்றதாயும் சில,
நிறுத்தவோ, சுருக்கிக் குறுக்கிவிடவோ
முடியாததாயும்  தொடர்கின்றன பல வேளைகளில்
சொற்கள்... சிக்கல்களற்ற எளிமையோடு, 
வியக்கும்படியான உயரத்தில்
எப்போதும், மௌனம்.